இன்பநலம் எல்லாம் எதிர்வருமே எஞ்ஞான்றும் இன்பமே காண்பாய் - இனிமை, தருமதீபிகை 982

நேரிசை வெண்பா

தெள்ளிய ஞானத் திருவுடையர் ஆகியே
உள்ளிய சீலம் உடனொழுகின் - ஒள்ளிய
இன்பநலம் எல்லாம் எதிர்வருமே எஞ்ஞான்றும்
இன்பமே காண்பாய் இனிது. 982

- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தெளிந்த ஞானத் திருவுடன் சீலம் தோய்ந்து ஒழுகி வருக; அவ்வாறு வரின் கருதிய சுகங்கள் யாவும் எதிரே பெருகி வரும்; என்றும் இன்ப நிலையமாய் இனிது வாழ்வாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவினால் மனிதப் பிறப்பு சிறப்படைந்து வந்துள்ளது. விலங்கினங்களினும் மனித இனம் உயர்ந்தது என நேர்ந்தது எதனால்? எதையும் கூர்ந்து பகுத்து நோக்கி ஓர்ந்துணரும் திறத்தினாலேயே மனிதன் யாண்டும் சிறந்து உயர்ந்து நிற்கிறான்.

உலக நிலைகளையும், கலைகளையும் ஆராய்ந்தறிபவர் அறிஞர் என விளங்கி வருகின்றார். தான் மருவி நின்ற வழிகளிலேயே மனிதன் அறிவாளியாய் வெளியே தெரிய நேர்கிறான். நெறிமுறையோடு சேர்ந்த பொழுதுதான் அறிவு பெருமை பெறுகிறது; சரியான வழியில் சேரவில்லையானால் அது பரிதாபமாய் இழிவுறுகிறது. நல்ல நெறியை விட்டு விலகினால் அது புல்லறிவு, புலையறிவு, பொய்யறிவு எனப் பழிபடுகின்றது. நல்வழி நழுவின் பல்வழிகளிலும் படுதுயரங்களே கடிது அடைய வருகின்றன.

தனக்கு யாதொரு அல்லலும் நேராமல் எவன் நெறியே ஒழுகி வருகிறானோ அவனே நல்ல அறிவுடையவன் ஆகிறான். பின்னே நேர்வதை முன்னதாகக் கூர்மையாய் அறிந்து சீர்மையாய் நடந்து கொள்பவர் சிறந்த மேதைகளாய் உயர்ந்து வருகிறார். உயிர்க்குறுதி புரிவது உயர் அறிவாகிறது.

அறிவுடையார் ஆவ(து) அறிவார்; அறிவிலார்
அஃதறி கல்லா தவர். 427 அறிவுடைமை

அறிவுடையவர் யார்? அறிவில்லாதவர் எவர்? என்று சரியாகத் தெரிய விரும்புவார்க்கு வள்ளுவர் இவ்வாறு தெளிவாய் விளக்கியிருக்கிறார். எதை அறிந்தால் உயிர் துயர் நீங்கி உய்தி பெறுமோ அதை உரிமையாய் அறிவதே ஆவதை அறிவதாம்.

ஆகாததை அவாவி அறிந்து மோகமாயிழிந்து வந்ததனாலேதான் எல்லாக் கேடுகளும் வேகமாய் விளைந்து வந்துள்ளன. துன்ப விளைவையே இன்பமாக விழைந்து வருவது ஈனமருளாய் விரிந்து வருகிறது. மய்யல் விளைவுகள் வெய்ய துயர்களாகின்றன.

அழிதுயரங்களை நாளும் வாழ்வில் அறிந்திருந்தும் அல்லல் தீரும் வழியை நாடாமல் பொல்லாத புலைகளிலேயே புரண்டு மாந்தர் மருண்டுழலுவது மடமைக் கொடுமையாய் நிற்கிறது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 2

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. 3

- முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே 15

- எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை, பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்

நல்ல தெய்வ அறிவையும் பொல்லாத பேய் அறிவையும் திருமூலர் இவ்வாறு விளக்கியிருக்கிறார். அறிய உரியதை அறிபவன் பெரிய ஞானியாகிறான்; அல்லாதவைகளை அறிபவன் எவ்வளவு வல்லவனானாலும் அல்லல்களையே அடைகின்றான்.

ஆன்மாவைத் தன்னை என்றது. தனது சுய சொரூபமான சீவனையறிபவன் திவ்விய நிலையை எய்துகிறான். நான் என்னும் சொல்லுக்கு உரிய பொருள் உயிரே. அதனை மறந்து உடலையே கருதி ஊனநிலைகளில் இழிந்துழல்வது ஞான சூனியமாய்ப் வளர்ந்து வருகிறது. யான், எனது என மயலாய் மருவி வருகிற அகங்கார மமகாரங்கள் ஒழிந்த போதுதான் உயிர் உயர் கதியுறுகிறது. மாய மருள் நீங்கினார் தூய அருள் தோய்கின்றார்.

பிரயாகை அயலே ஒருமுறை இருபதினாயிரம் பேர்கள் கூடிய பேரவையில் போதிமாதவன் போதனை புரிந்தான். அந்த ஞான சீலரது அமுத மொழிகளை அனைவரும் ஆவலோடு கேட்டு நின்றனர். அப்பொழுது புத்தர் ஒரு கேள்வி கேட்டார். பிறவித் துயர்கள் நீங்கிப் பேரின்ப வீட்டையடைய வுரியவன் இந்தக் கூட்டத்தில் யாராவது உண்டா? என்று விநயமாய் வினவினார். யாரும் பதில் கூற முடியாமல் எல்லாரும் மவுனமாயிருந்தார். முதிர்ந்த ஒரு கிழவர் எழுந்தார்: "நான் போனால் போகலாம்” என்று மொழிந்து நின்றார். யாவரும் வியந்து திகைத்தார். புத்தர் வந்தார்; அந்தச் சொல்லின் பொருளைத் தெளிவாக்கியருளினார். நானென்னும் செருக்கு அடியோடு அற்றுப் போனால் அவன் பேரின்ப வீட்டுக்குக் குடி போகின்றான்; இந்த உண்மை எண்மையாய் ஈண்டு உணர வந்தது என்று உணர்த்தியருளினார்.

மையலான மாய மருள்கள் ஒருவிய அளவு தூய இன்பங்கள் பெருகி வருகின்றன. புலையான நிலையில் புலன்களால் அனுபவிப்பன இனிய சுகம் போல் தோன்றினும் அவை கொடிய துக்கங்களே; உள்ளம் தூய்மையாய் வருவது உயர் பேரின்பமாம்.

அழிவில்லாத அதிசய ஆனந்தத்தை அடைவதே விழுமிய அறிவின் பயனாம். தெளிவான ஞான ஒளியில் அது வெளியாகிறது. புனித உணர்வு தோய்ந்து பூரண சுகம் தோய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Mar-22, 8:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே