காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 7

காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 7

பாகம் ஏழு
==========

(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. வழியில் ஒரு புதுப்பிரச்சனை. அப்பிரச்சனையிலிருந்து வெளியேறி மிக மகிழ்ச்சியான நினைவுகளோடு தொடர்கிறது அவர்களது பயணம். ஒரு கிராமத்தில் தங்கி விட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். வழியிலேயே காட்டுத்தீக்கான அறிகுறிகள் தெரிந்தது... இவர்கள் காட்டுத்தீயைக் கண்டறிந்தார்களா இல்லையா..? இவர்களது வீடியோ இளமதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதா? இல்லையா? அடுத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்)

பயணம் தொடர்ந்த வேளை நெருப்பால் எழுந்த நெடி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போனது.

"கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால், டிரக்கிங் போன சில காலேஜ் பசங்க ஒரு காட்டுத்தீயில மாட்டிக்கிட்டு முழுசா எரிஞ்சு போனாங்களே.. ஞாபகம் இருக்கா?", எனக் கேட்டாள் ஷாலினி.

"ம்.. என்ன ஒரு பயங்கரமான செய்தி.. அது என்னை எப்படி தாக்குச்சு தெரியுமா? அந்த சம்பவத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அதே மலைல... எங்க காலேஜ் என்சிசி சார்பா நாங்க மொத்தம் அம்பது பேர் டிரக்கிங் போனோம்.. அந்தக் காட்டையே ரொம்ப ரசிச்சு.. ரசிச்சு.. சிரிச்சு சிரிச்சு.. அத்தனை போட்டோ எடுத்து.. ஆகா.. மறக்கமுடியாத ஒரு பயணமா அது அமைஞ்சுச்சு.. ஆனா அந்த காட்டுத்தீ விபத்த கேட்டதுல இருந்து மனசு பாடா பட்டிடுச்சு..", என்ற மிகவும் அனுதாபப் பட்டுச் சொன்னாள் தர்ஷினி.

"ஆமா.. அது ஒரு மிக மோசமான நிகழ்வு"

"காட்டுக்குள்ள இங்கேயெல்லாம் எப்படி வழி அமைஞ்சு இருக்கு?", என்று கேள்வி எழுப்பிய மேகலாவிற்கு..

"ப்ராஸ்ட் டிபார்ட்மென்ட் கார்லாம் அடிக்கடி உள்ள சுத்துவாங்க இல்ல.. அதான் தானா ஒரு ரோடு மாதிரி இருக்கு.. இன்னும் எவ்வளவு தூரத்துக்கு இருக்கும்னு தெரியல..", என்றான் வருண்.

"இங்க பக்கத்துல எதாவது மேடான பகுதி இருக்கா வருண்?"

"ம்... இந்த பகுதியில எல்லாம் அலைஞ்சிருக்கேன்.. கொஞ்சம் இந்தப்பக்கமா போனா இருக்கும்னு நினைக்கறேன்"

"சரி.. நாம அந்த திசைல போவோம். அங்க போனா எந்த திசையில எந்த இடத்துல தீ... இல்ல தீயின் போக்கு இருக்குனு தெரிஞ்சுக்க முடியும்..."

"ஆமா.. மேகலா.. வருண் சொல்ற பக்கமாவே நீ கார ஓட்டு"

கார் ஒரு மலையைத் தேடிப் புறப்பட்டது.

அடர்ந்து படர்ந்திருந்த பல செடி கொடிகளால், அவர்களால் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்ல முடிந்தது.

அப்போது எதோ உறுமல் சத்தம் கேட்டதும்.. வாயில் கை வைத்து 'கொஞ்சம் அமைதியா இருங்க' என சைகையால் சொன்னான் வருண்.

காரை மெதுவாக அணைத்தாள் மேகலா. உறுமல் சத்தம் மெல்ல மெல்ல அருகில் வருவதாகத் தோன்றியது.

அப்புறம் அது ஒரு உறுமல் அல்ல, பல உறுமல் எனப் புரிந்தது.

வரிசையாக ஏழெட்டுச் சிங்கங்கள் அவர்களது காரை நோக்கி வந்து கொண்டிருந்தன. நால்வரின் இதயத்துடிப்பும் ராக்கெட் வேகமெடுத்தது.

அவற்றை இன்னும் தீயின் தாக்கம் ஆக்கிரமிக்கவில்லை போல. வந்தவை காரைச் சுற்றிச் சுற்றி வந்தன. மெல்ல மோதிப்பார்த்தன. இரண்டு மூன்று முறை கர்ஜித்தன. பிறகு அவைகளாகவே தங்கள் வழியில் செல்ல ஆரம்பித்தன.

அவை சென்றும் ஒரு பத்து நிமிடம் வரை யாருமே பேசவில்லை. பிறகு தான்.. இதயத்துடிப்பு சீரானதாகத் தோன்றிய பிறகு தான்.. குரலே வெளியே வந்தது.

"என்னடி.. இவ்ளோ பயங்கரமா இருக்கு"

"நாம பார்த்தது எலி இல்ல.. சிங்கம்.. சிங்கம்னா இப்படித்தான் பிரமாண்டமா இருக்கும்"

"நாம காருக்குள்ள பத்திரமா இருக்கோம்னு எனக்குத் தோணவேயில்ல... ரெண்டு சிங்கங்கள் காரு மேல ஏறி ஒரு ஜம்ப் பண்ணா போதும் கார் நசுங்கியிருக்கும்"

"நான் அந்த சிங்கங்களப் பார்த்து 'பார்த்திருக்கியா பார்த்திருக்கியா.. பார்த்திருக்கியா.. நான் ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா'னு கத்தலாம்னு இருந்தேன்.. ஆனா வெறும் காத்து தான் வந்துச்சு..", என்று சொன்ன வருணின் வசனத்திற்கு அனைவருமே மனம் விட்டுச் சிரித்தனர்.

"என்ன வருண்.. செமயா பேசற.. ஆனா ரொம்ப நல்ல புள்ளையாட்டம் அமைதியா வர்ற.. எப்படியோ சிங்கங்கங்கங்கள் போயிடுச்சு..."

"என்னது சிங்கங்கங்கங்களா?"

"ஆமாண்டி.. பல சிங்கம்ஸ் இருந்துச்சுல்ல.. அதான் அப்படி சொன்னேன்.. எதோ நல்ல மூடு போல.. வந்துச்சுங்க... சுத்துச்சுங்க... போயிருச்சுங்க"

"நல்ல மூடெல்லாம் இல்ல.. ஹெயியா இப்பத்தான் ஒரு கட்டு கட்டியிருக்கணும்... அதான் அமைதியா போயிருச்சுங்க.. சரி.. மறுபடியும் பயத்த தூக்கிப் போட்டுட்டு, பயணத்த தொடர்வோம்", எனச் சொன்ன மேகலா.. காரை ஸ்டார்ட் செய்து மெதுவாகவே இயக்க ஆரம்பித்தாள்.

அந்த மலையின் அருகில் சென்றதும் காரை ஓரிடத்தில் பார்க் செய்தாள்.

தேவையானவற்றை எடுத்துக் கொண்டே அம்மலைமீது ஏற ஆரம்பித்தனர். அவ்வளவு ஈஸியாக இல்லை அந்த மலையேற்றம்.

ஏற்கனவே மலையேறும் அனுபவம் பெற்றிருந்த தர்ஷினியும் தடுமாறினாள்.

மிக நீண்ட நேரத்திற்குப் பின், பல தடுமாற்றத்திற்குப்பின் அவர்கள் மலை உச்சியை அடைந்தனர். இப்போது பரந்து விரிந்த வனம் அவர்கள் கண்ணுக்கு ஓரளவு தெரிந்தது.

தர்ஷினி கேமராவை எடுத்தாள். நன்றாக ஷூம் செய்து ஒரு நான்கு நிமிட நேரத்திற்கு ஒரு வீடியோ எடுத்தாள். பிறகு அதனை அனைவருக்கும் போட்டுக் காட்டினாள்.

தர்ஷினி எடுத்த வீடியோவைப் பார்த்ததும் சில விஷயங்கள் இவர்களுக்குப் பிடிபட ஆரம்பித்தன..

இவர்கள் நிற்கும் இடத்திலிருந்து மிகுந்த தொலைவில் புகைமூட்டம் காணப்பட்டது. அங்கு தீ பற்றியிருப்பது நன்றாகப் புரிந்தது. ஆனால் அது எந்த அளவு எந்த திசையில் பரவுகிறது என்பதைச் சரியாக் கணிக்க முடியவில்லை.

"ஒன்னு பண்ணு தர்ஷினி.. அந்த இடத்த மையமா வச்சு.. இதே மாதிரி ஷூம் பண்ணி இன்னும் ரெண்டு மூணு வீடியோ எடு.. அதுக்குப் பக்கத்துல எங்கேயாவது கொஞ்சம் பாதுகாப்பான மேட்டுப்பகுதி இருக்கானு பார்க்கலாம். அப்பறம் என்ன பண்ணலாம்னு முடிவெடுக்கலாம்"

"எஸ் மேகலா.. எனக்கும் அதே தான் தோணுச்சு...", என்று சொல்லிவிட்டு தனது ஷீட்டிங்கில் மும்முரமானாள் தர்ஷினி.

அதே நேரம் தனது மொபைலால் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான் வருண்.

அப்போது வானத்திலிருந்து நல்ல சத்தம் கேட்டது.

சிறிது நேரத்தில் அவர்களது தலைக்கு மேல் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது.

"அப்ப.. நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான்.. அரசாங்கம் தீய அணைக்கற முயற்சியில இறங்கிட்டாங்க.. ஆனா ரகசியமா.. அது தான் ஏன்னு தெரியல.. சொல்லிட்டே பண்ணலாம்.. சரி நாம எடுக்கப்போற வீடியோவால இந்த நியூஸ் வெளிய தெரியத்தானே போகுது. அதுக்கப்பறம் என்ன நடக்குதுனு பார்ப்போம்...", என்றான் வருண்.

தலையாட்டியபடியே அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர் ஷாலினியும், மேகலாவும்.

இதற்குள் தர்ஷினி எடுத்த அடுத்த வீடியோவை அனைவரும் பார்க்க.. அதிலிருந்த புகைமூட்டத்திற்கு மிக அருகில் ஒரு மலை மாதிரி காணப்பட்டது.

"அதோ பாரு.. அங்க போயிட்டா போதும்.. நமக்கு ஒரு தெளிவான பிக்சர் கிடைக்கும்.. சரியா?"

"ஆமாண்டி.. அது இங்க இருந்து எவ்ளோ தூரம்னு ஒரு ஐடியா வச்சுக்க.. எந்த திசையில இருக்குனு நோட் பண்ணிக்க.. இந்த மலையவிட்டு இறங்கி அங்க போக முயற்சிக்கலாம். ஆனா காரெல்லாம் அங்க நிச்சயமா போகாது. நடந்து தான் போகணும்.. வழியில விலங்குகளால கூட நமக்கு ஆபத்து ஏற்படலாம்.. ரொம்ப கவனமா செய்ய வேண்டிய வேலை இது"

"கரெக்ட்.. அப்ப வாங்க இறங்கலாம்..", என்று சொல்லியவாறே நால்வரும் கிடுகிடுவென இறங்க ஆரம்பித்தனர்.

அவர்கள் வீடியோவில் கண்ட மலையை அடைய இன்னும் அதிக நேரம் பிடித்தது. அதற்குள் அனைவருக்கும் பசியெடுக்க கொண்டு வந்திருந்த பிஸ்கெட், வாழைப்பழம் இதற்கு கை கொடுத்தது. தண்ணீர் பாட்டிலும் வெகு வேகமாக எடையிழக்க ஆரம்பித்தது.

வழியில் சில பழங்குடி மக்கள் கண்ணில் பட்டனர். அவர்கள் விழியெல்லாம் ஒரு வித பயம் இருந்ததை இவர்களால் உணர முடிந்தது.

அந்த மலையை அடைந்ததும்.. மீண்டும் ஒரு சிரமமான மலையேற்றம். பாதை கரடு முரடாக இருந்தது. காட்டின் சத்தம் காதை அடைத்தது. பறவைக்கூட்டமெல்லாம் திக்குத் தெரியாமல் தடுமாறி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததைக் கண்ட தர்ஷினி.. நின்று நின்று இவற்றையெல்லாம் கேமராவில் சேமித்தாள்.

உச்சியை அடைந்ததும் மீண்டும் அந்த புகைமூட்டத்தினைச் சார்ந்த பகுதிகளை கேமராவுக்குள் அடைத்தாள்.
இப்போது ஒரு தெளிவு பிறந்தது.

இதுவரை தீ சில பல கிலோமீட்டர் காடுகளை அழித்திருக்கலாம். அது மத்தியிலிருந்து நான்கு அல்லது எட்டு திசைகளிலும் அப்படியே பரவிக் கொண்டிருப்பதாய் தோன்றியது.

இந்த தெளிவு கிடைத்ததும்.. தங்களது புரஜக்டின் முதல் வீடியோவை பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

பின் பாதுகாப்பாய் இறங்கி.. காரை நோக்கி நடந்து வந்து.. அவர்கள் தங்கியிருந்த வனமேட்டை மாலை வேளையில் அடைந்தனர்.

உடனே வீடியோவை எடிட் செய்து... ஷாலினியின் பிண்ணனிக் குரலுடன்... சாருமதிக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த சில மணித்துளிகளில் பற்றிக்கொண்டது அடுத்த நெருப்பு...

"என்ன தமிழகக் காடுகளில் கட்டுப்படுத்தமுடியா காட்டுத்தீயா?"

"அணைக்கமுடியாமல் தவிக்கும் இல்லை மூடி மறைக்கும் அரசாங்கம்"

"காடுகளுக்குச் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் ஆபத்தா?"

"தீ.. தீ.. காட்டுத்தீ... அணைக்க முடியுமா? இல்லை இது அணையா நெருப்பா?"

அடுத்தடுத்த செய்திகளில் அதிர்ந்தது தமிழ்நாடு..

சாருமதியை நோக்கிய வரிசையாக வர ஆரம்பித்தன மொபைல் கால்கள்.

(தொடரும்)

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Jan-22, 10:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 51

மேலே