முத்தம்மா- ஒரு தியாகம்

முத்தம்மா- ஒரு‌ தியாகம்.

அதிகாலை ஐந்து மணி .களத்து மேட்டிலிருந்து கோழி கூவியது முத்தம்மா அவல் பெட்டியை தலையில் சுமந்து கிட்டு வியாபாரத்துக்கு கிளம்பி விட்டாள்..இப்ப போனாத்தான் பறக்கை வரை க்கும் போய் வெளிச்சத்தில சூரியன் ஏறுதுக்குள்ள வித்துட்டு வந்திடலாம் .பறக்கை தாமரைகுளத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிற ஊர்.பறக்கை வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமான ஒன்று.

தெரு அமைதியாக இருந்தது ..ஆள் நடமாட்டமில்லை ...ராசம்மை வீட்டு நாய் அவளைப் பார்த்து குரைத்தது...பக்கத்தில் வந்ததும் பழகிய ஆளென்று குரைப்பதை நிறுத்திக்கொண்டது.

ரோட்டை வந்தடைந்த போது கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் செல்லும் முதல் பஸ் அவளைக் கடந்து சென்றது.

அவ, அவலை வித்துக்கிட்டு வந்தப்புறம் தான் சாப்பாட்டுக்கு தேவையானதெல்லாம் வாங்கணும்..முத்தம்மா அந்த வயசிலயிலும் ஒய்வு ஒழிச்சல் இல்லாம் வேலை பாக்கிறா.... அவளுக்கு 55 வயசுக்கு மேல இருக்கும். ஒன்பது பிள்ளையை பெற்றும் இப்பவும் கஷ்டப்படுறா...

அவ வீட்டுக்காரர் சம்பாதிக்கிறது அவருக்கு குடிக்கிறதுக்கும் அவர் செலவுக்கும் போக எப்பவாவது ஏதோ கொஞ்சம் கொடுப்பார். அதை வச்சு எப்படி குடும்பத்த ஓட்டுறது....ஊரில எங்கும் இல்லாத வகையில அவளுக்கு குழந்தைகள் பிறந்தது. வரிசையா அஞ்சு ஆம்பள பிள்ளைகளா பிறந்திச்சி ஊர் கண்ணெல்லா அவ மேலதான் உனக்கென்னமா ராசாத்தி மாதிரி இருக்க போற ..கண் திருஷ்டிதான் பட்டதோ என்னவோ ஒன்றுகூட உருப்படல...ஒன்னும் சரியா படிக்க வுமில்லை..இல்லை படிக்க வைக்க முடியல அது வேற விஷயம்..

கடைசியா..உள்ள அஞ்சாவது பய மட்டும் ஏதோ கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டா .அஞ்சாவது ஆம்பளப் பயலுக்கு பிறகாவது குடும்ப கட்டுப்பாடு பண்ணி இருக்கலாம் அதுவும் இல்லாம - அந்த காலத்தில யாருங்க குடும்ப கட்டுப்பாடு பண்ணாங்க..இப்பதான அதெல்லாம் வந்தது...அப்புறமென்ன வரிசையா நான்கு பொம்பள பிள்ளை...என்ன பண்ண முடியும்......

அப்பத்தான் அவ அந்த முடிவுக்கு வந்து , நெல்லு வாங்கி அவுச்சி அதை வறுத்து குத்தி அவலாக்கி ஊர்காட்டுல விக்கலாமென்று செய்ய ஆரம்பித்தாள்.

சொல்லப்ப்போன அவ உழைப்புலதான் வீட்டில சாப்பாடு நடக்குது....அவல் இடிப்பதற்கு சம்பளத்துக்கு ஆள் வைக்கிறதில்லை. பொம்பளை பிள்ளைகளே வீட்டில அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்குதுக..

முத்தம்மா பறக்கைக்கு வந்து சேர்ந்திட்டா...ரெண்டு மூணு தெருவுக்கு போயிட்டு வந்தவுடன் .பாதி வித்தாச்சி..தலையில் கொஞ்சம் பாரம் குறைஞ்சிருச்சி . சூரியன் நல்ல வெளிச்சமாகி மக்கள் பரபரப்பா இருந்தாங்க .

சரி இனி கிளம்பி வீட்டுக்கு போற வழியில கல்குறும் பொத்தைக்கும் பெருமாள் புரத்துக்கும் போயரல்லாம் ...

பசி மயக்கம் வந்துச்சி ...தெருவில இருந்த டீக் கடையில ஒரே கூட்டமா இருந்துச்சி .. .டீ சாப்பிட்டதும் கொஞ்சம் தெம்பாச்சி ...

அவள் மனம் முன்னோக்கி போனது வீட்டுக்கு போனதும் காட்டுக்குப் போய் முள் செடி வெட்டி விறகு கொண்டு வரணும் . கடையில விறகு வாங்கி நமக்கு கட்டுப்படி ஆகாது இந்தஆம்பள பசங்களால என்ன பிரயோஜனம் அப்பன மாதிரி ஊரில சண்டை போட்டுக்கிட்டு சண்டியர் என்று பேரெடுக்கத் தான் லாயக்கு . கூட மாட ஒரு ஒத்தாசை பன்றதில்லை.எவன் கூடயாவது சுற்ற வேண்டியது..நேரத்துக்கு நேரம் வந்து தின்னுட்டுப் போக வேண்டியது.....

முத்தம்மாவுக்கும் முன்னை மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியல ...ஒன்பது பிள்ளை பெத்த உடம்பு....வேலைவேலை செய்தே ஓடா தேஞ்சிப் போச்சி....ஏழையாகவும் பிறக்ககூடாது அதிலும் பொம்பள பிள்ளையா பிறக்க கூடாது..

டீ சாப்ப்பிட்டு முடித்ததும் தலையில் பெட்டியை வைத்து திரும்பினாள் முத்தம்மா.....எதிர்ல வசந்தா வந்திட்டுருந்தாள்.. அவளும் இவளைப் போலத்தான் ஊரூரா காய்கறி தலையில் வைத்து வியாரம் செய்வா..பெருமாள் புரத்துக்காரி. முத்தம்மையை விட ஐந்தாறு வயது இளையவள் .அவ வீட்டுலையும் இதே கதிதான் .புருஷன் காரன் நல்ல குடிகாரன்..இதுல வேற இன்னொரு பொண்டாட்டி வச்சிருக்கான் ஓயாம வீட்டுல சண்டைதான்......

அவ இவள பார்த்ததும்
...என்ன முத்தம்மக்கா சௌக்கியமா...

..ஆமாம்மா .. ..
நீ எப்படி இருக்கே .....காய்கறி வியாபாரம் எப்படி இருக்கு..

....பரவாஇல்லக்க....

...ஆமா மூத்த மகளுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்களே எந்த ஊரில கட்டி கொடுத்திருக்கு ....

..தூத்துக்குடியில இருக்கிறாள்....முத்தம்மா பதில் சொன்னாள்

....ஊ ருக்கு வந்தாளா...

....இல்லைம்மா ..பொங்கலுக்கு படி கொடுத்துட்டு அடுத்த நாள் கூட்டிட்டு வரணும் ..

வயித்தில ஏதும் விசெஷமுண்டா....

....ஒன்னும் தெரியலம்மா ...
அவகிட்ட இருந்து கடுதாசி எதிர் பார்த்திட்டு இருக்கேன்...

..சரி வசந்தா நேரமாகுது...உங்க ஊருக்கும் போக வேண்டி இருக்குது..வரட்டுமா...
என்று சொல்லிவிட்டு முத்தம்மாவிடைபெற்றாள்.

மிச்சமிருந்த அவலை பெருமாள் புரத்திலும் கல்குறும் பொத்தையிலும் வித்துகிட்டு உச்சிப் பொழுது வருதுக்குள்ள ஊருக்குள் வந்து விட்டாள்...வரும்போதே செட்டியார் கடையில 2 கிலோ அரிசி கொஞ்சம் பருப்பு வெங்காயம் வாங்கி பெட்டியில் போட்டுகிட்டாள் .

வீடு அமைதியா இருந்திச்சி வழக்கம் போல மூணு பொட்டச்சிகளும் சண்டை போட்டுருப்பாளுவே. காலா காலத்தில கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இந்த சண்டை சச்சரவெல்லாம் இருந்திருக்காது இவளுக்க வயசுல உள்ளவள்ககளும் இளையவள்களும் கல்யாணமாகி கையில் 2,3 குழந்தைகளோடு பவுசா திரியும் போது இவள்களுக்கு கோபம் வரத்தான செய்யும்..இப்பதான் ரொம்ப கஷ்டப்பட்டு மூத்தவளுக்கு வயசு ரொம்ப ஆகுதுன்னு கடன வாங்கி கல்யாணம் நடத்தி வச்சிருக்கு .

அடுத்தால பொங்கல் வருது பொங்கப்படி கொடுக்கணும்..புது டிரஸ் எடுக்கணும்...... எப்ப இதெல்லாம் முடிஞ்சி இவங்களுக்கு எப்ப கல்யாணம் ஆகப் போகுதோ...முத்தம்மாள் கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்து கொண்டாள்.

இளையவள் கொண்டு வந்த இட்லியை சாப்பிட்டுகிட்டு செற்ற உடம்பை வீட்டுத் திண்ணையில் சாய்த்தாள்...நடந்த அலுப்பு..கண் தூக்கம் அவளுக்கு சொக்கிட்டு வந்தது ஏழைகளுக்கு இது ஒன்னுதான பாக்கியம்.

..அம்மா தபால்...

குரல் கேட்டு பார்த்தபோது .வீட்டு வாசலில் தபால்காரர் நின்று கொண்டிருந்தார் ...
மூன்றாவது மகள் செல்வி அதை வாங்கி படிச்சாள்

..அம்மா தூத்துகுடியிலிருந்து அக்கா எழுதிருக்கிறா ...

..முழுகாம இருக்காளாம்..பொங்கலுக்கு படி எப்ப கொண்டு வருவேன்னு கேட்டிருக்கிறாள் ....

நல்ல சந்தோசமான விசயம்தான் ... அடுத்தாலவுள்ள பிரசவ செலவு பொங்கல் செலவு இதுகளை நினைக்கும் போதே முத்தம்மாவுக்கு வந்த தூக்கம் போய் விட்டது...யார்கிட்டையாவது கடன் வாங்க வேண்டியதுதான்.

வீட்டில சண்டை போடும்போதல்லாம் அவ சொல்லுவா .தன் பிள்ளை கிட்ட ..ராத்திரி செத்தா மண்ணெண்ணெய் இல்லை.. பகல்ல செத்தா வாய்க்கரிசி இல்லை...
அப்படித்தான் இருக்கு நம்ம பொழைப்பு ...

இந்த வியாபரத்தில ஏதோ வாயுக்கும் வயிற்றுக்கும் பற்றுது... அதுவும் விறகுக்கு அவளே முள்வெட்டிகிட்டு வர்றதனாலே என்னத்தை பண்றது ...

சாமியைவேண்டாத நாளில்லை...அந்த படிச்ச பயலுக்காவது ஒரு வேலை கிடைக்குமானா அதுவும் கிடைக்க மாட்டேங்குது...

விசனப்பட்ட மனதோடு கையில் பெட்டியோடு நெல்லு வாங்கி வர கிளம்பிப் போனாள்முத்தம்மா.இப்ப வாங்கி அவிச்சாதான் சாயந்தரம் குத்தி அவல் எடுத்து நாளைய வியாபாரத்துக்கு போகமுடியும் ..

தூரத்து மாதா கோயிலிலிருந்து மணியோசை டைன் ... ..டைன் .. என்று அடித்து ஓய்ந்தது.

சுசீந்திரன்

எழுதியவர் : சுசீந்திரன். (28-Jan-22, 8:54 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 170

மேலே