பேரின்ப மான பெரும்பொருள் காணாமல் வீணே கழிதல் மாணா மயக்கே மதி - ஞானம், தருமதீபிகை 948

நேரிசை வெண்பா

பேரின்ப மான பெரும்பொருள் உன்னிடமே
ஓரின்ப மாக உறைந்திருந்தும் - நேரின்பம்
காணாமல் வீணே கழிதல் இழிவான
மாணா மயக்கே மதி. 948

- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அதிசயமான பேரின்பம் நிறைந்த பெரிய பரம்பொருள் உன்னிடமே இன்பமாய் உறைந்துள்ளது; இருந்தும் அதனை நீ உரிமையோடு உணராமல் வறிதே கழிந்தொழிவது இழிந்த மதி மயக்கமே; அந்த மருள் ஒழிந்து தெருள் நிலை தெளிந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிர் வாழ்வு துயரச் சுழல்களோடு தோய்ந்து வருகிறது. எவ்வழியும் அச்சமும் திகில்களுமே நிறைந்துள்ளமையால் இவர்கள் யாண்டும் எச்சரிக்கையாய் வாழ்ந்து வர நேர்ந்துள்ளனர். புற நோக்கு, அக நோக்கு என இருவகைக் காட்சிகள் வாழ்வில் மருவி எவ்வகையும் செவ்வையாய்ப் பரவியுள்ளன.

பொறிவழிகளிலேயே வெறிகொண்டு வெளியுலகை நோக்கி அலைந்து திரிபவர் தமது உயிர் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை இழந்து விடுகின்றனர். அந்த வாழ்வு வைய மையலோடு வளர்ந்து வருதலால் வெய்ய துயரங்களே விரிந்து வருகின்றன.

நெறி நியமங்களோடு ஒழுகி அகநோக்குடையராய் ஆன்ம நிலையைக் கருதி வருபவர் மேன்மையான மகிமைகளை மேவி வருகின்றனர். முன்னது மடமை வாழ்வாயிழிந்து கழிகிறது; பின்னது ஞான வாழ்வாய் உயர்ந்து திகழ்கிறது.

உண்மை உணர்வு உதயம் ஆயபோது உயிருக்கும் பரத்துக்கும் உள்ள உறவுரிமைகள் தெரிய வரவே அந்தப் பரம் பொருளை நினைந்துருகி ஞானிகள் நெஞ்சம் கரைகின்றனர். தேக சம்பந்தமான பாசபந்தங்கள் நீங்கி ஈசனேடு சம்பந்தமாய் எதிரே உரிமையாய் வாசி பேச நேர்கின்றனர்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
..ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
..மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
..திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
..இனியுன்னை யென்னிரக் கேனே. 5

தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
..சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
..யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
..திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
..யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே. 10

- 22 கோயில் திருப்பதிகம், எட்டாம் திருமுறை, திருவாசகம்

சீவன் சிவமாய்த் திகழ்ந்துள்ள நிலையை இவை சுவையாய் உணர்த்தியுள்ளன. பேரன்பு சுரந்து பேரின்ப நிலையில் பெருகி வந்துள்ள மொழிகளில் ஞான ஒளிகள் வீசி நிற்கின்றன. 'ஈசா! நீயும் நானும் ஒரு ஒப்பந்த வியாபாரம் செய்தோம்; அந்தப் பண்டமாற்றில் நான் அரிய பெரிய அதிசய செல்வத்தை எய்தி ஆனந்தம் அடைந்துள்ளேன்; நீ யாதொரு ஊதியமும் பெறாமல் ஏமாந்து போனாய்! ’ என்று உல்லாச வினோதமாய் மாணிக்கவாசகர் ஈசனோடு பேசியிருக்கும் வாசகங்களை யோசனையோடு ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

தந்தது உன்னை, கொண்டது என்னை, சங்கரா! ஆர் சதுரர்?

இந்தக் கேள்வி எவ்வளவு விநயம்! எத்துணை நுட்பம்! எத்தனை விசித்திரம்! எனது சீவபோதத்தை எடுத்துக் கொண்டு உனது சிவ போகத்தை எனக்குக் கொடுத்தருளினாய்! நான் ஆனந்தக் கடலில் மூழ்கினேன்; என்னால் நீ என்ன அடைந்தாய்? என்று இறைவனை நோக்கி உள்ளம் உருகி யிருக்கிறார்.

சீவாத்துமாவும் பரமாத்துமாவும் ஒன்றாய்க் கலந்து மகிழும் காட்சியை இங்கே கண்டு மகிழ்கின்றோம். மனம் புனிதமாய் உருகினால் மனிதன் தெய்வமாகிறான். அது மாசு படிந்து மலினமடைந்தால் அவன் நீசனாயிழிந்து ஒழிகிறான்.

சித்தசுத்தி வாய்ந்த அளவு மெய்யுணர்வு மேன்மையாய்த் தோன்றவே பொய்ப்பொருள்களை அருவருத்து வெறுத்து மெய்ப்பொருளை நினைந்து உருகுகின்றார்; அந்த உருக்கத்தில் உரைகள் உணர்ச்சிப் பெருக்கோடு ஓடி வருகின்றன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் காய் மா அரையடிக்கு)

படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
..பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீ எடுத்துக் கொண்டுன்
..உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
..மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
..நன்மணியே பொன்மணியே நடராச மணியே. 3

- 32. பிரியேன் என்றல், ஆறாம் திருமுறை, அருட்பா

என்னுடைய உடல் பொருள் ஆவி யாவும் நீ எடுத்துக் கொண்டு உன்னுடைய நீர்மைகளை எனக்கு அளித்தருள் என்று இறைவனை நோக்கி இராமலிங்க அடிகள் இவ்வாறு வேண்டி யிருக்கிறார். பரமனேடு சீவனுக்கு உள்ள தொடர்புகளை உணர்ந்தவர் ஞானிகள் ஆகி, அவனோடு ஏகமாய்க் கலந்து எவ்வழியும் திவ்விய சுகமாயவர் இன்புறுகின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

யானும் தானாய் ஒழிந்தானை
..யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
..ஆகிப் பணைத்த தனிமுதலை
தேனும் பாலும் கன்னலும்
..அமுதும் ஆகித் தித்தித்துயென்
ஊனில் உயிரில் உணர்வினில்
..நின்ற ஒன்றை உணர்ந்தேனே. 4

- நம்மாழ்வார் திருவாய் மொழி, நான்காம் ஆயிரம், நாலாயிர திவ்ய பிரபந்தம்

நம்மாழ்வார் இறைவனோடு தோய்ந்து பேரின்ப நிலையில் திளைத்துள்ளமையை இது உணர்த்தியுள்ளது. மருள் நீங்கித் தெருள் அடைந்த பொழுது உயிர் பரமாயுயர்ந்து உய்தி பெற்று பேரானந்த நிலையில் பெருகி மகிழ்கிறது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வான்பொரு ளாகி எங்குநீ யிருப்ப
..வந்தெனைக் கொடுத்துநீ யாகா
தேன்பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னை
..இருவினை வாதனை யன்றோ
தீன்பொரு ளான அமிர்தமே நின்னைச்
..சிந்தையிற் பாவனை செய்யும்
நான்பொரு ளானேன் நல்லநல் அரசே
..நானிறந் திருப்பது நாட்டம். 38

என்னுடை உயிரே என்னுளத் தறிவே
..என்னுடை அன்பெனும் நெறியாம்
கன்னல்முக் கனிதேன் கண்டமிர் தென்னக்
..கலந்தெனை மேவிடக் கருணை
மன்னிய உறவே உன்னைநான் பிரியா
..வண்ணமென் மனமெனுங் கருவி
தன்னது வழியற் றென்னுழைக் கிடப்பத்
..தண்ணருள் வரமது வேண்டும். 40

- 24. ஆசையெனும், தாயுமானவர்

சீவ போதம் ஒழிந்த பொழுது சிவ போகம் சுரந்து வரும் என்பதை இதனால் உணர்ந்து கொள்கிறோம். பாச மயல்கள் நீங்கி ஈசனை அருள் எய்தி என்றும் அழியாத விழுமிய இன்ப நலம் பெறுக. சொந்தமான அந்தப்பேறு அந்தமிலா.ஆனந்தமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-22, 6:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே