பேருந்தில் ஒருநாள்

ஓடும் பேருந்துக்குள் ஓர் ஓரமாக அமர்ந்திருக்கும் எனக்கு எத்தனை காதலிகள் என்று எண்ணினால் யாருமில்லை என்பதே உண்மை. ஆகினும் என்னுடைய காதல் காவியம் ஏராளம். இரண்டரை மணி நேரம் பயணிக்கும் இந்த பேருந்தில் கூட காதல் வந்ததென்றால் நம்ப முடிகிறதா ? நம்பி தான் ஆக வேண்டும்.

பேருந்தின் நடு பகுதியில் மூவர் அமரும் இருக்கையின் மத்தியில் நான், என் கண்களுக்கு எதிரே முன்புறம் இருந்த கம்பியின் கைகள் கோர்த்து நின்று கொண்டிருந்த அவளிடம் இதயத்தை பறிகொடுக்க போகிறேன் என்று அதுவரை தெரியாது.

வெள்ளை மேனி மேல் கருப்பு திரை போர்த்திய அவள் அமாவாசை அன்று தோன்றும் பெளர்ணமி நிலவோ என எண்ணிய எனது இதயம் சற்று நொடிக்குள் கவிதை ஒன்றை இயற்றி இடம் மாற துடிக்கிறது.

மல்லி மலர்களோடு சில
கனகாம்பர இதழ்களும் கூடி சங்கிலியாய் பிணைந்து உன்
கூந்தல் சேர்ந்தது உந்தன்
வாசம் நுகரவோ ? அதில்,
மயங்கி போன மலர்கள்
வீசும் காற்றில் வாசம் தெளிக்க
அதில் சுவாசித்தேன் உன்
இதய காற்றை ...

என்று எனக்கு மட்டுமே கவிதையான இந்த வரிகளின் மூலம் சற்று நேரத்தில் என்னையும் வைரமுத்து ஆக்கி விட்டாள்.

வெளியே அடிக்கும் மொட்டை வெயிலில் பேருந்து உள்ளே உள்ள கூட்ட நெரிசலில் உருவாகும் இந்த உஷ்ண காற்றில் சிக்கி தவிக்கும் எனக்கு அவள் பார்வை பட்ட இந்த நேரம் பனி கற்று அடித்தது போல உள்ளம் சிலிர்த்து போகிறது.

ராஜ ராஜன் ஏந்திய போர் வாளை போல மெல்ல வளைந்த அவளின் புருவங்கள், மத்தியிலே கட்டெரும்பு களவாடிய கடுகளவில் ஒரு பொட்டு, அழுகும் குழந்தையை அதட்டி பார்க்கும் அந்த பார்வை, சற்றே வளைந்த மூக்கின் மேலே மின்னும் மூக்குத்தி, தாமரை இதழ் போல இரு கன்னங்கள் அதில் விழும் ஒற்றை குழி இவற்றோடு மெல்லச் சிவந்த உதடுகள். இன்னும் எவ்வாரெல்லாம் எண்ணுவது ? எழுதுவது ?

இன்னும் சில நேரத்தில் பிரிய போகும் அவளிடம் இதயம் என்னென்னவோ சொல்ல தான் துடிக்கிறது. ஆனால் எப்படி சொல்வது என்று தவிக்கிறது.

பேருந்து ஜன்னலுக்கு வெளியே பேருந்தை முந்தி செல்ல துடிக்கும் லாரியின் ஆரன் சத்தம், உள்ளே ஸ்பீக்கரில் ஓடும் பாடலின் சத்தம் இதோடு சேர்ந்து பின் படிகட்டில் நிற்கும் கண்டெக்டரின் விசில் சத்தம். வேகமாக ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் காதுகளுக்கு சத்தம் கேட்டிருக்கும் போல. பதறி போய் மெல்ல வேகம் குறைத்து நிற்க தயாரானது.

காற்றிலே பறந்து கன்னம் அருகே ஒதுங்கிய தலை முடியை காது மடல்களுக்கு இடையே விரல்களால் ஒதுக்கி கொண்டே திரும்பிய அவளை இன்னும் திகைத்த படியே பார்த்து கொண்டிருக்கிறேன். அவள் இறங்க போகும் சேதி அறியாமல்.

சிலரை தொடர்ந்து இறங்க தயாரான அவள் கடைசியாக ஒருமுறை உள்ளே திரும்பி பார்க்க அவளின் பார்வை பட்ட இடத்தில் நான், என் கண்கள். சேர துடிக்கும் காந்தம் இரண்டின் இரு துருவமாக என் கண்கள் அவள் கண்களை ஈர்க்க எண்ணுகிறது. பிரிய போகும் சோகத்திலும் அவளை பார்த்து பூவாய் மலரும் எந்தன் முகம் இதற்கு மேலும் தைரியம் இல்லை என சொல்லும் மனம் மூளையிடம் கெஞ்ச அதுவோ கரு விழிக்கு கட்டளையிட இமையை இழுத்து போர்த்தி கொண்டது என் கண்கள்.

பறந்து போன அவளை எண்ணியே நகர்கிறோம் பேருந்தும், நானும். பெயர் கூட தெரியாத என் தேவதையை எப்படி அழைக்க ? கண்மணி யா ? கயல்விழி யா ? என்று நான் யோசித்து கொண்டே முழுமதி யாய் வந்த என்னவளின் நினைவுகளை என் இதயத்தில் அறை ஒன்று ஒதுக்கி சிறை பிடித்து பூட்டினேன். நானும் தயாரானேன், எந்தன் இதயமும் தயாரானது அடுத்த அறையின் கைதியை தேடி ....

எழுதியவர் : அரவிந்த் நிலன் (23-Feb-22, 8:04 am)
சேர்த்தது : Aravinth Nilan
Tanglish : perunthil orunaal
பார்வை : 874

மேலே