பேரின்ப மான பெரும்பொருளைப் பேணிவரின் பேரின்பம் பெருகிவரும் - தனிமை, தருமதீபிகை 975

நேரிசை வெண்பா

பேரின்ப மான பெரும்பொருளைப் பேணிவரின்
பேரின்பம் எங்கும் பெருகிவரும் - பாரின்பப்
பாழுங் குழியில் படினோ படுதுயரே
சூழும் கடிது தொடர்ந்து. 975

- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பெரிய இன்பமுடைய அரிய பரம்பொருளைக் கருதிவரின் பேரின்பம் எங்கும் பெருகிவரும்; உலக போகங்களாகிய பாழான குழியில் இழிந்தால் கொடிய துயரங்களே தொடர்ந்து வருத்தும்; அவை தொடராமல் செய்து கொள்வதே உயர்வாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கருதி வருகிற கருத்தின்படியே மனிதன் மருவி வருகிறான். மானச மருமங்கள் எவரும் எளிதில் அறிய முடியாத அதிசயங்களையுடையன. எண்ணங்கள் நல்லனவாயின் அந்த மனிதனுடைய வாழ்வு புண்ணியங்களோடு பொலிந்து வருகிறது; அல்லனவானால் பாவங்கள் படிந்து படுதுயரங்களாயிழிந்து கழிகிறது; மேலே உயர்ந்து மகிழ்வதும் கீழே கழிந்து அழிவதும் நினைவின் நிலைகளின்படியே யாண்டும் நிகழ்ந்து வருகின்றன.

சுகமும் பெருமையும் வேண்டும் என்றே எவரும் விரும்புகின்றனர்; துக்கங்களும் சிறுமைகளுமே எப்பக்கங்களிலும் பரவி வருகின்றன; நல்ல வழிகளில் பழகாமையால் மக்கள் எல்லா வழிகளிலும் எங்கும் அல்லல்களையே அடைகின்றனர்.

எவ்வளவு செல்வங்களை அடைந்தாலும் உண்மையான சுகத்தை ஒருவன் அடைய முடியாது; உள்ளம் தூயனாய் உயிரின் மூலத்தை உணர்ந்த போதுதான் துயரம் அடியோடு நீங்கி உயர் பேரின்பத்தை உரிமையோடு பெறுகிறான்.

இறைவன் ஒருவனே இன்பமயமான பொருள்; அந்த ஆனந்த சாகரத்தை அடைந்தவரே அழியாத விழுமிய பேரின்பத்தை நுகர்ந்து அதிசய பரவசராய் மகிழ்கின்றார்.

நித்திய அநித்திய நிலைகளை உய்த்துணர்ந்து தெளிந்த தத்துவ ஞானிகளே இத்தகைய பேரின்ப நிலையைப் பெற நேர்கின்றனர், பெறாதவர் பித்தராய் வீழ்ந்து பிழையாயிழிகின்றார்.

பிறவித் துயரங்கள் யாவும் ஒழிந்து பேரானந்த நிலையை அடையாமல் பாவ வழிகளிலேயே பழகிச் சீவகோடிகள் பரிதாபமாய் இழிந்து கழிந்து எவ்வழியும் மறுகி உழலுகின்றன.

அரிய அறிவிருந்தும் உரியதை உணராமையால் வறியராய் மடிந்து வசை துயர்கள் படிந்து வழிவழியே இழிகின்றார்,

பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்
மருதிடங் கொண்ட மருத வாண
நின்னது குற்றம் உளதோ நின்னினைந்
தெண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா

இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்
பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப்

புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்
தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று

தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடிபெயர்த் திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே. 16

- 028 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, பதினொன்றாம் திருமுறை

சீவர்கள் இன்பநிலையை அடையாமல் துன்பப் புலைகளில் இழிந்து அழுந்தி உழல்வதை நினைந்து பட்டினத்தார் இவ்வாறு பரிந்து வருந்தியிருக்கிறார். பரிவுரைகளில் அறிவொளிகள் பெருகியுள்ளன. மனிதர் மதிதெளிந்துய்ய விதி நலங்கள் விளைந்தன.

ஆண்டவா! நீ பேரின்ப மயமாய் என்றும் எங்கும் நிறைந்திருக்கிறாய்; உன்னை நினைந்து மாந்தர் உய்யாமல் இழிவழிகளிலேயே பழகி அழிதுயரங்களையே அடைகின்றார்களே! இவர்களுடைய மடமையிருள் மிகவும் கொடியது என அப்பெரியவர் மறுகி உருகியிருப்பது கருதியுணர உரியது.

உன் உயிர்க்கு இனிய உயிராயுள்ள உயர் பரனை உரிமையோடு நினை; அதனால் நீ புனிதம் ஆவாய்; துயரங்கள் எல்லாம் அடியோடு ஒழிந்து போகும்; நிலையான பேரின்பம் நேரே வரும்; அவ்வரவை விரைந்து பெறுக; அப்பேறே பிறவிப் பலனாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-22, 11:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே