நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவது இலர் – நாலடியார் 182

நேரிசை வெண்பா
(’ற்’ ‘ச்’ வல்லின எதுகை)

இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ(து) இலர் 182

- பெருமை, நாலடியார்

பொருளுரை:

மனைவாழ்க்கைச் சார்பினால் களித்திருக்கின்றேம்; உலகத்தில் அதற்கு வேண்டிய பொன் முதலிய எல்லா நலங்களிலும் நிறைத்திருக்கின்றேம் என்று கருதி அறிவிலா மாந்தர் அவற்றின் பொய்ம்மையை மறந்து ஒழுகுவர்;

ஆனால், அச்சார்புகள் நிலைத்திருப்பன போற் காணப்பட்டுப் பின் நிலையாமற் போம் என்று உணர்ந்த மேலோர் எக்காலத்திலும் அவற்றை விரும்புதலின்றி யொழுகுவர்.

கருத்து:

எல்லா உலக நலங்களும் ஒருங்கமைந்த காலத்தும், அவற்றிற் பற்றின்றி நிற்றலே பெருந்தன்மை யாகும்.

விளக்கம்:

ஏமாந்தல் – மிக இன்புறுதல்; அமைதல் - குறைவின்றியிருத்தல். இரண்டும் தெளிவின் பொருட்டு இறந்த காலத்தில் வந்தன; "இயற்கையுந் தெளிவுங் கிளக்குங்காலை"1 என்பதனால் இது முடிக்கப்படும்.

பேதையாரென்றதனானும் உணர்ந்தார் என்றதனானும் அவ்வவற்றின் உயர்வு தாழ்வுகள் விளங்கின. தம் இளமைப்பருவத்தும் அனைத்து நலங்களும் வாய்ந்த காலத்தும் பரிவதிலர் என்றற்கு என்றும் என்றார்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-22, 8:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே