நயவஞ்சக உலகமிது

இளைஞனே!
நயவஞ்சக உலகமிது
நம்பிவிடாதே எவரையும்
கண்மூடித்தனமாக நீ.
..
உழைப்பின் வெற்றிக்கு
உரிமை கொண்டாடுபவர்கள் -நீ
தோற்றது தெரிந்தால்
தொலைந்துபோவார்கள்.
..
கொள்கைக்காரர்களை மட்டுமல்ல;
கொள்ளைக்காரர்களைச் சுற்றியும்
கூட்டமிருக்கும்
..
அடிவருடிகளுக்கு நீ
அமுதமே வார்த்தாலும்
அவர்களேயுன் முடிவுரைக்கு
முன்னுரையாக
முகாந்திரமிருக்கிறது.
..
உன் கொள்கைகளில்
குற்றங்கண்டவர்கள்;
முன்னேற்றத்திற்கு
முட்டுக்கட்டையானவர்கள்
உனக்கு
பொன்னாடைப் போர்த்துங்கால்
பூரித்துவிடாதே;
அவர்களேயுன்
இடுப்பு வேட்டிக்கு
இலக்கு நிர்ணயித்திருக்கலாம்.
..
கொடி பிடிக்கச்செய்யும்
அரசியல்வாதிகளிடம்..
மதம் பிடிக்கச்செய்யும்
ஆன்மிகவாதிகளிடம்
ஒதுங்கியே இரு.
..
உன்
பலம்
பலவீனம்
பகிரப்படாமலிருந்தால்
பத்மவியூகத்திற்கும் -நீ
பயப்படத் தேவையில்லை.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (22-Feb-22, 7:34 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 121

மேலே