பட்டபெயர்

பட்டபெயர்
லட்சுமிக்கு புதிதாய் கல்யாணம் ஆகியிருந்தது. மாப்பிள்ளை வெளியூர் என்றாலும் சென்னையில் தான் வேலை. ஒரு “காஸ்டிங்” கம்பெனியில் சூப்ரவைசர். லட்சுமியும் உள்ளூரில் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளூரில் அவ்வப்பொழுது பழைய தோழிகளை பார்ப்பதும் அவர்களோடு பேசி மகிழ்வதும் உண்டுதான். என்றாலும் கல்யாணம் ஆனவுடன் அவளது குணம் கொஞ்சம் மாறியிருந்தது.
அதாவது இதுவரை இங்கிருக்கும் பால்யகால தோழிகள் அவளை “அழுக்கு மூட்டை” என்னும் பட்டப்பெயரில் அழைத்து பேசிக்கொள்வதை கண்டு கொள்ள மாட்டாள். இதற்கும் எப்பொழுது இந்த பெயர் அவளுக்கு சூட்டப்பட்டது என்பது இன்று வரை தெரியவில்லை. அநேகமாக மூன்றாவது, நாங்காவது படிக்கும்போது இந்த பெயர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. அன்று அவளுடன் வகுப்பில் படித்தவர்கள் அடிக்கடி கூப்பிட்டு அழ வைத்திருக்கிறார்கள். பின் சமாதானமும் ஆகியிருக்கிறது.பிள்ஸ் டூ முடித்து வேலைக்கு சென்று இருபது வயது ஆன பின்னாலும் அவளது வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இப்பொழுதும் அவள் அழுக்கு மூட்டைதான். ஆனால் லட்சுமிக்கு கல்யாணம்ஆகி விட்டதே, இனிமேல் அப்படி அழைப்பதை அவள் சுத்தமாக விரும்பவில்லை.
அவளின் பால்யகாலம் நினைவுக்கு வரும் போதெல்லாம் மனதுக்குள் வருத்தம் வந்து உட்கார்ந்து கொள்ளும். அதை பிறரிடம் சொல்லி மனசை ஆற்றிக்கொள்ளவும் தயக்கம். கணவனிடம் கூட பால்ய கால குறும்புகளை பற்றி பேசியிருக்கிறாள், ஆனால் அவளின் பால்ய கால ஆண் பெண் தோழர்கள் பட்டப்பெயரை வைத்துத்தான் எப்பொழுதும் தன்னை அழைப்பார்கள் என்பதை மட்டும் சொல்லமாட்டாள்.
சொன்னால்..! நாளை கணவன் வீட்டாரும் அப்படி கூப்பிடலாம், சத்தமாய் கூப்பிடாவிட்டாலும் தங்களுக்குள் இவள் பெயரை சொல்லி கிண்டல் செய்யலாமல்லவா? அப்படி கூப்பிடலாம், இல்லை இவளை பற்றி மட்டரகமான மதிப்பீடுகளை கொடுத்துவிடலாம், அதனால் அப்படியே மனதுக்குள் புதைத்து கொள்வாள்.
தன் கணவனுடன் சென்னையில் இருந்து தன் ஊருக்கு வரும் பொழுதும் எங்காவது பழைய நட்பு வட்டாரம் இருந்த பகுதி வழியாக கணவனுடன் செல்ல வேண்டுமென்றால் வேறு வழியாக போகலாம் என்று சொல்லிவிடுவாள். அந்த வழி சுத்து ஆச்சே என்று கணவன் சுட்டிகாட்டினாலும், அதனாலென்ன, நடக்கறதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும் என்று ஒரு வார்த்தையை சொல்லி விடுவாள்.
இவ்வளவு பாதுகாப்பாய், இவள் ஊரில் இருந்த வரை கணவனிடம் அவள் பால்ய கால பட்டப்பெயரை மறைத்து வைத்தவள், சென்னையில் அவள் குடித்தனம் செய்த நாட்களின் ஒரு ஞாயிறு கணவனுக்கு அன்று விடுமுறை, சாயங்காலம் கடற்கரைக்கு போகலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு வந்தாள். இவ்ரகள் ஊரில் ஏரியையே பார்த்ததில்லை. கடலின் அலையும், அதை இரசிக்க வந்திருந்த கூட்டமும் அவளை சந்தோசத்தில் திளைக்க வைத்தது. கணவனின் தோளில் சாய்ந்தபடி கடலையை இரசித்து பார்த்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
ஹலோ..அழுக்கு மூட்டை..! யாரோ முதுகுப்புறமிருந்து இப்படி அழைக்கவும் சட்டென கணவனும் மனைவியுமாக திரும்பினர்.
சற்று தூரத்தில் நல்ல உடை அணிந்த ஒருவன், கூட ஒரு பெண். அவனின் மனைவியாக இருக்க வேண்டும் பார்ப்பதற்கு லட்சணமாய் இருந்தாள், இவர்களை நோக்கி நடந்து வர.. லட்சுமிக்கு இவனை எங்கும் பார்த்ததாக ஞாபகமே இல்லையே, இவன் எப்படி எனது “பால்யகால” பட்ட பெயரை பெயரை வைத்து கூப்பிடுகிறான், திகைப்பாய் பார்த்துக்கொண்டிருக்க..
என்னடா திரு..திருன்னு முழிக்கறே, என்னை தெரியலை, நொண்டி முத்து மவன், கடப்பாறை
டேய் கடப்பாறை… அப்படியே லட்சுமி கணவன் அவனை அணைத்துக் கொண்டான்.
உன் சம்சாரமா? அம்மா இந்த ‘அழுக்கு மூட்டை’ இல்லையின்னா நான் இல்லை, நான் பனிரெண்டாவது வரைக்கும் இவன் பரிட்சை பேப்பர் பார்த்துத்தான் பாஸ் பண்ணேன்னா பாரேன்.
டேய் சும்மா இருடா லட்சுமி புருசன் அவனை தட்டிகொடுத்து அவன் மனையிடம் சும்மா சொல்றாம்மா இவனுக்கும் எனக்கும் எப்பவுமே ஸ்கூல்ல போட்டிதான் படிக்கற விசயத்துல மட்டும், மத்ததுல எல்லாம் இரண்டு பேரையும் கூப்பிடறது ‘களவாணிங்கன்னுதான்” இரண்டு பேரின் சிரிப்பு சத்தம் கடலைலையின் சத்தத்தையும் மீறி ஒரு சிலரின் காதில் விழுந்தது.
எதிரில் வந்தவனின் மனைவி திடீரென இவரு கூப்பிட்ட உடனே அவரு திரும்பினாரு சரி, நீங்க எதுக்கு திரும்புனீங்க?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Nov-25, 11:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 7

மேலே