தம்மை அரியராய் நோக்கி அறனறியுஞ் சான்றோர் பெரியராய்க் கொள்வது கோள் – நாலடியார் 165
நேரிசை வெண்பா
எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை
அரியராய் நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராய்க் கொள்வது கோள் 165,
- பெரியாரைப் பிழையாமை, நாலடியார்
பொருளுரை:
‘எமது தகுதியை நீவிர் அறிந்தீரில்லை; எம்மைப்போன்ற தகுதியுடையார் பிறர் ஈண்டு இல்லை' என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது; தம்மை அருமை யுடையராகக் கருதி, அறமுணருஞ் சான்றோர் பெரியரென்று மதித்தேற்றுக் கொள்ளுதலே பெருமையாகும்.
கருத்து:
தம்மைச் சான்றோர் பெரியரென மதித்தேற்குமாறு தாம் செய்கையில் ஒழுகுதலன்றித், தம்மைத் தாமே பெரியரென வாயுரையாய்ப் புலப்படுத்திக் கொள்ளுதல் மதிப்புடைமையாகாது.