மௌனமாகிறேன்
கண் பறிக்கும் மாரன் கணைகள்
தினம் காலைப்பேருந்து காத்திருப்பில்
உன் காந்தவிழிகள் எறிவதை
நான் அறிவேனடா...
தமிழமுதம் பொங்கும்
இதழ் கொண்டு சிரிக்கும் சூரியன் நீ
என் சிந்தையில் புகுந்து
இதயம் நிறைந்த காதலன் நீ
அந்தியில் கருகும் உலகினை
காத்திட எழும் எழில்நிலவாய்
தனிமையில் கருகும்
எனக்கானவன் நீ...
அறிவேனடா ஆணழகா..!
உனை காணும் போதெல்லாம்
உள்ளக்கடலில் எழும்
காதல் சுனாமிகள்
இன்பம் கொள்கிறேனடா...
அருகில் நீ இருந்தும்
ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்
பாராமுகம் கொண்டு
கல்நெஞ்சம் கொண்டவளாய் மௌனமாகிறேன்
ஏனென்று அறிவாயா?
உள்ளம் பரிமாறி இரு உயிர்
இணையும் உண்மை காதல்
அறியா நற்பல மூடர்
சாதிய சாக்கடை அள்ளிப் பூசி
குலப்பெருமையென்றும்
குடிப்பெருமையென்றும்
நாடகக் காதலென்று
வெட்டிப் புதைக்கும் கொடூரம்
நாளும் காண்கிறேன்...
காதலில் சாதல் புதிதில்லை - ஆனால்
இன்ப வாழ்வு காண விளையும்
சேயின் காதல் உயிர் துடிப்பை
இரத்தவெறி கொண்ட
சாதீயம் விரும்புமா என்னவனே?