சாருலதா 5

நாட்கள் வேகமாக நகர்ந்தன.அவனும் வெற்றிகரமாக அவனது படிப்பை முடித்தான்.மேலும் மூன்றாண்டுகள் லண்டனில் வேலையத் தொடர வாய்ப்பளித்தார்கள். ஆனால் சிறு வயது முதலே அவனுக்கு பிறந்த மண்ணில் ....சொந்த நாட்டில் தொண்டாற்றத்தான் விருப்பம் அதிகமாக இருந்தது. ஏன்? அது அவன் லட்சியமாகவே மனதில் வேரூன்றி விருட்சமாய் விரிந்து இருந்தது. அவனது மூத்த ப்ரொபெஸர் Dr.ஹாரிசன் கேட்டுக்கொண்டதால் அங்கிருக்க சம்மதித்தான்.
"கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆயிடுச்சே...ஏதாவது விசேஷம் உண்டா?....எப்ப 'Good நியூஸ்' என்று கேள்விமேல் கேள்விகள்...போன் மேல் போன்கள்...
லதாவும் அவனும் எல்லா செக்கப்பும் செய்து கொண்டார்கள். இரண்டு பேரிடமும் ஒரு குறையும் இல்லை. பின் ஏன் இந்த தாமதம்? புரியவில்லை.லதாவோ விரதத்துக்கு மேல் விரதம்....பூஜைக்கு மேல் பூஜை... ம்ம்ம்...ஒரு பிரயோஜனமும் இல்லை.
" இங்க பாருடா செல்லம்...நமக்குன்னு இருந்தா... நமக்கு அது நிச்சயம் கிடைக்கும். நமக்கு இல்லைனா அது நமக்கு கிடைக்காது. ஓகேவா..."
"அதுக்கு இல்லீங்க .நான் வேண்ணா மலடியாவே இருந்துட்டு போறேன். ஆனா நீங்க அப்பாவா ஆகாம போறதுக்கு நான் காரணம் ஆயிட்டேன்னு நினைக்கும் போதுதான்...."என்று விசும்பினாள்.
"ச்சே....இது என்ன பேச்சு? ஒனக்கு ஒரு நியாயம். எனக்கொரு நியாயமா? ஏன் ஒன்ன அம்மாவா ஆக்கரத்துக்கு என்னால முடியலன்னு நான் நெனைச்சா?"
" அப்படியில்லீங்க....."
" இங்க பாரு லதா... நமக்கு கொழந்த பொறக்கட்டும். வேணாம்னு சொல்லல.பொறந்தா சந்தோஷம்தான். பொறக்கலைனா வருத்தம் இல்ல. அப்படி பொறக்கலைனா உனக்கு நான் கொழந்தை...எனக்கு நீ கொழந்தை. சரியா? இந்த ஒலகம் ஆயிரம் சொல்லும். இது முழுக்க முழுக்க நம் சொந்த விஷயம்.உனக்கும் எனக்கும் மட்டும்தான் நமக்குள்ள இருக்குற உறவு...அண்டர்ஸ்டாண்டிங் எல்லாம் நமக்கு மட்டும்தான் தெரியும். வேற யாருக்கும் தெரியவும் தெரியாது...புரியவும் புரியாது....புரியவும் வேண்டாம்.ரொம்ப சங்கடம் உனக்கு மட்டும்தான்.கஷ்டமா இருக்காடா செல்லம்..." என்றான் மெதுவாக.
"நான் ரொம்ப கொடுத்து வெச்சவங்க. ரொம்ப..ரொம்ப..புண்ணியம் செஞ்சவங்க.இல்லைனா ஒங்கள புருஷனா அடைஞ்சிருக்க முடியுமா? இதுகூட நான் செஞ்ச புண்ணியம்கூட இல்லீங்க.என் அப்பா அம்மா செஞ்ச புண்ணியங்க. என்னை நீங்க தப்பா நெனைக்கலையே..."
" இப்படி பேசினாத்தான் எனக்கு வருத்தமா இருக்கு.கோபம்...கோபமா வருது. இப்போதைக்கு அத மறந்திடு." என்று அவளை இறுக்க அணைத்துக்கொண்டான்.
விடிந்தது. சமையலை முடித்துவிட்டு...அவன் டேபிளில் கலைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கி வைத்த பொது ....ஒரு பழைய டைரி கிடைத்தது. ஒரு கணம் தயங்கி.....அதை திறந்தாள்.
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Mar-22, 9:36 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 72

மேலே