பார்ட்டியில் பாடிய பாட்டி

"கமலா, கமலா , நீ இன்னிக்கு ஒரு மாதர்கள் சங்கம் பார்ட்டிக்கு போகணும். ஞாபகம் இருக்கா?" என்று சின்ன வெங்காயத்தை உரித்த வண்ணம் கமலாவின் அம்மா விசாலம் பெண்ணிடம் நினைவு படுத்தினாள். " ஆமாம்மா, நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. நான் பாடவேண்டிய பாடல்களை இரண்டு நாளாக பாடி ரிஹர்சல் செய்துகொண்டிருக்கிறேன். அதுவும் எங்கள் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு சிறப்பு பார்ட்டி. நான் தான் இறைவணக்கம் சொல்லி துவக்கி வைத்து பின்னர் இடையில் ஓரிரண்டு பாடல்கள் பாடி கொஞ்சம் பேசவும் வேண்டும்." கமலா தொடர்ந்தாள் " ஆமாம், நீயும் கூட இன்னிக்கு பவானி அம்மன் கோவில் உற்சவத்திற்கு மாலை செல்லவேண்டும் தானே?" . ஆமாம் கமலா. இன்று சுப்ரமணிய பாகவதர் கதாகாலக்ஷேபம் இருக்கிறது. மனுஷர் ரொம்ப நன்றாக கதை சொல்லுகிறார்."

அம்மா நறுக்கி கொடுத்த சின்னவெங்காயத்தில் மணக்கும் சாம்பார் மற்றும் பிஞ்சு கத்தரிக்காயில் லேசாக எண்ணெயில் வதக்கி கொஞ்சம் காரம் மற்றும் மசாலா பொடி போட்டு அருமையான கத்தரிக்காய் பொரியல் செய்து முடித்தாள் கமலா. அவள் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். மகன் கம்ப்யூட்டர் வல்லுநன், வீட்டிலிருந்து வேலைகளை கவனித்து வந்தான். மகள் மும்பையில் MBA கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தாள். சாப்பிடும்போது மகன் ராஜாமணியும் அம்மாவும் கமலாவை அவளின் அருமையான சமையலுக்காக மிகவும் புகழ்ந்தனர்.

ராஜாமணிக்கு அன்று ஆபீஸ் அலுவல்கள் அதிகம் இருந்ததால் அவனால் காரில் பாட்டியை கோவிலுக்கு கொண்டுவிட முடியவில்லை. ராஜாமணி பாட்டியிடம் சொன்னான் " நான் இரவு ஒன்பது மணிக்கு கோவிலுக்கு வந்து உங்களை கூட்டி வருகிறேன். நீங்கள் கவலை படவேண்டாம்". அன்று மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்பாவின் கார் டிரைவரும் வரவில்லை. அதனால் அம்மா பெண் இருவரும் ஊபரில் அவரவர்கள் இடத்திற்கு செல்ல திட்டமிட்டனர்.

மாலை கமலா, முதலில் அம்மாவுக்கு கார் புக் செய்ய முயற்சித்தாள். ஆனால் அன்று ஏனோ சீக்கிரம் வண்டி கிடைக்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு வழியாக அம்மாவிற்கு கார் புக் செய்தாள் கமலா. பத்து நிமிடங்கள் ஆகும் என்று ஊபரில் அறிவிப்பு செய்தி வந்தது. விசாலமும் நல்ல எடுப்பான புடவை உடுத்தி தயாராகிவிட்டாள்.
இதற்கிடையில் கமலாவும் அழகான அமர்க்களமான புது புடவை மேட்சிங் ப்ளௌஸ் அணிந்து தயார் ஆகி அவள் மாதர் நிகழிச்சி பார்ட்டிக்கு செல்ல ஊபரில் புக் செய்தாள். கார் வர 15 நிமிடங்கள் ஆகும் என்று ஊபர் அறிவிப்பு செய்திவந்ததும், கமலா சிறிது நேரம் செல் போனுடன் உறவாட தொடங்கினாள். இரண்டு சிம் கார்டு கமலாவின் செல் போனில். எனவே இரண்டு ஊபர் டாக்ஸிகளையும் கமலாவே புக் செய்துவிட்டாள். வண்டி வந்துவிட்டது என்ற அறிவிப்பு போனில் வந்தவுடன் கமலா அம்மாவிடம் " உனக்கு கார் வந்துவிட்டது. கிளம்புமா" என்றாள். வாசல் கதவு அருகில் நின்று காத்துக்கொண்டிருந்த விசாலமும் வந்த காரில் சட்டென ஏறி அமர்ந்தாள். சிறிய தோள்பையில் செல்போனை வைத்துக்கொண்டாள். சர்ரென புறப்பட்டது ஊபர் டாக்ஸி.

அடுத்த பத்து நிமிடம் கழித்து இன்னொரு கார் வந்தது. வெளியில் வந்த கமலா ஏதும் சொல்லாமல் காரில் வேகமாக ஏறி அமர்ந்தாள். ஏனெனில் கிளம்ப எதிர்பார்த்ததைவிட கிட்டத்தட்ட அரை மணி தாமதம் ஆகிவிட்டது. உடனேயே செல்போனில் மாதர் சங்க பெண்கள் சிலருடன் பேசினாள். வழியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தது. கமலா கொஞ்சம் பதட்டம் அடையத்தொடங்கினாள். மணி மாலை 6 .45 ஆகிவிட்டது .6 .30 க்கு நிகழ்ச்சிகள் ஆரம்பம். என்ன செய்வது என்று தெரியாமல் " கொஞ்சம் வேகமாக போப்பா டிரைவர் " என்றாள் கமலா.

டிரைவர் விசாலத்திடம் " உங்கள் இடம் வந்துவிட்டது.இறங்குங்கள்" என்றான். விசாலம் இறங்கி விட்டாள். முன்னதாகவே கமலா ஊபர் கட்டணத்தை போன் மூலம் கட்டிவிட்டதால் விசாலத்திற்கு பர்ஸ் எடுக்கவேண்டிய வேலை இல்லை. காரிலிருந்து இறங்கியவளுக்கு எதிரில் தெரிந்த பெரிய அறிவிப்பு பலகையை கண்டு பெருத்த வியப்பாக இருந்தது. "என்றும் இளைய மாதர்கள்" சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வரவேற்பு அறிவிப்பு பலகை விசாலத்தை திகைக்க வைத்தது. அவள் செல்லவேண்டிய இடம் பவானி அம்மன் கோவில். தவறுதலாக கமலா வரவேண்டிய நிகழ்ச்சிக்கு வந்துவிட்டாள். ஆமாம், கமலாவுக்காக வந்த ஊபரில், அம்மாவுக்காகத்தான் வந்திருக்கிறது என்று எண்ணி கமலா அம்மாவை ஏற்றி அனுப்பிவிட்டாள். ஏனெனில் முதலில் வர வேண்டிய வண்டி அம்மா செல்வதற்கு தான். ஆனால் கமலாவுக்கு புக் செய்த ஊபர் முதலில் வந்துவிட்டது. விசாலம் குழம்பிக்கொண்டு இருக்கையில் இரு பெண்கள் விசாலத்திடம் வந்து " மாமி, என்னை ஞாபகம் இருக்கிறதா? நான் ரேவதி. உங்களோட பொண்ணு கமலா எங்கே? ஏற்கெனவே நேரமாகிவிட்டது. அவள்தான் கடவுள் வாழ்த்து பாடி எங்களது 25 வது வருட சிறப்பு நிகழிச்சிகளை தொடக்கி வைக்கவேண்டும்." பெண்ணை விட்டு கொடுக்க முடியாமல் விசாலம் " எங்கள் இருவருக்கும் வண்டி புக் செய்து எப்படியோ கார் மாறாட்டம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். கடவுள் வாழ்த்தை நானே பாடுகிறேன். என் குரல் சுமாராக இருக்கும் " என்றவுடன் அந்த பெண்கள் இருவரும் பத்து நொடிகள் அவர்களுக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக்கொண்டு " சரி மாமி. வாங்கோ வந்து நீங்களே கடவுள் வாழ்த்து பாடல் பாடிடுங்கோ" என்று சொல்லி விசாலத்தை மேடைக்கு அழைத்து சென்றார்கள்.
இதற்கிடையில் உள்ளே மேடையில் இருந்த மாதர் சங்க தலைவி சாரதாவுக்கு அதிர்ச்சி தரும் போன் கமலாவிடமிருந்து வந்தது. " மேடம், எனக்கும் என் அம்மாவுக்கும் ஊபர் புக்கிங் செய்து பெரிய குளறுபடி நடந்து விட்டது. என்னுடைய அம்மா இப்போது உங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். நான் இப்போது பவானி அம்மன் கோவிலில் இருக்கிறேன். இங்கிருந்து அங்கே வர ஊபர் புக்கிங் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் நான் அங்கு வர முக்கால் மணிக்கு குறையாமல் ஆகும். ஏற்கெனவே லேட்டா ஆகி விட்டது. என் அம்மாவுக்கு நான் கால் மேல் போன் கால் போட்டுக்கொண்டே இருக்கிறேன். சைலன்ட் மோடில் போட்டுவிட்டாள் போலிருக்கிறது. எடுக்கவே இல்லை. என் அம்மா அங்கே தான் இருப்பாள் என்று நம்புகிறேன். என் அம்மாவும் நன்றகவே பாடுவாள். ஒரு வேளை நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை என்றாள் அவளிடமே சொல்லி பிரார்த்தனை பாடலை பாட வையுங்கள். நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கு வருகிறேன்" என்று மூச்சு முட்ட பேசினாள் கமலா.

அதே நேரத்தில் விசாலம் மைக் முன்பு நின்று கொண்டிருந்தாள். சாரதா மற்ற இரண்டு பெண்களிடம் பத்து நொடிகள் பேசியவுடன் ரேவதி என்ற பெண் விசாலத்திடம் " நீங்கள் பாடுங்கள்" என்றாள். ஒரு சேவகர் வந்து மைக்கை விசாலத்திற்கு வாய்க்கு எதிராக அமைத்து கொடுத்தார். விசாலம் கொஞ்சம் ஸ்ருதியை சரி செய்துகொண்டு " வாணி, வாநீ, வந்து எம்மை காத்து ஆதரி" என்று கம்பீரமாக சரஸ்வதி அம்மன் பெயரில் அருமையான பாடலை, அடாணா ராகத்தில் வெகு கம்பீரமாக அழகாக பாடினாள். பாடி முடித்தவுடன் சபை எங்கும் பெருத்த கரகோஷம். மேடையில் இருந்த பிரமுகர்களும் கைதட்டி விசாலத்தை பாராட்டினார். பின்னர் விசாலத்தை மேடைமீதே இருக்கையில் அமரவைத்தனர்.
அதன் பிறகு மாதர் சங்க தலைவி சாரதா வந்தோரை வரவேற்று சிறப்பு உரை ஆற்றினார். கடந்த 25 வருடங்களில் சங்கம் செய்த சாதனைகளை பட்டியலிட்டு காட்டி எவ்வளவு மக்கள், குறிப்பாக ஏழை பெண்கள், சங்கத்தின் சேவைகளால் பயன் அடைந்தனர் என்பதையெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் ஒரு பரத நாட்டியமும் ஒரு கதகளி நடனமும் சிறப்பான முறையில் நடந்தது. அதை அடுத்து இரண்டு மாதர் சங்க உறுப்பினர்கள் சுமார் 15 நிமிடங்கள் நல்ல நகைச்சுவையை வழங்கினர். தொடர்ந்து ஒரு சங்க உறுப்பினர் " வளையோசை கலகலவென " என்ற திரைப்பட பாடலை கரோக்கியில் பாட போவதாக அறிவித்தார். உடனே விசாலம் " உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், spb யுடைய ஆண் பாடும் பகுதியை நான் பாடட்டுமா?" என்று தன்னபிக்கையுடன் கேட்டபோது அவரும் " நிச்சயமாக பாடுங்கள்.வாருங்கள்" என்றவுடன் மீண்டும் கரகோஷம் எழுந்தது. கரோக்கே ட்ராக் ஆரம்பமாகியது. தொடக்கத்தில் வரும் அருமையான புல்லாங்குழல் இசை முடிந்து சிக்கு சிக்கு சிக்கு சிக்கு என்ற சலங்கை போன்ற சத்தம் முடியும் நேரத்தில் சரியாக " வளையோசை கலகலவென" என்று அற்புதமாக ஆரம்பித்தாள் விசாலம். அதை போல சரணங்களையும் இனிமையாகவும் பாவத்துடனும் ரசித்து பாடினாள் விசாலம். இடையில் வரும் ஆணின் ஹம்மிங்கையும் விசாலம் விடவில்லை. பெண் பகுதியை பாடிய மாதர் சங்க உறுப்பினர் பெண் ஓரளவுக்கு நன்றாக பாடினார் என்று தான் சொல்லவேண்டும். பாடல் முடிந்தது. சபையில் இருந்த 500 பேர்களின் கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. பின்னர் வேறு சில கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. அந்த நேரத்தில் கமலா அரங்கத்தில் நுழைந்தாள். அவளையும் மேடையில் அவள் அம்மாவின் பக்கத்தில் அமரவைத்தனர். சாரதா கமலாவிடம் " நீங்கள் இல்லை என்ற குறையே தெரியாமல் உங்களின் அம்மா அசத்திவிட்டார்கள்" என்று புகழ்ந்தார். அப்போது அறிவிப்பாளர் " இப்போது நீங்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கமலா வந்து உங்களுக்கு ஒரு பாடலை வழங்குவார்கள்" என்று அறிவித்தார். கமலா மைக்கு முன்னால் வந்து நின்றாள். " ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலை பாட உள்ளேன். முதலில் நான் சோலோவாக பாடத்தான் நினைத்தேன்.ஆனால் என் அம்மா பாடிய பாடல்களை நீங்கள் மிகவும் ரசித்தீர்கள் என்பதால் இந்த பாடலை என் அம்மாவுடன் இணைந்து பாட ஆசை படுகிறேன், நீங்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தால்" என்றபோது மீண்டும் கரஒலி பலமாக ஒலித்தது. கரோக்கி ட்ராக் இல்லாமல் அம்மா பெண் இருவரும் சுருதி பெட்டியை வைத்துக்கொண்டு சுருதி பார்த்து கொண்டு பாடலை பாடினார்கள். ஒருவரை மாற்றி ஒருவர் இந்த பாடலை பாடியபோது கேட்டவர்களின் காதுகளில் தேன் பாய்ந்தது போலிருந்தது. அவ்வளவு கம்பீரம், இனிமை பாடல் வரிகளுக்கேற்ற குரல் பாவம். அம்மாவுக்கு சளைத்த பெண்ணல்ல என்பது போல கமலாவும் அவ்வளவு நேர்த்தியாக இனிமையாக பாடினாள். " எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்" என்ற சரணத்தை விசாலம், அந்த ஆலாபனையுடன், அவ்வளவு உருக்கமாக பாடினாள். பாடல் நிறைவு பெற்றதும் அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று அம்மாவையும் மகளையும் அவ்வளவு கைதட்டி ஆரவாரம் செய்து புகழ்ந்தார்கள்.

நிகழ்ச்சிகளின் நிறைவில் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விசாலத்திற்கு வெள்ளியில் செய்த ஒரு சின்ன வீணை சங்க தலைவி சாரதாவால் கொடுக்கப்பட்டது. பல மாதர்கள் கமலாவிடம் " 65 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கும், அருமையாக பாடும் உன் அம்மாவையும் நம் சங்கத்தில் சேர்த்துவிடு" என்று சொன்னபோது கமலாவின் பெருமையான கண்கள் அம்மாவின் பக்கம் சென்றது. விசாலத்தின் ஆழ்ந்த கண்கள் ஆகாயத்தை பார்த்த வண்ணம் லேசாக ( ஆனந்த) கண்ணீர் விட்டது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Mar-22, 1:13 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 156

மேலே