காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 8
பாகம் எட்டு
============
(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. ஒரு கிராமத்தில் தங்கி விட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. அடுத்தடுத்த போன் கால்களால் அசந்து போயிருந்தாள் சாருமதி.. அடுத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்)
தொடர்ந்து கால் மேல் கால். அட்டன்ட் செய்தே துவண்டு போய்விட்டாள் சாருமதி. பல கால்கள் பாராட்ட வந்தாலும் மிரட்டல் கால்களுக்கும் குறைவில்லை. இதெல்லாம் எதிர்பார்த்துத்தானே இந்த புரஜக்டில் இறங்கினாள் சாருமதி.
இளமதி டிவியில் ஒளிபரப்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட எங்கும் இதே செய்தியானது.
அடுத்து கொஞ்சம் இடைவெளி விட்டு.. தர்ஷினி அனுப்பியிருந்த தீயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் பற்றிய வீடியோவை இளமதி டிவி ஒளிபரப்ப.. அதில் பாவமாய் பேசிய ஷாலினியின் குரல் பார்த்தவர்களை உலுக்கிப் போட்டது.
ப்ளூகிராஸிலிருந்து சாருமதிக்கு கால் வந்தது.
இளமதி டிவியின் செய்தி சேகரிப்போர் எங்கு தங்கி உள்ளார்கள் என அவர்கள் கேட்க, அதன் விபரங்களை சாருமதி கொடுத்தாள்.
அடுத்த நிமிடம் ஷாலினிக்கு தொலைபேசி போனது.
"வணக்கம் மேம்.. நான் ப்ளுகிராஸ்ல இருந்து நீலாவதி பேசறேன்.."
"எஸ் சொல்லுங்க மேம்.. என்ன விஷயம்?"
"நீங்க அடுத்த முறை காட்டுக்குள்ள போகும் போது எங்க டீமும் உங்க கூட வருவாங்க.. தீக்காயம் பட்ட விலங்குகளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பாங்க.. ஓகேவா"
"வாவ்.. ரொம்ப நல்ல விஷயம்.. நிச்சயமா வரச்சொல்லுங்க.. வேற எதுனா டீட்டெயில் வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க மேம்.."
"உங்க டீவில வந்த உங்களோட வீடியோ செம வைரலாப் போய்க்கிட்டு இருக்கு. கவர்மென்ட எல்லா டிவிச்சேனலும் கழுவிக் கழுவி ஊத்தறாங்க"
"ஓ.. நாங்களும் அத கவனிச்சிட்டுத்தான் மேம் இருக்கோம்!!!"
"ஓ அப்படியா.. எங்க டீம் வந்து விலங்குகளுக்கு முடிஞ்ச அளவு சிகிச்சை கொடுத்து, முதலுதவி செய்து காப்பாத்த முயற்சிப்பாங்க.."
"நல்லதுங்க.. ஆனா இப்படி தீயில கருகி வீணா அழிஞ்சு போற மரங்கள யாருங்க காப்பாத்தப்போறாங்க..!? யாரும் விதை போடாம, உரம் போடாம, தண்ணி ஊத்தாம.. இத்தனை மழை வெள்ளம் புயல் வெயில்னு எல்லாத்தையும் எதிர்த்து பிரமாண்டமா வளர்ந்து நிக்கற மரமெல்லாம் கருகி கரிக்கட்டையா, சாம்பலா ஆகறதப் பார்க்கும் போது ரொம்ப வேதனையா இருக்குங்க..."
"நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம். சீக்கிரம் இந்த தீய அணைக்க எல்லாரும் நடவடிக்கை எடுப்பாங்கனு நம்பலாம்.. இப்போதைக்கு என்னால இவ்ளோ தாங்க சொல்ல முடியும்..."
"சரிங்க.. எங்க மேம் கால் பண்றாங்க.. நீங்க எதுனா தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிடறீங்களா!"
"ஓக்கே.. ஓக்கே.. நான் வைக்கறேன்.."
மிக மிக உற்சாகமாக பேசினாள் சாருமதி.
"சூப்பர் ஷாலினி.. தர்ஷினி.. மேகலா.. சரியான இடத்த தேர்ந்தெடுத்து வீடியோ எடுத்திருக்கீங்க.. இன்னும் இன்னும் வீடியோ எடுத்து அனுப்பிட்டே இருங்க.."
"ஸ்யூர் மேம்.. நாளைக்கு மட்டும் எத்தனை வீடியோ உங்களுக்கு வருதுனு பாருங்க.. இப்பத்தான் ப்ளூகிராஸ்ல இருந்து போன் பண்ணாங்க.. நாளைக்கு எங்க கூட அவங்க டீம் வந்து, கண்ணுல சிக்கர காயம்பட்ட விலங்களுக்கு சிகிச்சை அளிக்கப் போறதா சொன்னாங்க.."
"ஓ.. அப்படியா.. எங்கிட்ட தான் உங்க நம்பர் கேட்டாங்க.. நான் தான் கொடுத்தேன்.."
"எஸ் மேம்.. அவங்க கால் பண்ணும் போதே இதப் புரிஞ்சுக்கிட்டேன்"
"அரசாங்கத்துல இருந்து எனக்கு மிரட்டல் வந்துச்சு.. நாங்க பொய் சொல்லலையே.. உண்மை தானே சொல்றோம்னு எதோ பேசி சமாளிச்சேன்.."
"அதெல்லாம் உங்களுக்கு அத்துப்படி மேம்.. நீங்க திறமையா சமாளிப்பிங்கனு எங்களுக்குத் தெரியும்"
"ம்.. ஒன்னு ஆரம்பச்சிருக்கோம்.. இதனால யாரு யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கப் போகுதுனு மட்டும் பார்ப்போம்.. போகப் போக ஒவ்வொன்னா பார்க்கத்தானே போறோம்"
"எஸ் மேம்.. பார்க்கலாம்.."
"சரி.. பாத்து பத்தரமா இருந்துக்கோங்க.. தொடர்ந்து வாட்ஸ் அப்ல அப்டேட்ஸ் பண்ணிட்டே இருங்க"
"ஒகே மேம்.. ஸ்யூர்.. மேம் இன்னொரு விஷயம்.. நாங்க குடியிருக்கற வீட்டு ஓனர் பையன் வருண்னு ஒருத்தன். அவனும் எங்க கூட காட்டுக்கு வர்றான்.. எங்களுக்கு ஒத்தாசையா, பாதுகாப்பா இருக்கான்.. உங்ககிட்ட இந்த விஷயத்தச் சொல்லனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன்.."
"ஓ.. சூப்பர்.. நல்ல விஷயம்... அந்தப் பையனுக்கு என்னோட அப்ரிஷியேசனச் சொல்லிடுங்க"
"ஓகே மேம்.. பாய்"
அன்றைய இரவு நிம்மதியான தூக்கம் வந்தது. இரவுச்சாப்பாட்டை பிருந்தா கொண்டு வந்திருந்தாள். திருப்தியாய் சாப்பிட்டு, திருப்தியாய் வேலை பார்த்து இருந்ததால்.. திருப்தியான தூக்கம் கண்களைத் தழுவிக் கொண்டது.
அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தயாராயினர். சிறிது நேரத்திலேயே ப்ளூகிராஸ் எனச் சொல்லி ஒரு பெண் வந்தாள்..
"ஹாய்"
"ஹாய்.. நீங்க!"
"நான் நீலாவதி.. ப்ளூகிராஸ்"
"அட.. நேத்து பேசினீங்களே..! ஒரு டீம் வருவாங்கனு சொன்னீங்க, ஆனா நீங்களே வர்றதா சொல்லலையே..!"
"ம்.. சொல்லலை... இப்ப வந்துட்டேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ ஆல்.. செம... கவர்மென்டையே கதிகலங்க வச்சிட்டீங்க!"
"ம்.. சரி வாங்க போலாம்.."
வெளியே தயாராகி வருண் வந்திருந்தான்.
ப்ளூகிராஸைச் சேர்ந்த பத்து, பதினைந்து பேர் வந்திருந்தனர், அவர்களுக்கான பிரத்தியேக வேனில். அந்த வேன் காட்டுக்குள் எவ்வளவு தூரம் போகும் என்று தெரியாது.
எல்லார் கையிலும் வாக்கி டாக்கி இருந்தது. அது போட்ட இரைச்சல் காதைத் துளைத்தது.
அந்த மலையுச்சிக்குப் போகும் வழியிலேயே.. இரண்டு மூன்று விலங்குகள் காயங்களுடன் அவர்கள் கண்ணில் பட.. ப்ளூகிராஸ் வேன் வரை அவற்றை தூக்கிச் சென்று அவற்றின் மருத்துவம் பார்க்கப்பட்டது.
விலங்குகளின் நிகழ்வுகளையும் தன் வயிற்றில் நிரப்பிக்கொண்டது தர்ஷினியின் கேமரா.
இவர்களுடன் பேசிக் கொண்டே வந்தாள் நீலாவதி. காயம் பட்ட விலங்குகள் கண்ணில் படும் போதெல்லாம் அதன் இடம், என்ன விலங்கு போன்ற விபரங்களை வாக்கி டாக்கி மூலம் அவர்களது சக நண்பர்களுக்கு கடத்திக்கொண்டே வந்தாள். உடனே அவர்களது டீம் ஆட்கள் வந்து அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மலையின் உச்சியை அடைந்து இப்போது தீயின் பரவலைப் பார்த்த பொழுது.. நேற்றைய ராத்திரியில் மட்டும் மிக அதிக தொலைவு அது பரவி இருந்ததாகப் பட்டது. இரண்டு மூன்று ஹெலிகாப்டர்களில் இருந்து தண்ணீர் அங்கே கொட்டப்படுவது வீடியோவில் தெரிந்தது.
இதற்குள் வருண் தொலைபேசி மூலம் அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அங்கு வந்து சேர்ந்தனர்.
இவர்களிடம் சொல்லி விட்டு அவன் 'ஒரு வேலையிருக்கு' எனக் கூறி அவனது நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு எங்கோ சென்றான்.
(தொடரும்)
அ.வேளாங்கண்ணி