காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 9

காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 9

பாகம் ஒன்பது
==============

(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. ஒரு கிராமத்தில் தங்கி விட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. அடுத்தடுத்த போன் கால்களால் அசந்து போயிருந்தாள் சாருமதி.. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. அவர்கள் விலங்குகளுக்கான உதவிகளை செய்தனர். கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். அவர்களுடன் கிளம்பி எங்கோ சென்றான். அடுத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்)

இளமதி டிவியின் காட்டுத்தீ வீடியோக்கள் எங்கெங்கும் வைரலானது. பலரும் அரசாங்கத்தை திட்ட, அரசாங்கமும் தனது தவற்றை உணர்ந்தது. அவர்கள் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாருமதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

சமூகத்தின் நல்ல அந்தஸ்த்தில் உள்ள விஐபிக்கள் பலர் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து காட்டுத்தீயின் நிலவரத்தைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டிருந்தனர்.

இளமதி டிவியில் காட்டுத்தீ பற்றியும், இதுவரை உலகில் பிடித்த காட்டுத்தீக்கள், அதற்கான காரணங்கள், மிகப்பெரிய காட்டுத்தீ, அதிக பாதிப்பை ஏற்படுத்திய காட்டுத்தீ, காட்டுத்தீயாய் பாதிப்படைந்த விலங்குகள், அதனால் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரம் இழந்த இனங்கள், பறிபோன உயிர்கள் என தொடர்ந்து அலசி ஆராய்ந்து வீடியோக்களாக போட்டுக் கொண்டே இருந்தனர்.

வீட்டிலுள்ள சிறார்க்கூட்டம் கூட.. "காட்டுத்தீயா?" "அப்படீனா என்னம்மா?" எனக் கேட்கும் அளவுக்கு இச்செய்தி பகிரப்பட்டது.

பத்திரிக்கைகள் சும்மா இருக்குமா? அவையும் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளின.

இதுவரை எரிந்துள்ள காடுகளின் பரப்பு. உடனே கட்டுப்படுத்தாவிட்டால் எரியப்போகும் காடுகளின் பரப்பு. அதனால் பாதிப்படையப் போகும் கிராமங்கள், இப்போது கிராம மக்களின் மனவோட்டம் என பக்கத்து பக்கம் தீ, தீ, தீ.. தான்.. வெள்ளைத்தாள் கூட இத்தகைய தீச்செய்திகளால் மஞ்சள் தாளாக மாறிவிட்டதோ என்பதாய் காணப்பட்டது.

தனது கல்லூரித்தோழிக்கு போன் செய்து தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டாள் சாருமதி.

"ரொம்ப ரொம்ப தேங்க்யூடி.. உன்னால தான் இதுல இப்படி நாங்க இறங்க முடிஞ்சுது.."

"ம்.. ரொம்ப புகழாத.. உங்க டீமால இதச் சிறப்பா செய்ய முடியும்னு எனக்கு நல்லாத் தெரியும்.. ஏன்னா அவங்க முன்னமே சாதிச்சவங்க... இந்த விஷயத்தால நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான். இது எப்படி உருவானது? யாராவது தெரிஞ்சே பத்தவச்சாங்களா? இப்படிங்கற ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம். இனி ஒரு முறை இப்படி அரசாங்கம் நடந்துக்காது. நம்ம யாரோ எங்கிருந்தோ கவனிச்சிட்டே இருக்காங்கனு அவங்களுக்கு இப்போ நல்லா புரிஞ்சிருக்கும். சீக்கிரமா தீ அணைக்கப்படும் நாளுக்காக காத்திருக்கேன்டி"

"எஸ்.. நானும் அதுக்குத்தான் வெயிட்டிங்.. வருண்னு ஒரு பையன்.. அந்த வனமேடு கிராமத்தச் சேர்ந்தவன். அவனும் அவனோட நண்பர்கள் பலரும்.. இந்த தீயை அணைக்க படாத பாடு படறாங்கனு தர்ஷினி சொன்னா.. எப்படியோ சீக்கிரமா தீ அணைஞ்சா சரி..."

"பரவால்ல.. இந்தக் கால இளைஞர்களும் சமூக சேவைல ஈடுபாடு காட்டறது ரொம்ப நல்ல விஷயம்.. சரி எப்பவும் போல அப்டேட் கொடுத்துட்டே இரு.. பை டி"

"பை", எனச்சொல்லி புன்னகை முகத்துடன் போனை வைத்தாள் சாருமதி.

அப்போது தான் மேகலாவிடம் இருந்து ஒரு அதிர்ச்சி தரும் செய்தி அவளுக்கு வந்து சேர்ந்தது.

(தொடரும்)

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Jan-22, 10:59 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 44

மேலே