கருதிய மேன்மையெலாம் கனிந்து திகழுமே மண்டு தவத்தால் மலிந்து - தவம், தருமதீபிகை 962

நேரிசை வெண்பா

கருதிய மேன்மையெலாம் கண்எதிரே வந்து
பருதி ஒளிபோல் பரந்து - தருநிதியும்
கண்டு வியப்பக் கனிந்து திகழுமே
மண்டு தவத்தால் மலிந்து. 962

- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதன் வியந்து எண்ணுகிற மகிமைகள் யாவும் கண்ணெதிரே வந்து கதிரொளிபோல் எளிதே தெளிவாய் விளங்கி நிற்கும்; விண்ணுலகிலுள்ள கற்பகமும் அற்புத நிதிகளும் அவாவி அடைந்து யாவரும் அதிசயிக்கும்படி தவத்தால் அமைந்து நிற்கும்; அதனால் விளையும் விழுமிய விளைவுகள் அளவிடலரியன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பெரிய செல்வங்களையும் அரிய புகழையும் நல்ல சுகங்களையுமே யாவரும் யாண்டும் விரும்புகின்றனர். உயர்ந்த மேன்மைகளும் சிறந்த சுகபோகங்களும் புண்ணியத்தால் வருகின்றன. இகபர இன்பங்கள் யாவும் அதனால் இனிது விளைகின்றன.

தருமமே இன்பம் எல்லாம் தரும்;அதை ஒருவி நின்றார்
இருமையும் சிறுமை யாகி எங்குமே துன்பம் கண்டார்.

என்றமையால் சிறுமையும் துன்பமும் பாவத்தால் வரும்; பெருமையும் இன்பமும் கருமத்தால் விளையும் என்பது தெரிய வந்தது. மனிதர் அனுபவிக்கின்ற சுக துக்கங்கள் அவரவர் செய்த வினைகளின் அளவே விளைந்து வந்துள்ளன. நல்வினை, தருமம், புண்ணியம் என்பன இன்ப நலங்கள் விளையும் இனிய புனித நிலையங்களாய் உள்ளமையால் அந்த மொழிகளைக் கேட்டதும் யாவரும் கண்ணியமாய் எண்ணி யாணடும் மகிழ்கின்றார்.

தருமம் முதலிய எவற்றினும் தவம் அரிய பொருளுடையது. அதிசய மேன்மைகள் யாவும் எளிதே அருளவல்லது. உலகத்தை ஆள நேர்ந்த அரசர் எவரும் இதன் ஒளியைச் சார்ந்தே உயர்ந்து வந்துள்ளனர். தவத்தை இழந்தவர் அவத்தராய் நின்றுள்ளார். அதனைப் போற்றி வந்தவர் ஏற்றம் மிகப் பெற்றிருக்கின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஆற்றிய மக்கள் என்னும் அருந்தவம் இலார்கள் ஆகின்
போற்றிய மணியும் பொன்னும் பின்செலா பொன்ன னீரே!
வேற்றுவர் என்று நில்லா விழுப்பொருள் பரவை ஞாலம்;
நோற்பவர்க்(கு) உரிய ஆகும் நோன்மினம் நீரும் என்றான். 388

- துறவு வலி உறுத்தல், முத்தி இலம்பகம,.சீவக சிந்தாமணி

விழுமிய பொருளும் உலக ஆட்சியும் தவம் உடையவர்க்கே உரியனவாம். தவம் இல்லாதவர் யாதொரு நலமும் இலராய் அவமே நிற்பர் எனச் சீவகமன்னன் இன்னவாறு கூறியிருக்கிறான். ஞாலம் நோற்பவற்குரியது என்பதை நுனித்து நோக்குக.

சூரபன்மன் இளமையாயிருக்கும் பொழுது ஒருநாள் காசிப முனிவரை அணுகி உயர்வாழ்வைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான். தானவர் தலைவனாய்த் தோன்றியுள்ள அவன் வானவர் எவரினும் உயர்ந்த பதவியை அடைந்து வாழ வேண்டும் என்று நினைந்து இனிய போதனைகளை அவனுக்கு முனிவர் இனிது கூறினார். கருதிய மகிமைகள் யாவும் தவமே தரும்; அதனைச் செய்து உயர்க என உறுதியான பெருமித நிலைகளைத் தெளிவாயவர் உரைத்தருளினார். அவ்வுரைகளுள் சில அயலே வருகின்றன.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஆற்றலை உளதுமா தவம(து) அன்றியே
வீற்றுமொன்(று) உளதென விளம்பல் ஆகுமோ
சாற்றரும் சிவகதி தனையும் நல்குமால்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால். 15

அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
முத்தியை நல்கியே முதன்மை ஆக்குறும்
இத்துணை அன்றியே இம்மை இன்பமும்
உய்த்திடும் உளந்தனில் உன்னும் தன்மையே. 16

ஆதலில் பற்பகல் அருமை யாற்புரி
மாதவம் இம்மையும் மறுமை யும்தரும்
ஏதவ(து) ஆகுமால் இருமை யும்பெறல்
ஆதியம் பகவன(து) அருளின் வண்ணமே. 17

தவம்தனின் மிக்கதொன்(று) இல்லை; தாவில்சீர்த்
தவம்தனை நேர்வது தானும் இல்லையால்;
தவம்தனின் அரியதொன்(று) இல்லை; சாற்றிடின்
தவம்தனக்(கு) ஒப்பது தவம(து) ஆகுமே. 23

- காசிபனுபதேசப் படலம், அசுர காண்டம், கந்தபுராணம்

தவத்தின் மகிமை மாண்புகளைக் குறித்து ஒரு பெரிய தவசி இவ்வாறு விரித்து உரைத்திருக்கிறார். இம்மையும் மறுமையும் இனிமையாய் எம்மையும் இன்பம் தரும்; எத்தகைய மேன்மைகளையும் எளிதே நல்கி முத்தியும் அருளும் என்றதனால் தவம் எவ்வளவு அதிசய ஆற்றல்களை யுடையது. எத்துணை மகிமை வாய்ந்தது என்பதை உய்த்துணர்ந்து கொள்கிறோம்.

அனுமான் இராம தூதனாய் இலங்கை புகுந்தபோது அந்நகரின் செல்வ வளங்களையும் பல்வகை நிலைகளையும் அரிய காட்சிகளையும், பெரிய மாட்சிகளையும் கண்டு மகிழ்ந்தான்; அழகிய தேவ மங்கையர் அரக்கர் குல மகளிர்க்கு ஊழியக்காரிகளாய் நின்று ஆவலோடு ஏவல் புரிந்து நீராட்டிப் பாராட்டிச் சீராட்டி வருவதை நேரே கண்டான்; நெஞ்சம் திகைத்து நெடிது வியந்தான்; இராவணன் செய்த தவமல்லவா அவன் குலத்தில் உதித்த மாதர்க்கும் இவ்வாறு மகிமைகளை அருளியுள்ளது என்று அதிசயமடைந்தான். அப்பொழுது தவத்தின் பெருமையை வியந்து தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டு சிறிது நேரம் அந்நீர் நிலைகளின் அருகே யாரும் அறியாவகை அமைதியாய் நின்றான். அவன் கருதி நின்றது அரிய ஒரு இனிய பாட்டு வடிவமாய் மருவி வந்தது. அயலே வருவது காண்க.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஈட்டுவார் தவம லால்மற்(று) ஈட்டினால், இயைவ(து) இன்மை
காட்டினார் விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!
பூட்டுவார் முலைபொ றாத பொய்இடை நையப் பூநீர்
ஆட்டுவார் அமரர் மாதர்; ஆடுவார் அரக்க மாதர். 103

- ஊர் தேடு படலம், சுந்தர காண்டம், இராமாயணம்

உலக மக்களே! நீங்கள் மேலான இன்ப நிலையில் வாழ வேண்டுமானால் தவத்தைச் செய்யுங்கள்; அதைச் செய்தவர் தேவரும் ஏவல் புரிய இனிது வாழ்வதை இலங்கையில் வந்து பாருங்கள் என்று பிரம்மா நேரே காட்டியது போல் அக்காட்சி தோன்றி நின்றது. இந்தப் பாட்டின் சுவையைக் கூர்ந்து நோக்கித் தவத்தின் மகிமையை ஒர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-22, 12:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே