மாக்கல் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
நேரிசை வெண்பா
மாக்கல் விநாயகனை மாந்தர் வணங்கிடவே
ஆக்கம் அளிப்பானே அண்ணலும் - யாக்கை
நிலையாமை எண்ணி விநாயகனை ஏந்தல்
தலைவனை தாள்பணிந்து போற்று! 1
ஆக்கம் அளிக்கின்ற அண்ணலாம் ஏற்றமிகு
மாக்கல் விநாயகனை மாந்தரெலாம் - வாக்குமெய்
யால்வணங்க நன்மையெலாம் யானைமுகன் நல்குவான்;
ஆல்போல் தழைக்கும் குலம்! 2
சந்தன குங்குமப் பொட்டிட்டு சாந்தமாய்
உந்தி விநாயகன் உட்கார்ந்தே - வந்தனம்
செய்வோர்க்கு எந்நாளும் செய்திடுவான் ஏற்றம்;நாம்
உய்ய அவன்தாள் தொழு! 3
விநாயகர் பட உதவி - தினமலர்

