இன்ப மயமாம் இறையை மருவியுறின் துன்பம் முழுதும் தொலையும் - இனிமை, தருமதீபிகை 984
நேரிசை வெண்பா
இன்ப மயமாம் இறையை மருவியுறின்
துன்பம் முழுதும் தொலையுமே - இன்ப
நிலையை அறிந்து நினைவில் உயர்ந்து
தலைமை யுறுக தனித்து. 984
- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இன்ப மயமான இறைவனை மருவிவரின் துன்பம் முழுவதும் தொலைந்து போகும்; எவ்வழியும் இன்பமே விளைந்து வரும்; அந்த அதிசய ஆனந்த நிலையை விரைந்து பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
அகில சராசரங்களுக்கும் தலைமையாய் ஒரு பொருள் நிலவியுள்ளது. அது ஒன்றுதான் என்.றும் நிலையானது; நித்திய சத்தியமாய் நிலைத்து யாண்டும் ஆனந்த மயமாய் அமர்ந்திருக்கிறது. சூரியனிடமிருந்து ஒளி பரந்து வருதல்போல் அந்தப் பரஞ்சோதியிடமிருந்தே சகல சீவ கோடிகளும் தோன்றியிருக்கின்றன. பிரிந்து போன உயிரினங்கள் மாசு படிந்தமையால் ஈசனை அடைய முடியாமல் அயலே கடையாயலைய நேர்ந்தன. அல்லலும் அவலமும் எல்லையில்லாதனவாய் எங்கும் பொங்கி வர இழிந்து நிற்கின்றன. இழி நிலைகள் பழி வழிகளால் வந்தன.
சீவர்கள் அடைகிற துயரங்கள் யாவும் தீவினைகளால் விளைந்தனவே; நினைவும் சொல்லும் செயலும் நல்ல வழிகளிலேயே பழகி வந்தவர் எல்லா நிலைகளிலும் இன்பங்களை எய்துகின்றார்; பொல்லாத புலைகளில் பழகினவர் யாண்டும் அல்லல்களையே அடைகின்றார். வினைகளின் விளைவை ஞானிகள் நன்கு தெரிந்து கொள்வதால் உள்ளம் உரை செயல்களை ஒருங்கே அடக்கி உயர்ந்த பேரின்ப நிலையைப் பெறுகின்றனர்.
வஞ்சித்துறை
உள்ளம் உரை,செயல்
உள்ளயிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை
உள்ளில் ஒடுங்கே. (திருவாய்மொழி, 1, 2-8)
தம்முடைய மனம் மொழி மெய்களை ஒடுக்கி நம்மாழ்வார் பரமனோடு ஒருமையாய் மருவி யிருந்துள்ளமையை இவ்வுரையால் உணர்ந்து கொள்ளுகிறோம். தனிமையில் ஒதுங்கி இனிமையை நுகர்ந்த தவயோகிகளில் இவர் தலைசிறந்து நிற்கின்றார். இவரது ஆன்ம அனுபவம் அதிசய மேன்மையுடையது.
புலன் நுகர்ச்சிகளிலேயே உலக மாந்தர் இன்பங்களைக் கண்டு வருகின்றனர்; பசி, காமம் என்னும் இருவகை நோயால் எவ்வழியும் சீவர்கள் வருந்தி வருதலால் அந்தப் பிணிகளுக்கு மருந்துபோல் அருந்தல் பொருந்தல்கள் அமைந்திருக்கின்றன. நோய்க்கு மருந்தாய் நேர்ந்தவைகளே இன்பங்கள் என்.று வாய்க்கு மொழிய வந்துள்ளன.
பொறி நசை எவரையும் வெறியராக்கி விடவே பித்தர்களாயிழிந்து மக்கள் எங்கும் பேதைகளாய் உழலுகின்றனர். நெறி நின்று பொறிகளை வென்றவர் தத்துவ ஞானிகளாய்த் தலைசிறந்த உத்தம நிலைகளையடைந்து ஒளிமிகுந்திருக்கின்றனர்.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே. 2
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே. 3
- எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல், பத்தாம் திருமுறை, திருமந்திரம்
ஞானிகளுடைய புனித நிலைகளை இவை இனிது காட்டியுள்ளன. தத்துவக் காட்சிகள் உய்த்துணரத் தக்கன.
உலக ஆசைகளில் புலையாய் ஓடியுழலும் அளவு வினைகள் நீடி வரும்; அதனால் எவ்வழியும் தொலையாத துன்பங்கள் தொடர்ந்து உயிர்களை வதைத்து வருகின்றன.
கொடிய துயர்களின் விளைவுகளை ஞானிகள் தெளிவாய்த் தெரிந்து பொய்யான புலைகளை ஒருவி மெய்யான நிலையில் மேவி நிற்கின்றனர். அந்த நிலையில் மேலான பேரின்பங்கள் விழைந்து வருதலால் அவர் உவந்து திகழ்கின்றார்
உயிரை விடாமல் பற்றி நின்ற துயர்கள் விட்டொழியவே அது உயர் பரமாய் ஒளி மிகப் பெறுகிறது. தன் உயிர்க்கு நலமாய் உறுதியைச் செய்து கொள்பவன் உயர்ந்த மகானாய்ச் சிறந்து திகழ்கிறான். அங்ஙனம் செய்யாதவன் இழிந்த பேதையாய்க் கழிந்து ஒழிகிறான். உணர்வு ஒழிய உயர்வுகள் ஒழிந்தன.
மனிதப் பிறவி சிறந்த அறிவால் உயர்ந்து வந்துள்ளது அரிய அந்த அறிவுக்கு உரிய பயனை அடைந்து கொள்ள வேண்டும். எதையடைந்தால் எல்லாத் துன்பங்களும் ஒருங்கே ஒழிந்து போமோ அதை அடைவதே அறிவாம். அங்ஙனம் அடையாதொழியின் அது கடையாயிழிந்த வறிதே கடிது அழியும்.
கற்றதனால் ஆய பயனென்? 2 கடவுள் வாழ்த்து
அறிவினான் ஆகுவ(து) உண்டோ? 315 இன்னா செய்யாமை
கல்வியையும், அறிவையும் நேரே தூக்கி நிறுத்தி உலகத்தை நோக்கி இரண்டு கேள்விகளை வள்ளுவர் இவ்வாறு கேட்டிருக்கிறார். மதியுடைய மனிதன் பதில் கூற வேண்டும் என்பது விதி. சிந்தித்து உய்யுமாறு இந்தவாறு விந்தையாய்ப் போதித்துள்ளார்.
வாலறிவன் ஆன இறைவனைக் கருதி யுருகுவதே கல்விக்குப் பயன்; சீவர்களுக்கு யாதும் இடர் புரியாமல் யாண்டும் இதம் செய்வதே அறிவுக்குப் பயன் என்பதை இவை தெரியச் செய்துள்ளன. நல்ல பயன்களை இழந்த பொழுது கல்வியும், அறிவும் பொல்லாத வழிகளில் புலையாட நேர்ந்து இழிவுறுகின்றன.
உள்ளே கபட வஞ்சனைகளை நெஞ்சம் துணிந்து செய்து கொண்டு வெளியே நல்லவர்களைப் போல் நடிக்கின்ற பொல்லாதவர்களை எங்கும் பார்த்து இரங்கி வருந்துகின்றோம்.
தங்கள் கல்வியறிவைப் புலையான வழிகளில் செலுத்தித் தலைவர்கள் என்று களித்து வருகிற இவர் தமக்கும் பிறர்க்கும் தொலையாத தொல்லைகளையே விளைத்து வருகின்றனர். ’கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்று தாயுமானவர் சொல்லியுள்ள பாடல் இப் பொல்லாதவர்களைக் காணும் போதெல்லாம் நேரே காட்சியாய் ஞாபகத்திற்கு வருகிறது.
Since learned men had appeared, honest men were nowhere to be found. [Rousseau]
கல்வியாளர் தோன்றின பின்பு நல்ல யோக்கியமுள்ளவரை எங்கும் காணமுடியவில்லை என்று ரூசோ என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இயல்பாகவே நல்ல உள்ளம் உடையவர் கற்ற கல்விதான் நலம் பல தருகின்றன; கெட்டவர் கற்றால் கேடும் செருக்குமே கிளர்ந்து வருகின்றன. புல்லறிவு புலையாய் விரிகிறது.
Knowledge is proud that he has learned so much; Wisdom is humble that he knows no more. [Cowper]
அதிகம் கற்றிருக்கிறோம் என்று செருக்குவது, அறிவு: யாதும் அறியவில்லை என்று அடங்கியிருப்பது ஞானம் என்னும் இது ஈண்டு அறிய வுரியது. அறிவாளிக்கும் ஞானிக்கும் உள்ள வேற்றுமையை இங்கே நன்கு தெரிகிறோம். நூல்களைக் கல்லாமலே சிறந்த ஞானிகளாய்ப் பலர் உயர்ந்திருக்கின்றனர். கற்றும் கடையராய்ப் பலர் இழிந்து ஒழிந்து போயுள்ளனர்.
உள்ளம் புனிதமாயிருத்தலால் ஞானி வானசோதி போல் ஒளிவீசி நிற்கிறான். அவன் எதிரே கல்விமான்கள் மின்மினிகள் போல் மெலிந்து மழுங்கிப் புல்லிதாய் ஒழிகின்றனர்.
No man is the wiser for his learning; wit and wisdom are born with a man. (Selden)
தன் கல்வியால் எவனும் ஞானி ஆக முடியாது; விவேகமும் ஞானமும் மனிதனோடு கூடவே பிறந்து வருவன என இது குறித்துளது. இனிய இயல்பே புனித விவேகம் ஆகிறது.
இதமான மனநலம் உடையவனே மகானாய் வருகிறான். இதய பரிபாகத்தில் ஞானம் உதயம் ஆகிறது. உள்ளம் அன்பு சுரந்து பண்பாய் உருகிவரின் அங்கேயே இன்பம் பெருகி வரும்.
இரக்கம், கருணை என்பன ஞான நீர்மைகள். புல்லும் நோகாமல் தண்ணளி புரிந்து வருபவர் நல்ல புண்ணிய சீலராய்ப் .பொலிந்து எவ்வழியும் திவ்விய தேசு மிகுந்து சிறந்து வருகிறார்.
மனம் கனிந்து வரின் மனிதன் புனிதனாய் உயர்ந்து வருகிறான். அது கொடுமையானால் அவன் மிருகமாயிழிந்து போகிறான். நீர்மை அளவே மேன்மைகள் விளைகின்றன.
Worse than a bloody hand is a hard heart. [Shelley]
கொலை புரிகிற கொடிய கையினும் கடினமான இதயம் மிகவும் கொடியது என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு அறியவுரியது. இனிய இதயம் புனித மனிதனை அருளுகிறது.
மனம் தூய்மையாய் அமைந்த போதுதான் தூய்மையான கடவுளை அடைய முடியும். அரிய பொருள் உரிய அருளால் உறுகிறது. உள்ளத்தைப் புனிதமாய் இனிமை ஆக்கி உயர்கதி காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.