கிழவியும் எமனும்

கிழவியும் எமனும்
(இது புதுமை பித்தன் கதை போல் இருக்கிறது என்று திட்டாதீர்கள், அதிய படித்து இரசித்ததால் இந்த அரைகுறை எழுத்தாளன் அதைப்போல் எழுதிய கதை அவ்வளவுதான்)
சித்திர குப்தா பூலோகத்தில் ஏதாவது வழக்கு நிலுவையில் உள்ளதா?
ஆம் எம்தர்மராஜா, தமிழ்நாட்டின் கடை கோடியில் இருக்கும் கன்னிவார்ப்பட்டி என்னுன் கிராமத்தில் பஜனையம்மாள் என்னும் மூதாட்டி நீண்ட நாட்களாக நமக்கு போக்கு காட்டிகொண்டிருக்கிறாள்.
நமது எம கிங்கரர்கள் அந்த பெண்ணை போய் இழுத்து வரவேண்டியதுதானே,
அதுதான் மகராஜா அந்த பெண்ணுக்கு தொண்ணூறு வயது ஆகியும் அவளை கூட்டி வர செல்லும் எம கிங்கரர்களை ஏதோ ஒரு வகையில் ஏமாற்றி விடுகிறாள்.
அது எப்படி? நாம் போவது அவர்கள் கண்ணுக்கு தெரியாதே?
மகராஜா ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன், வயது போனவர்கள் கண்ணுக்கு நாம் அவர்கள் உயிரை பறிக்க காத்திருப்பது தெரியும் என்று !
ஆம்..ஆம்..அது அவர்களின் “வாழ்நாள் சர்வீசுக்கு” நாம் கொடுத்த பரிசு அல்லவா, அதை மறந்து விட்டேன், அப்படி என்றாலும் அவள் அப்படி என்ன இவர்களை ஏமாற்றி விடுகிறாள்.
மன்னா ஏமாற்றுவது மட்டுமல்ல, அவர்களை வைத்து வேலையும் வாங்கி விடுகிறாள்.
அப்படியா? அப்படி என்ன வேலை வாங்கினாள்.
மன்னா நம் கிங்கரர்கள் அவள் எதிரில் போய் நின்றபின்னால் நடந்தவைகளை உங்களுக்கு “லைவ்”ஆக் காட்டுகிறேன்.
தட்..தட்.. காலை தட்டி நிற்கிறார்கள் யமகிங்கரர்கள்
யாருடா அது, கிழவி கண்ணை சுருக்கி பார்க்கிறாள்.
நாங்கதான் யம கிங்கரர்கள், உன்னை கூட்டிட்டு போக வந்திருக்கோம் !
எலே போக்கத்த பயலுவலா, இங்க நானே சோறு பொங்காம பொங்கிட்டு உட்கார்ந்திருக்கேன், கூட்டி போறானுங்களாம் கூட்டிட்டு !
கிழவி என்ன சொல்லுகிறாள், ஒரு வேளை நாம் சொன்னது புரியவில்லையோ !
ஏய் கிழவி உனக்கு இங்க வாழற “டைம்” முடிஞ்சிடுச்சு, அதான் கூட்டிட்டு போலாமுன்னு வந்திருக்கோம்.
என்னடா “டைம்”கீமுன்னு சொல்றீங்க, ஆமா இப்ப டைம் என்னா?
மீண்டும் கிங்கரர்களுக்கு குழப்பம், கிழவிக்கு “டைம்” சொல்லுவதா? இல்லை பாசக்கயிறை வீசுவதா?
எலே உள்ள வாங்கலே, “டைம் என்னான்னு” கேட்டா முழிச்சுகிட்டு நிக்கறீங்க,
கிழவி மணி பனிரெண்டு நாழிகை ஆகுது
அப்படியாலே, சரி ஒருத்தன் இந்த அடுப்பை எரிய விட்டு போ, சும்மா புகைஞ்சுகிட்டே இருக்குது. உன் கூட இருக்கறவனை இரண்டு விற்கை கொண்டு வந்து போட சொல்லு.
இருவரும் மேலும் கீழும் பார்த்துக்கொண்டாலும் கிழவி சொன்னபடி ஒருவன் உள்ளே வந்து அடுப்பை எரிக்க முயற்சி செய்ய, அடுத்தவன் பக்கத்து இடங்களுக்கு சென்று “சுள்ளி விறகு” எடுத்து வர செல்கிறான்.
அங்கிருந்த சுள்ளி விறகுகள் ஈரமாக இருந்ததால் அடுப்பு எரிய மறுக்கிறது, புகை கிளம்ப கிங்கரன் தடுமாறுகிறான்.
ஒரு அடுப்பை பத்த வைக்க துப்பில்ல, கூட்டிட்டு போறானுங்களாம் கூட்டிட்டு, அடுத்தவன் கொஞ்சம் சுள்ளி விறகுகளை எடுத்து வந்து தர இப்பொழுது தீ பற்றிக்கொள்கிறது.
சரி கிழவி அடுப்பை பத்த வச்சாச்சு, இப்ப எங்களோட கிளம்பு
ஏண்டா பயலே உனக்கு அறிவு கிறிவு இருக்கா? அடுப்பை வெறுமனே பத்த வச்சா குடிசை பத்திக்காதா? ஒரு பாத்திரத்தை வை, அதுக்குள்ள தண்ணிய ஊத்து.
கிழவி சொன்ன வேலைகளை செய்து விட்டு கிழவி இப்ப கிளம்பு.
எலே கூமுட்டை பயலுவளா, வெறும் தண்ணிய கொதிக்க விட்டுட்டு போயிட்டா பாவம் புடிக்காதா?
அதுக்கு என்ன பண்ணனும்?
இருலே என் பையன் அரிசி வாங்கியாருவான், வந்தவுடனே அதை உலையில போட்டு சாப்பிட்டுட்டு போலாம்.
அதுவெல்லாம் முடியாது.
அப்படி சொல்லப்படாது எனக்கு ஒரு வாக்கு கொடுங்கலே, பையன் அரிசி வாங்கி வந்து நான் பொங்கி சாப்பிட்ட உடனே என்னை கூட்டிட்டு போவேன்னு..
இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு, சரி இருந்தது இருந்தோம், இன்னும் ஓரிரு மணி நேரம்தானே !
சரி..காத்திருக்கோம்....இரண்டு கிங்கரர்களும் அப்படியே ஒரு இடத்தில் உட்காருகிறார்கள். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது, பையனும் வரக்காணோம், மாலை ஆகி விட்ட்து, பாட்டி இனி நேரமாகிறது, உடனே கிளம்பு.
அதெப்படிடா முடியும், சொன்னா சொன்னபடி நடக்கணும், என்ன எம ராஜாகிட்ட வேலை செய்யறீங்களோ?
அதான் உன பையனை காணவேயில்லையே, பார் அடுப்பு கூட அணைஞ்சு போச்சு, தண்ணி கூட சுண்டி போயி பாத்திரம் கொதிக்குது, இனி எப்ப உன் பையன் வருவான்
அதுதாண்டா நானும் என் வீட்டுக்காரரும் ரொம்ப வருசமா ஒரு பையனுக்கு காத்திருந்து, ஒரு குஞ்சு பொறக்காம போன வருசம்தான், அந்தாளு உங்க ராசா கூப்பிட்டாருன்னு போயிட்டான்.
அப்ப உனக்கு குழந்தை குஞ்சு ஒண்ணுமில்லையா?
அதெப்படிடா இருக்கும் மூதி என் வீட்டுக்காரன்தான் போன வருசம் போயிட்டானு சொன்னேனே
அப்ப அரிசி வாங்கிட்டு வர்றதா சொன்னது,
மறுபடி என் வீட்டுக்கார்ரு வந்து அதுக்கப்புறம் பொறந்து அவன் அரிசி வாங்கியாந்து பொங்கி சாப்பிடனும்
பாட்டி எங்களை ஏமாத்திட்டே, உன்னை..உன்னை..முறைக்க.
எலே முறைக்காதீங்கடா, நீங்க என் பையன் அரிசி வாங்கியாந்து நான் பொங்கி சாப்பிடனும்னு வாக்கு கொடுத்திருக்கீங்க, மறந்துடாதீங்க.
உன்னை அப்புறம் வந்து கவனிச்சுக்கறோம்… இருவரும் ஓடுகிறார்கள்.
ஹா..ஹா..எமகாத கிழவியாய் இருப்பாள் போலிருக்கிறது, சரி நானே போகிறேன்.
குடிசை வாசலில் போய் நின்ற யமதர்மராஜா தன்னுடைய உருவத்தை மானிட உருவமாக்கி குடிசைக்குள் நுழைகிறார்..
இருளுக்குள் உட்கார்ந்திருந்த கிழவி, வாய்யா எங்களுக்கு ஒரு பையன் அரிசி வாங்க வேணுமின்னு கேட்டதனால உன்னைய அனுப்பிச்சுட்டாரா அந்த யமதர்மராஜா..
யமதர்மராஜாவுக்கு தர்மசங்கடமாகி விட்டது, கிழவி நான் உன் வீட்டுக்காரனில்லை, உன்னைய கொண்டு போறதுக்கு வந்துருக்கற யமன்.
வாய்யா வா..உங்க ஆளுங்க என் வீட்டுக்காரனை கூட்டி வர வக்கில்லாத பயலுவ உன்னை அனுப்பிச்சிருக்கானுங்க..
இங்க பார் அதிகமா பேசாத, இப்ப நீ கிளம்பு
அதெல்லாம் முடியாது, உன் ஆளுங்க சொன்னமாதிரி எனக்கு செஞ்சுட்டு என்னைய கூப்பிடு, நீ வாக்கு தவறாதவன்னு வேற சொல்றாங்க,
கிழவி ஒன்றை புரிந்து கொள் “இறப்பு எல்லோருக்கும் உண்டு” “இறந்த பின் எதுவும் பிழைப்பதில்லை” உன் கணவன் இறந்தவன் இறந்தவன்தான், உனக்கும் வேலை வந்து விட்டது, கிளம்பு..
யம ராஜா நானும் ஒத்துக்கறேன், ஆனா நான் ஒரு வாக்கு மட்டும் கொடுத்துட்டேன், அதை முடிக்காம போனா உனக்குத்தான் அகெளரவம்.
என்ன வாக்கு ?
இப்ப நடந்து கிட்டிருக்கற “எலக்சன்ல” உனக்கு ஓட்டு போடறேன்னு பணம் வாங்கிட்டேன், அதை போடாம போயிட்டா எங்க வூட்டுக்காரரை பத்தி தப்பா பேசுவாங்க. உனக்கு நம்பிக்கை இல்லையின்னா என் கூடவே வா..
ஹா..ஹா. சரியான பெண்ணாய் இருக்கிறாய், சரி நானும் உன் கூடவே வருகிறேன்.
இருவரும் ஓட்டு நடக்குமிடம் செல்ல உள்ளே சென்ற கிழவியிடம் தேர்தல் அலுவலர் ஏம்மா உன் பேர்ல யாரோ ஓட்டு போட்டுட்டாங்கலேம்மா....
ஐயோ இதென்ன அநியாயம்..இத்தனை நாளா நான் ஓட்டு போட்டுட்டுத்தான இருக்கேன், இப்ப யாரோ போட்டுட்டாங்கன்னா என்ன பண்ணுவேன் ! தலையிலடித்து அழுகிறாள்.
தர்மராஜாவுக்கு சங்கடமாகிவிட்ட்து, இதா பார் அழுகாதே நீ ஓட்டுதான போடணும், அடுத்த எலக்சன்ல போட்டுக்கலாம்,
அப்படி சொல்லுங்க மகராசா, அப்ப அடுத்த எலக்சன் வரைக்கும் நான் இங்க இருக்கலாமுல்ல….
உன்னை…உன்னை..யமதர்மராஜா மறைந்து போனார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Feb-22, 11:09 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 263

மேலே