காதலின் பொன் வீதியில்
காதலின் பொன்வீதியில்..
*************************************
கடல்போல் ஆழமானது உன் மனசு
கரைபோல் நீளமானது என் கனவு
கரையைத் தொடாமல் எத்தனைத் தடவை
காணாமல் போனதோ உன் காதல்
*
தவிர்க்க வேண்டியே தள்ளி நடக்கிறாய்
எதிரே நின்றால் எள்ளி நகைக்கிறாய்
விழுந்தால் எழ முடியாப் பாழுங்
கிணறெனச் சொல்லிச் சிரிக்கிறாய்
*
கண்களினால் நீ பேசிட வரும்
காதலுக்கு ஒரு தேசிய தினம்
பெண்மையினால் வரும் வாழ்ந்திட வரம்
நீ பேதலித்தால் அந்த வாழ்வினில் ரணம்
*
வாங்கி வந்தேன் இருளும் வானம்
நீ நிலவாகி அருளுன் வரம்
எனக்கு மட்டுமல்ல வாழ்க்கை, அது
உன்னையும் சேர்த்தே உருளும் ரதம்
*
தனிமைக் கடலில் தீவாய்க் கிடக்கிறேன்
இனிமை எனுமோர் பூவாய் மலர்கிறாய்
காதல் வண்டின் சிறகுகள் விரியும்
காலம் மலரா நோவால் தவிக்கிறேன்
*
என்னிடம் இருந்த என்னை எடுத்து
உன்னிடம் கொடுக்க வந்தேன்
உன்னிடம் இருக்கும் உன்னை வழங்க
நீயோ மறுத்துச் சென்றாய்
நம்மிடம் இருக்கும் காதல் பூவை
நாரா வந்து தொடுத்து வைக்கும்?
*
பெப்ரவரி பதினாலு காதல் வைரஸ்
தொற்றிவிட லாகாதெனப் போகும் நீ கோர்ன்ஐஸ்
பற்றிக்கொளும் தீநின்று பறந்து
சிறகடிக்கும் நானுனது ஊடல் பீனிக்ஸ்
*
அழகுக் கர்வம் பதுக்கி மிரட்டும்
விழிகள் இரண்டும் திரவத் தீக்குச்சி
உரசிப் பார்த்து ஒளியைத திரட்டும்
எனது முயற்சி உறவுத் தீப்பெட்டி
இதயம் திறந்து விழியை மூடி
நடக்கும் நீயும் பருவப் பூத்தொட்டி
விழியில் விழுந்து இதயம் நுழையக்
கேட்கும் நானோ உருகும் பனிக்கட்டி
*
பதிலில்லாக் கேள்வியாக உனது மௌனம்
விடைதேடும் மாணவனாக எனது துயரம்
காதல் பரீட்சை முடிவுக் கேங்கி
காலம் கரைக்கும் வாழ்க்கைப் பயணம்
*
நான் ஒளியைத் தேடி அலையும் இருட்டு
நீ விழியை மூடி நடக்கும் நிலவு
உன்னை நானும் என்னை நீயும்
கண்டுப் பிடித்தால் அதுவே காதலின் கிழக்கு
*
இதயம் ஒரு பொன் வீதி
நீ மேற்கே நடந்து செல்கிறாய்
நான் கிழக்கே நடக்கிறாய்
நீயும் நானும் சந்திக்கும் இடத்தில்
நிகழும் நமது காதல் பிரளயம்
(கஸல் துளிகள்)
*
*மெய்யன் நடராஜ்