கடவுளின் ஏஜென்ட் யாரு விதி
கடவுள் என்ற கண்ணுக்கு புலப்படாத கருப்பொருளின், அங்கீகரிக்கப்பட்ட தரகன் யார் தெரியுமா? விதி. ஆமாம், இப்படித்தான் நினைக்க சொல்கிறது என் மதி. நாம் கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம்மை அறியாமல் அவ்வப்போது நம் மனம் " எல்லாம் என் விதி/ நேரம் " என்று நொந்துகொள்கிறோம் என்பதை பகிங்கரமாக நாம் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். இப்படி சொல்ல தூண்டுவதும் விதியால் முடுக்கிவிடப்பட்ட என் மதிதான். வான்மதி, இருட்டில் உலகிற்கு அழகான ஒளி கொடுத்து செல்கிறது. நம் மதியோ பகலிலும் நம்மை இருட்டான உலகத்திற்கு கடத்திவிடுகிறது. நான் சொல்வேன் " கடவுள் செய்த பெரும் சதி, நம் கண்ணுக்கும் அறிவிற்கும் புலப்படாத விதி. கடவுளுக்கும் விதி தரகனுக்கும் இடையில் ஏதோ ரகசிய ஒப்பந்தம் நிச்சயம் இருக்கவேண்டும். ஆனால் அந்த ஒப்பந்தம் எப்போது போடப்பட்டது, ஏன் போடப்பட்டது, யாருக்காக போடப்பட்டது போன்ற விவரங்கள் எதுவும் நமக்கு தெரியாது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன, எதனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது, யார் யார் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது, ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் என்ன, இதுவும் நமக்கு தெரியாது. எனவே, கடவுள் - விதி இருவர்க்கும் இடையே உள்ள ஒப்பந்தம் மனித இனத்தால் அங்கீகரிக்கப்படாத ஒப்பந்தம். அப்படித்தானே இருக்கமுடியும்? ஆனால் நம்மை கேட்காமலே , நாம் அறியாமலே நம் மீது திணிக்கப்படுகின்ற சொந்தமும் பந்தமும் சேர்த்து தாளிக்கப்பட்டது இந்த ஒப்பந்தம். கண்ணுக்கு தெரியாத இந்த ஒப்பந்தத்தை ஒப்பிடுகையில், நமது வருமான வரி சட்டம் , ஜிஎஸ்டி சட்டம் கூட எவ்வளவோ பரவாயில்லை. இவைகளில் உள்ள சட்ட திட்டங்கள் என்ன என்று பொதுமக்களுக்கு மசோதா தாக்கல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லை, நாம் நமது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மூலம் சட்டங்களின் வரைவு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே இத்தகைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன . ஆனால் எவருக்குமே விளங்காத, பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத இந்த கடவுள்-விதி தரகன் ஒப்பந்தம் ஒரு சர்வாதிகார போக்கு மற்றும் அதிகார திமிர் கொண்டு போடப்பட்ட ஒன்று. என்னை பொறுத்தவரை அப்படிதான். நான் கண்டவரை அல்லது எனக்கு புரிந்தவரை, விதி தரகனிடம் இரண்டு வித சீட்டுகள் இருக்க வேண்டும். ஒரு சீட்டு அதிருஷ்டம் என்பது இன்னொரு சீட்டு துரதிருஷ்டம் .விதி தரகன் இந்த சீட்டுகளை, அவன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் ஒரு மனிதன் அல்லது உயிரின் மேல் பிரயோகிக்கலாம் என்றுதான் இருக்கவேண்டும். ஒருவருக்கு மட்டும் ஏன், அதிருஷ்ட சீட்டு இன்னொருவருக்கு ஏன், துரதிருஷ்ட சீட்டு என்று நாம் கேட்கவே முடியாது. ஏனெனில் கடவுள் - விதி தரகன் ஒப்பந்தம் one way traffic (ஒரு புறம் மட்டுமே செல்லமுடியும் சாலை போல). நாம் இவைகளை மறு பேச்சின்றி ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இல்லையெனில் நாம் மூச்சின்றி போய்விடுவோம். எப்படி அலுவலகத்திலும் அரசாங்க நிர்வாகத்திலும் கீழ் நிலை ஊழியர்கள் உயர் அதிகாரிகளை காக்காய் பிடிக்கிறார்களோ அதை போலவே நாமும் இந்த கடவுளையும் அவர் தரகரான விதியையும் பல வகைகளில் காக்காய் பிடிக்கிறோம். அப்படி காக்கை பிடிக்காதவர்களை விதி தரகனின் அடியாட்களான பூச்சாண்டிகள் பிடித்து பயமுறுத்துவார்கள் . தேவை பட்டால் சித்திரவதை செய்து உடனடியாகவோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகவோ தீர்த்துவிடுவார்கள். நாம் பார்க்கும் எவ்வளவு நல்ல மனிதர்கள் (அதாவது சுயநலமில்லாத தன்மையான அன்பான உதவும் எண்ணம் கொண்ட மனிதர்கள்) வாழ்க்கையில் அவதி படுவதை பார்க்கிறோம். இவர் படும் அவதிக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எல்லாம் அவரது விதி என்ற ஒரே வார்த்தையில் முடித்துவிடுவோம். எவ்வளவு நேர்மையான உண்மையானவர்கள் பணத்திற்கு லாட்டரி அடித்துக்கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு பேர்கள் இரவில் தூக்கம் இல்லாமல் அவதி படுகிறார்கள். தூக்கத்திற்கு மாத்திரையும் வாங்க முடியாமல் வறுமையில் வாடும் நல்லெண்ணம் கொண்டவர்கள் எவ்வளவு ஆயிரம்! நம்மால் ஒப்புக்கொண்டு ஆகவேண்டிய உண்மை என்னவெனில் " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது". இதையும் கடவுளின் அவதாரமான கிருஷ்ணர்தான் கூறினார் என கேள்வி படுகிறோம். ஆக, கடவுள் எல்லோரையும் சரிசமமாக பாவிக்கிறாரா இல்லையா என்று கேள்வி எழுப்பினால் என்னுடைய தாழ்மையான ஒரே பதில் " இல்லை". காரணம் , தெரியவில்லை. ஒருவேளை பிரபஞ்சமே மாயையாக இருக்கக்கூடும். கடவுளின் விதி என்னும் தரகன் படுத்தும் பாடு இருக்கிறதே. அதை என்னவென்று சொல்ல! ஒரு புறம் சில பிச்சை காரர்கள் லட்சத்தில் பிச்சை பணம் பெற்று பாங்கில் போடுகின்றனர். சில பிச்சைக்கார்கள் பிச்சை எடுத்தும் ஒரு வேளைக்கு கூட உணவுக்கு வழியில்லாமல் சாகின்றனர். ரமண மகரிஷி , ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற தங்கமான பங்கமில்லாத மனிதர்கள் எவ்வாறு கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். இவர்களை போலவே இப்போதும் நல்ல இதயம் படைத்த அன்பு மனிதர்கள் பலர் ஏதேதோ நோய்கள் வரப்பெற்று அகால மரணம் அடைகிறார்கள். மகா கவி பாரதியார் 39 வயதில் ஒரு யானையால் தாக்கப்பட்டு இறந்தார். அவருடைய சுதந்திர முழக்கம் அவரது மனித நேயம் யாருக்கு வரும்? இவர் திருமணமாகி பட்ட அல்லல்கள் சொல்லமுடியாது. விதி என்ற தரகன் அரக்கனாகி இவரையும் இவர் குடும்பத்தையும் ஏழ்மையின் விளிம்பிற்கு கொண்டு சென்றான். எதற்கெடுத்தாலும் " அது அவரது பூர்வ ஜென்ம பாவங்கள்" என்பதை கேட்க எனக்கு கோபமாக வெறுப்பாக மட்டும் இல்லை, வேதனையாகவும் விரக்தியாகவும் இருக்கிறது. கடவுள் என்றால், ஒருவரின் நல்ல செயலுக்கும் தீய செயலுக்கும் உடனுக்குடன் அல்லது அதே பிறவியில் பரிசோ தண்டனையோ தருவது சிக்கலில்லாத, ஒளிவு மறைவு இல்லாத உண்மையிலேயே பாமரர்களும் உணர்ந்து அறிந்து கொள்ளும் தெய்வ நீதியாக அமைந்திருக்கும்.
அரசியல் ஊழல்கள், அதிகார ஊழல்கள், பதவி ஊழல்கள், லஞ்சம் போன்ற அசிங்கமான காரியங்கள் செய்த எவ்வளவு தலைவர்கள், பெரிய புள்ளிகள் 90 வயதையும் தாண்டி ஆரோகியமான இருப்பதையும் நேரில் காண்கிறோம்தானே? படிக்காத பலர் அதிருஷ்டம் உள்ளதால் ஏதோ வகையில் நட்சத்திரங்களாகவும் பணம் படைத்தவர்களாகவும் ஆகின்றனர். போதை பொருள், சாராயம் , சூதாட்டம், கடத்தப்பட்ட பொருட்களை விற்பது, இதைத்தவிர எதை எதையோ பணத்திற்காக விற்பது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் சம்பவங்களாகி விட்டது. ஒழுங்காக, பொறுப்பாக வேலை செய்யத்தெரியாத பல ஊழியர்களை நான் அரசு அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். இந்த நிலை அரசாங்கத்தில் மட்டும் அல்ல வேறு பல துறைகளிலும் இருந்து வருகிறது. நாமே அவ்வப்போது பெருமூச்சு விடுகிறோமே " இவனெல்லாம் இந்த பதவியில் இருக்கிறான், இவளுடைய திமிருக்கு இவ்வளவு மதிப்பு, இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எங்கே மச்சம் இருக்கிறதோ" என்று. ஒரு பெரிய புள்ளியின் மகனோ மகளோ என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பித்து கொள்கின்றனர், பணம், பதவி என்ற போர்வையால் மறைத்து விட்டு. விதி தாரகன் எப்படிப்பட்ட அநியாயங்கள் செய்கிறான் பார்த்தீர்களா?
பிறந்த குழந்தை சாகிறது, ஐந்து வயதில் குழந்தைகள் சாகின்றனர், பத்து வயதில் நோய்க்கொண்டு பிள்ளைகள் இறக்கின்றனர். என் சகோதரியின் தோழி ஒருவரின் மகன் பதினாறு வயதில் தசைகளின் பலவீனத்தால் (மிகவும் அரிதான நோய்) பலவருடங்கள் இருந்த இடத்திலிருந்து நகரமுடியாமல் நரக வாழ்வு வாழ்ந்து சில நாட்களுக்கு முன்பாக இறந்தான். இந்த பாலகனின் பெற்றோர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு வாழ்நாள் வேதனை! அவர்கள் இந்த பதினாறு ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்களா? இனியும் மகிழ்ச்சியாக வாழ்வார்களா? விதி என்ற தரகன் எப்படி பட்ட கொடுமையான காரியங்களை செய்கிறான், பார்த்தீர்களா? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பசியால் மாண்டு போகும் குழந்தைகள், பெரியவர்கள். நோயினால் ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகள் போராடிவரும் நோயாளிகள், பிறவி குருடர்கள், உடல் ஊனமுற்றவர்கள், நன்கு பிள்ளைகளை வளர்த்துவிட்டு, வாழ்ந்து விட்டு, அதே பிள்ளைகளால் முதியோர் இல்லங்களுக்கு துரத்தப்படும் முதியோர்கள், அகால நேரத்தில் மரணம் எய்துபவர்கள்! என்ன ஒரு விதி, எப்பேர்ப்பட்ட ஒரு சதி, என்ன ஒரு விபரீதமான அப்பாவிகளின் கதி! வாழ்க்கை ஒரு சூதாட்டம். இதை ஆடவைப்பவர்கள் கடவுள் மற்றும் அவரது தரகனான, விதி. விதி தரகன், ஒருத்தருக்கு போடும் சீட்டை பொறுத்து ஒருவனது வாழ்வும் தாழ்வும் சாவும் அமைகிறது. இவன் சீட்டை எந்த முறையில் போடுகிறான்? பாகுபாடற்ற நிலையிலா அல்லது குருட்டாம்போக்கிலா? அதிகமாக குருட்டாம்போக்கில் போடுவது போல்தான் நான் உணர்கிறேன்.
ஒருவிதத்தில், பிறக்கும் ஒவ்வொரு உயிரும் எவரோ போட்ட பிச்சை. அனைவரும் விதியின் அடிமைகள். வாயை மூடிக்கொண்டு கையை கட்டிக்கொண்டு நம் கடமைகளை செய்ய வேண்டும். மூடிய வாயில் நெருப்பை போடுவதும், இனிப்பை போடுவதும் , கட்டிய கைகளில் விலங்கு இடுவதும் பொன்னாபரணங்கள் அணிவிப்பதும் அவன் செயல், எவன் செயல் , அதான் அவன் என்கிற இந்த தரகன் விதியின் மர்மமான மாயமான அபாயமான புரிந்துகொள்ளமுடியாத விந்தையான விசித்திரமான வினோதமான திகைப்பூட்டும் செயல்கள்! எங்கே போய் சொல்ல, எங்கே போய் முட்டிக்கொள்ள?