உயிர்க்கு நிலையான ஓரின்ப வீடு பெயர்க்கு நிலையாய்ப் பெறும் - வீடு, தருமதீபிகை 992

நேரிசை வெண்பா

கூட்டுள் இருக்கும் குருவிபோல் இவ்வுடம்பாம்
வீட்டுள் இருக்கும் விரகினால் - பாட்டுள்
உயிர்க்கு நிலையான ஓரின்ப வீடு
பெயர்க்கு நிலையாய்ப் பெறும். 992

- வீடு, தருமதீபிகை, கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:.

கூட்டுள் கூடியிருக்கும் குருவி போல் இந்த உடம்பாகிய வீட்டுள் உயிர் குடியிருக்கிறது; ஆகவே அந்த உறவுரிமையால் உயிர்க்கு என்றும் நிலையான பேரின்ப வுலகமும் வீடு என்னும் பெயரை மேவி நின்றது; அதனை நாடி அடைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகப் பறவையும் உயிர்ப் பறவையும் ஒருங்கே தெரிய வந்தன. கூடும் வீடும் சோடியாய் நாடி அறிய நின்றன. நிலையில்லாத கூடும் நிலையுடைய வீடும் நேரே காண வந்தன.

உயிர் உணர்வுடையது; உடலோடு கூடி வாழ்வது; இந்த வாழ்வு வினைப்போகங்களை அனுபவிக்க நேர்ந்தது; எவ்வழியும் இடர்களையுடையதாதலால் பிறவி துயரம் என வந்தது. பிறந்து இறந்து ஓர்ந்துழந்து வருவது ஒழியாத துன்பமேயென்று தெளிந்து கொண்ட ஞானிகள் அதனை அறவே நீங்கி உய்தி பெற நேர்கின்றார். துயர்கள் யாவுமொழிந்து அமைதியாய் உயிர் தங்கியிருக்கும் இடம் பேரின்ப வீடு எனப் பேர் பெற்றுள்ளது. நித்திய ஆனந்த நிலையம் உய்த்து உணர வந்தது.

பரகதி, முத்தி, மோட்சம் என வருவன காரணக் குறிகளைப் பூரணமாய்க் காட்டி நிற்கின்றன. துயரான இழிபுலைகளை எல்லாம் கடந்து உயர்வான சுகநிலையை உயிரடைந்திருப்பது ஆனந்தத் தலம், அதிசய உலகம் என அமைந்தது.

கேவலம் கைவலம் கதிசித்தி மோக்கம்
அமுதம் பரம்சிவம் முத்தியும் ஆகும்.- பிங்கலங்தை

மோட்சத்துக்கு இவ்வாறு பேர்கள் அமைந்துள்ளன.

பாசங்கள் யாவும் கழிந்து இரு வினைகளும் அறவே நீங்கிய பரிசுத்த ஞானிகள் அடையவுரியதாதலால் அந்த முத்தி நிலம் அதிசய மகிமைகள் உடையதாய்த் துதி கொண்டு நின்றது.

தேவராசனான இந்திரன் ஒரு முறை சரபங்க முனிவர்பால் வந்தான்; அவரது அரிய தவநிலையை வியந்து புகழ்ந்தான்; தன்னோடு பொன்னுலகத்திற்கு வரும்படி விரும்பி வேண்டினான். அந்த வேண்டுகோளுக்கு அவர் இசையவில்லை. உனது உலகம் இனிய சுகபோகங்களைத் தருவது; ஆயினும் நிலையில்லாதது; ஆதலால் நிலையான பரமபதமே நான் அடைய வுரியது' என்று அவர் கூறியருளினார். அன்று அவர் உரைத்த அவ்வுரை ஆழ்ந்த பொருள்களையுடையன. அயலே காண வருகிறோம்.

கலி விருத்தம்
(புளிமா 4)

சிறுகா லையிலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம்வே றுபடா,
உறுகால் கிளர்பூ தமெலாம் உகினும்
மறுகா, நெறிஎய்து வென்;வான் உடையாய்! 20

- சரபங்கன் பிறப்பு நீங்கு படலம், ஆரணிய காண்டம், இராமாயணம்

வானவர்கோனை நோக்கி மாதவர் இவ்வாறு கூறியுள்ளார். முத்தித் தலத்தைக் குறித்து முத்தர் மொழிந்துள்ள வித்தக மொழிகள் உய்த்துணரத் தக்கன. பகல் இரவு என்னும் காலநிலைகள் யாதும் இல்லாதது; என்றும் நிலையானது; எவ்வழியும் செவ்வையாய்த் திவ்விய மகிமையுடையது; நிலம், நீர் முதலிய பூதங்கள் யாவும் அழியினும் யாதொரு அழிவும் நேராமல் ஈசன் போல் எழில் மிகுந்திருப்பது என மொழிந்துள்ளார். வீட்டைக் குறித்து விளக்கியிருப்பது வியப்பை விளைத்துளது. இதனால் அதன் விழுமிய நிலைகளை ஓரளவு யூகித்து உறுதிநலங்களை உரிமையோடு உணர்ந்து கொள்ளுகிறோம்.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

இருவகை வினைகளு மில்ல திவ்வழி
வருவகை யிலாதது மறுவின் மாதவர்
பெருவழி யரச்செலும் பெயர்வில் சூளிகைக்
கொருவழி 1யல்லதிங் குரைப்ப தில்லையே. 1

கடையிலெண் குணத்தது காம 2ராகர்கள்
இடைநனி யிலாத 3தில் லியற்கை யில்லது
மிடையொடு விழைவுவே ரறுத்த வீரர்கள்
அடைவதோர் நிலைபிறர்க் கறிய லாகுமோ. 5 முத்தி நெறி

மணிமலர்ந் 1துமிழொளி வனப்புஞ் சந்தனத்
துணிமலர்ந் துமிழ்தருந் 2தண்மைத் தோற்றமும்
நணிமலர் நாற்றமு மென்ன வன்னதால்
அணிவரு சிவகதி யாவ தின்பமே. 6

- வீடுபேற்றின் இயல்பு, முத்திச்சருக்கம், சூளாமணி

பரகதி நிலையை இவை இவ்வாறு குறித்துள்ளன.

அரிய புண்ணியமும் பொருந்தாமல் பிரிந்த போதுதான் உயிர் உயர்ந்த முத்தியை அடைகிறது. புண்ணியம் இருந்தால் அதன் பயனாகிய இனிய போகங்களையூட்டித் திவ்விய தேகங்களில் ஆட்டி வரும்; அவ்வரவும் ஒருவிய அளவே வரமான பரகதியை மருவ நேரும். வினை ஒழிவே விழுமிய வீடாம்.

இறைவன் போலென்றும் நிலையாய் இன்ப மயமாயுள்ளதையே பரமபதம், முத்தி, மோட்சம், வீடு என இன்னவாறு கூறி வருகிறோம். இதனை யாரும் எளிதே அடைய முடியாது. பற்று யாதுமில்லாமல் பரமன் போல் வரமான நிலையை மருவிய ஆன்மாதான் பிறவி தீர்ந்து பேரின்ப வீட்டை அடைய நேர்கின்றது. வீடு காண்பவர் வேறு காண்கிலர்.

உலகப் புலைகளான எல்லா ஆசைகளில் இருந்தும் அறவே விடுபட்ட உயிர்க்குத்தான் மேலான வீடு உரிமையாம் என்பதை அப்பேரே உணர்த்தி அதன் அருமை பெருமைகளை விளக்கியுளது.

விட்டவனுக்கே வீடு;
தொட்டவனுக்கோ காடு.

என்பது பழமொழி. பற்று விட்டவன் பரமானந்த விட்டில் சுகமாயமர்ந்தான்; அதனைத் தொட்டவன் பிறவிக் காட்டில் அலைந்து பெருந்துயரங்களையே அடைகிறான் என்பதை இம் முதுமொழி மதி தெளிய விளக்கிவிட்டு நிலையைத் துலக்கியுள்ளது.

குறளடி நான்காய் வருதலின் வஞ்சித்துறை

வீடுமின் முற்றவும்
வீடுசெய்(து) உம்உயிர்
வீடுடை யானிடை
வீடு செய்ம்மினே. 1

அற்றது பற்றெனில்
உற்றது வீடுயிர்
செற்றது மன்உறில்
அற்றிறை பற்றே. 5

பற்றிலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்
பற்றிலை யாயவன்
முற்றில் அடங்கே. 6

- உலகிற்கு உபதேசம், நம்மாழ்வார் திருவாய் மொழி, நான்காம் ஆயிரம்

பேரின்ப வீட்டை அடையும்படி நம்மாழ்வார் இவ்வாறு போதித்திருக்கிறார்.

ஈசன் யாதொரு பற்றும் இல்லாதவன்; சீவனும் அவ்வாறு பற்றின்றி நின்றால் அந்த ஈசனை உடனே அடையலாம்; பற்றற்றது எனில் வீடு உற்றது; இந்த உண்மையை உணர்ந்து உய்தி பெறுக என உணர்த்தியுள்ளார்.

தான் பற்றியிருந்த பற்றை ஒருவன் நீங்கினால் வீடு வந்தவனை உரிமையாய்ப் பற்றிக் கொள்ளும்; எனவே பற்று இன்மைக்கும் வீட்டுக்கும் உள்ள ஒற்றுமையை நாம் உணர்ந்து கொள்ளுகிறோம். பந்தம் விடலே அந்தமில் இன்பமாம்.

மயலான மாயத் தொடர்புகளால் உயிர் படுகிற துயர நிலைகளையும், அது உய்தி பெறும் வழியையும் தெளிவாயறிதலால் ஞானம் திவ்விய ஒளி எனச் சிறந்து நின்றது. மெய்யான ஞானம் மேவிய பொழுதே பொய்யான புலைகள் புறம் ஒழிந்து புனிதமான உயர்கதி இனிது மருவுகின்றது.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

உள்பொரு ளிதுவென வுணர்தன் ஞானமாந்
தௌ்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம்
விள்ளற விருமையும் விளங்கத் தன்னுளே
யொள்ளிதிற் றரித்தலை யொழுக்க மென்பவே. 247

கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழ
னீடிய வினைமர நிரைத்துச் சுட்டிட
வீடெனப் படும்வினை விடுதல் பெற்ற தங்
காடெழிற் றோளினா யநந்த நான்மையே. 248

- முத்தி இலம்பகம், சீவகசிந்தாமணி

ஞானம், காட்சி, ஒழுக்கம் ஆகிய இந்த மூன்று ஒளிகளும் ஒருங்கே எழுந்த பொழுது இரு வினைகளும் அறவே அழிந்து உயிர் அழிவில்லாத ஆனந்த வீட்டை அடைகிறது என இது காட்டியுளது. வினை விடுதல் உற்றது வீடு பெற்றது என்றது சீவனுடைய முத்தி நிலையை உய்த்துணரச் செய்தது. கேடான பற்று வீடலே வீடு ஆகும்.

நேரிசை வெண்பா

கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப் படுவ(து) அருளே — அடுத்தடுத்(து)
உண்ணப் படுவது நன்ஞானம் எப்பொழுதும்
எண்ணப் படுவது வீடு. 189

- அறநெறிச்சாரம்

தீவினைகள் நீங்கி, அருள் ஞானம் ஓங்கி, எப்பொழுதும் வீட்டையே கருதி உய்க என முனைப்பாடியார் இப்படி நினைப்பூட்டியிருக்கிறார். துன்ப வீடு விட்டு இன்ப வீடு காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Mar-22, 9:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே