கடலோடு

களித்துப் போகிறாள் என் செல்லம்
தீரா அலைகளின் ஓயா ஓசையினால்
தீண்டித் தீண்டிச் செல்லும் அலைக் கரங்களால்
மகிழ்ந்து போகிறாள்.
குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி சிலிர்த்து
கூவிக் கூவி வியந்து போகிறாள்

யார் குரல் பெரிதென
போட்டி போடுகிறாள்
அலை உயரம் இல்லாத என்
அல்லி மலர்ச் செண்டு

களைத்துப் போகிறது கடல்
அடங்கி, என் மகள் கால் தடவி
சென்று வா என அனுப்பி விடுகிறது.

பிரிய மனமின்றி நடுங்கும் குளிரோடு
மீண்டும் என்று வருவோம் என
என் விரலைக் கேள்விக் கொக்கியால்
பிடித்துக் கொண்டே விலகி வருகிறாள்

அவள் விரலில் தான் நான்
மனம் முழுதும்
கடலே.

எழுதியவர் : ம. லோகேஷ் (28-Jan-22, 2:22 pm)
சேர்த்தது : Logesh
Tanglish : kadalodu
பார்வை : 4227

மேலே