விட்ட முதலை விடாது தொட்ட பொழுதே அல்லல் நீங்கி ஆனந்தம் ஆகும் - வீடு, தருமதீபிகை 994

நேரிசை வெண்பா

விட்ட முதலை விடாது விரைந்துபோய்த்
தொட்ட பொழுதே தொடர்பாகப் - பட்டுவந்த
அல்லலெலாம் நீங்கிநல் ஆனந்தம் ஆகுமே
எல்லை தெரிக எதிர். 994

- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

இழந்து விட்ட தனி முதலை மீண்டும் போய் உயிர் அடைந்த பொழுதுதான் துயரங்கள் எல்லாம் நீங்கி உயர்வான பேரின்பம் ஓங்கி வரும்; உரிமையை உணர்ந்து பெறுவதே பெருமையாம்; இந்த உண்மையை ஊன்றி உணர்ந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்

உயிர் துயர் தீர்ந்து உயர் பேரின்பம் அடையும் வழியை இது விழி தெரிய விளக்கியுள்ளது. பரம்பொருளை முதல் என்றது. எல்லாவற்றிற்கும் மூல முதலாதலால் அந்தக் கோலமும் சீலமும் தெரிய வந்தது. முழு முதல் பரமனை நழுவியதிலிருந்தே துயரங்கள் அடர்ந்து தொடர்ந்து வர நேர்ந்தன. இன்ப முதலை இழந்த நாள் முதல் துன்பங்கள் சூழ்ந்து கொண்டன.

விட்ட என்றது அரிய இனிய பெரிய திருவை இழந்து பிறவிக்கடலில் விழுந்து பெருந் துயரங்களில் அழுந்தி இழிந்துழலுகிற இழிவு நிலைகளை எண்ணியுணர வந்தது. இழவை உணராமல் இழிவுறுவது ஈன மருளாய்ப் பெருகியுளது.

ஈசன் எவ்வழியும் எல்லை காண முடியாத பேரின்பக் கடல். அமுத மயமான அந்த ஆனந்த சாகரத்தைப் பிரிந்து வந்ததனாலேதான் பல வகையான உடல்களை எடுத்துப் பிறவித் துயரங்களைச் சீவன் அடைய நேர்ந்தது. பிழையாய்ப் பிரிந்து வந்த நிலையைத் தெரிந்து விரைந்ததனை அடைந்து கொண்டாலன்றி அல்லல்கள் யாதும் யாண்டும் நீங்காது. ஈசனைப் பிரியவே நீசப் பிறவிகள் நெடிது தொடர்ந்து நாசத் துயர்கள் படர்ந்தன.

நேரான வழியை விட்டு விலகினவன் மாறான காட்டில் புகுந்து திசை தெரியாமல் மருண்டலைந்து மறுகுவது போல் மேலான பரமனை விட்டு விலகின சீவன் கீழான பிறவிக் காட் டில் இழிந்து எவ்வழியும் புலையாயலமந்து உழலுகின்றான்.

தன் கைப்பொருளை வைத்த இடத்தை ஒருவன் மறந்து போனான்; அது அரிய விலையுடைய பெரிய வயிர மணி, உயிர்க்குயிரான அதனைக் காணாமையால் துயரோடு யாண்டும் ஏங்கியலைந்தான்; ஆண்டுகள் பல கழிந்தன; எங்கும் அகப்படவில்லை; அல்லலோடு வருந்தி வந்த அவனுக்கு முன்பு புதைத்து வைத்த இடம் சிறிது நினைவுக்கு வந்து விரைந்தோடித் தோண்டினான்; மணியைக் கண்டான், பேரானந்தம் கொண்டான். அவ்வாறே பரம்பொருளை இழந்த சீவன் பிரிந்த நிலையைத் தெரிந்து கொண்டால் பேரின்பம் அடைந்து கொள்ளும். தெரியாத வரையும் பிரியாத துயரமே பெருகி வரும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் காய்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மனைக்குள் வைத்தபண் டங்களை
..மறந்தவன் வருடம்நூ(று) அழுதாலும்
நினைத்து ணர்ந்தபின் கிட்டுமப்
..படிஇந்த நின்மல ஆன்மாவும்
அனர்த்த மானதன் மறதியைக்
..கெடுத்துத்தன் அறிவினால் காணாமல்
கனத்த கர்மங்கள் நூறுகம்
..செய்யினும் காணுமோ? காணாதே. 71

- சந்தேகம் தெளிதல் படலம், கைவல்லியம்

தனது உண்மையான ஆன்ம நிலையை மறந்து புன்மையாய்த் திரிந்துழலும் மாய மருள் தூய ஞான ஒளியாலன்றி வேறு எவ்வழியாலும் தொலையாது என்பதை உவமானத்தோடு இது உணர்த்தியுள்ளது.

மெய்யுணர்வு மேவிய பொழுது மெய்ப்பொருள் கைப்பொருளாய் வருகிறது. உலக வுறவுகள் யாவும் புலையான பொய்ப் பொருள்களாய்ப் பொன்றி ஒழிகின்றன. நிலையான மூலமுதலை அறியவே நெஞ்சம் கரைந்து உருகுகின்றனர். இறைவனோடு உரிமையாய் உறவாடி முறையீடு செய்கின்றனர்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே
பெருகிய கருணைவா க்கடலே
நற்றவத் துணையே ஆனந்தக் கடலே
ஞாதுரு ஞானஞே யங்கள்
அற்றவர்க் கறாத நட்புடைக் கலப்பே
அநேகமாய் நின்னடிக் கன்பு
கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக்
கண்டிடும் பொருட்டன்றோ காணே. 8

அன்றுநால் வருக்கும் ஒளிநெறி காட்டும்
அன்புடைச் சோதியே செம்பொன்
மன்றுள்முக் கண்ணுங் காளகண் டமுமாய்
வயங்கிய வானமே என்னுள்
துன்றுகூ ரிருளைத் துரந்திடும் மதியே
துன்பமும் இன்பமு மாகி
நின்றவா தனையைக் கடந்தவர் நினைவே
நேசமே நின்பரம் யானே. 9 - 22.

- சிவன்செயல், தாயுமானவர்

ஈசனிடம் உறவாய் உருகித் தாயுமானவர் நேசம் கொண்டாடியுள்ள நீர்மையை இந்த வாசகங்களால் நாம் ஓர்ந்துணர்ந்து கொள்கிறோம். கல்வி, கேள்வி, அறிவு முதலிய பெரிய விவேகங்களுக்கு உரிய பயன் அரிய பரம்பொருளை உணர்ந்து உய்தி பெறுவதேயாம் என இவர் உணர்த்தியிருப்பது ஈண்டு ஓர்ந்து சிந்திக்க வுரியது. இன்பம் தருவதே இனிய அறிவாம்.

நல்ல இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றே சீவர்கள் யாண்டும் விரும்புகின்றனர். உண்மையான இன்ப நிலை தெரியாமையால் புன்மையான பொறி புலன்களில் இழிந்து புலையான போகங்களைச் சுகங்கள் என்று கருதிக் களித்து மாய வெறியராய் மறுகியுழல்கின்றனர். மையல் மருள் வெய்ய இருள்.

உள்ளம் தெளிந்து தூயராயுயயர்ந்த ஞானிகள் தேக போகங்கள் யாவும் மோக வெறிகள் என்று உணர்ந்து கொண்டு உலக சுகங்கள் யாவும் நீசங்கள் என்று வெறுத்து விலகி ஈசனையே கருதி இனியராய் இன்புறுகின்றனர்.

நேரிசை வெண்பா

உலகில் நிலவும் உயர்சுகங்கள் எல்லாம்
கலக அவலமெனக் கண்டு - விலகிப்
பரமனொடு தோய்ந்து பதிந்து மகிழும்
உரமதே யோகம் உணர்.

புலன்களையடக்கி மவுனமாயிருந்து மகான்கள் அனுபவிக்கின்ற பேரானந்த நிலையை இதனால் உணர்ந்து கொள்கிறோம்.

யோகம் என்னும் சொல் யூகமான பொருளுடையது. சீவான்மா பரமான்வோடு கலந்து மகிழும் கலப்பே யோகம் என வந்தது. கூடியிருந்தால் யோகமாதலால் பிரிந்து போதல் வியோகம் என நேர்ந்தது. முன்னது வாழ்வு; பின்னது சாவு,

உலக நசைகளில் உழல்பவர் ஈசனது பேரானந்த நிலையை இழந்தனர். புலன்களை அடக்கி அகமுகமாயிருந்தவர் அதிசய ஆனந்தங்களை அடைந்தனர். புலைநிலை ஒழிவதே புனித சுகமாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் காய்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(1, 5 சீர்களில் மோனை அமைதல் சிறப்பு)

காழ்த்தஐம் புலனும் செற்றுக் கரணங்கள் அடக்கி நாளும்
ஊழ்த்தமென் சருகு மாந்தி யோகினில் உறங்கு கின்றார்;
சூழ்த்துநான் முகனும் விண்ணோர் தொகுதியும் சுருதி நான்கும்
வாழ்த்துதற்(கு) அரிய முத்தி வீட்டின்பம் மருவி வாழ்வார்.

- கூர்மபுராணம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

இந்திய விடயம் தன்னொடு சிவணல்
யோகமென் பார்சிலர்; சிலர்தம்
சிந்தனை உயிரோ(டு) அடைதல்நல் யோகம்
என்பரீ(து) அன்றியும் சிலர்தாம்
முந்திய பிராணன் அபானனோ(டு) அடைதல்
என்பரிம் மொழிந்தவை அனைத்தும்
அந்தமில் யோகம் அல்ல;நற் சீவன்
பரத்துடன் அடைவதே யோகம்.

- காசிகாண்டம்

யோகத்தைக் குறித்திவை உணர்த்தியுள்ளன. பேரின்ப வீடு பெறவுரிய வழி விழிதெரிய வந்தது. சீவன் பரத்துடன் அடைவதே யோகம் என்றதனால் யோகத்தின் அதிசய மகிமையையும்.ஆனந்த நிலையையும் ஒருங்கே உணர்ந்து கொள்கிறோம்.

பரம்பொருளைப் பிரிந்து வந்து பரிதாபமாய் இழிந்து உழலுகின்ற சீவன் மறுபடியும் அதனை அடைந்து மகிழும்படி அருள் புரிதலால் முனிவர்கள் இதனை இனிது மருவி இன்புறுகின்றனர். சீவனுக்கும் சிவனுக்கும் உள்ள உறவுரிமையை உணராதிருப்பது மருளான இருள்; உணர்வது அருளான தெருள். உணர்ந்தவன் தத்துவ ஞானியாய் முத்தியின்பம் பெறுகிறான்; உணராதவன் பேதைப் பித்தனாய் இழிந்து பிறவித் துயர்களில் உழல்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளச்சீர் வரலாம்)

தன்னைப் பேத மாய்க்காண்கை சகத்தில் காணப் பட்டதாம்;
தன்னைப் பேத மறச்சிவனென்(று) அறிவோன் ஞானி தானொருவன்
என்னக் கருதி மறையதுநீ ஆனாய் என்ன அத்துவிதம்
தன்னைப் புகலும்; கண்டதனைச் சாற்றல் மறையின் கருத்தன்றே. 1

தூய்தா கியநெஞ்(சு) உடையார்க்குத் தாமே சிவமாய்த் தோன்றுமால்
தீதா கியநெஞ்(சு) உடையார்குத் தெளிய அபேதம் இகலின்றி
வேதா கமங்கள் விளம்பிடினும் விளங்கா(து); என்றும் வேறுயென்னும்
வாதால் அழிவர்; அவர்மாயை மயக்க மயங்கும் மதியினார். 2

நெஞ்சம் சோகம் பாவனையில் நிற்க நிறுத்தி விடயங்கள்
அஞ்சும் துறவாத் துறந்தசிவ யோகி ஒருவன் அடியிணையில்
துஞ்சும் திருமால் முதலமரர் உள்ளம்; அவனைத் துதித்திறைஞ்சா(து)
எஞ்சும் தவமா முனிவரிலை எனநான் மறையும் இயம்புமால். 3

- பிரபுலிங்க லீலை

இவை காட்டியிருக்கும் கதி நிலைகளைக் கருதி யுணருக. அரிய ஞானக் காட்சிகள் எளிதே தெரிய வந்துள்ளன. தத்வ மஸி என்பது வேத மந்திரம். அந்தப் பரம்பொருள் நீயே என்பதிதன் பொருள். மாய மருளால் மறந்துள்ள பரம்பொருளைத் தூய தெருள் ஒளியால் தெளிந்து கொள்ள வேண்டும்.

விட்ட முதலை விடாமல் போய்த் தொட்டுக்கொள்; உன்னை ஒட்டியிருந்த துயரங்கள் யாவும் அடியோடு ஒழிந்து போகும். பேரின்ப வீட்டில் குடி புகுந்து பெருமகிமையாய் விளங்குவாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Mar-22, 2:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே