எறும்பு

எறும்பு....!

ஒரு மழை ஓய்ந்த நேரம்...வெளியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மழை தண்ணீரில் மெல்ல...மெல்ல... 'ஸ்லோ மோஷனில்' ஓடுகிற தண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறது அந்த எறும்பு புத்து. ரஷ்யாவின் குண்டு மழையில் உக்ரைனில் நொறுங்கி வீழ்ந்த கட்டிடங்களை போல்....இல்லை...இல்லை....கனமழையால் பெருகிய வெள்ளத்தில் கரையும் மண் குடிசையைப்போல்...கரைந்து...மண்ணோடு மண்ணாய் மறைந்து போனது எறும்பு புத்து. என் மனது அந்த எறும்பாய் மாறி அதன் பக்கம் நின்று யோசிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு நாள் சிறுக...சிறுக...கட்டிய என் வீடு. என் கண் முன்னாலேயே இப்படி கரைந்து போனதே.மறுபடியும் கட்ட எவ்வளவு காலம் ஆகுமோ?....தெரியவில்லையே. என் இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது என் கண்களும் கூர்மையானது.
பளீரென்று ஒரு மின்னல்....சுளீரென்று கன்னத்தில் ஒரு இடி....இல்லை ஒரு அடி.... சுதாரித்துக்கொண்டு உற்று கவனித்து கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அத்தனை எறும்புகள் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. சுறு... சுறுப்பாய் அதன் வேலையை செய்யத் தொடங்கிவிட்டன. அழிவை பற்றி கொஞ்சமும் அலட்டி கொள்ளவில்லை. தன உடன் பிறப்புகள் இறந்ததைப் பற்றி கூட சிந்திக்க வில்லை. இதோ புறப்பட்டு விட்டன சாரை....சாரையாய்....அடுத்த மழை வருவதற்குள் எங்கெங்கு உணவு கிடைக்கிறதோ...அங்கங்கு சென்று...கொண்டுவந்து சேர்க்க ஆரம்பித்துவிட்டது.
இப்போதுதான் மழைவிட்டிருக்கிறது. அடுத்த மழை வருவதற்கு இன்னும் ரொம்ப நாளாகும் என்று எறும்பு சும்மா உட்கார்ந்திருப்பதில்லை. மேலும் போன மழையில் தன் சேமிப்பில்லாம் மழை நீரில் கரைந்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டதே என்று ஒப்பாரி வைப்பதுமில்லை.தலைமேல் கை வைத்து சோர்ந்து உட்கார்ந்து விடுவதுமில்லை. மழை நின்ற மறுநொடி உணவைத்தேடி ஓட ஆரம்பித்துவிடுகிறது. நாமோ நம் இளமையையும்... நேரத்தையையும்....ஏன் நம் சக்தியையும் வீணடித்துக்கொண்டு....எதிர்காலத்தைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல் ....கனவு மட்டும் கண்டுகொண்டு....காரியத்தில் இறங்காமல்...எகத்தாளமாக கிண்டலடித்து கொண்டு பொழுதை கொன்றுகொண்டிருக்கிறோம். பழைய பாடல் ஒன்று காதில் வந்து மோதுகிறது. " நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுப்பதுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்ட்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்."
நம் உடைமைகள்...சொத்து...சுகங்கள்....பறிபோய்விட்டால்....ஓவென்று ஒப்பாரி வைத்துக்கொண்டு...உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொண்டு...தீர்க்கமாய் ஒரு முடிவும் சரியாக எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். எறும்போ....தன் தானியக்கிடங்கு முழுவதும் நீரில் கரைந்தாலும் ....தன் இருப்பிடம் ஒன்றுமில்லாமல் இடிந்தாலும்.. ஏன் தன் உடன் பிறப்புகள் எல்லாம் இறந்தாலும்...எதைப்பற்றியும் கவலைப்படாமல் இதோ சுறுசுறுப்பாய் தானியங்கள் தேடி புறப்பட்டுவிட்டன. இதை கூர்ந்து நோக்கும்போது நமக்கு நம் வாழ்வின் அர்த்தங்கள் புரிபட ஆரம்பிக்கிறது. "எழுமின்...விழிமின்" என்கின்ற விவேகானந்தர் வாக்கினை மறவாமல் "வீழ்ந்தாலும் மேல் மக்கள் மேல் மக்கள்தான்...." "செய் அல்லது செத்து மடி"என்று நம்மை நாமே எப்படி உருவெற்றிகொள்ள போகிறோமோ தெரியவில்லை. வீழ்வது சகஜம் எழுந்து நிற்பதுதான் விவேகம்.
கீதையில் பகவான் உரைப்பதுபோல்.... ஒவ்வொரு உயிரும் பிறந்தது... படைக்கப்பட்டது... வாழ்வதற்குத்தான். வீழ்ந்தாலும் எழுவதற்குத்தான். இதுதான் எறும்பு நமக்கு சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்...ஒரு வேதம்.
மற்றொன்றும் என் மனதில் உரைத்தது. எறும்புகள் சாரைசாரையாய்....ஒன்றின் பின் ஒன்றாய்..... ஒழுங்காய்...கட்டுப்பாடுடன் செல்வதை காணும்போது....அவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்...ஏராளம். அந்த ஒழுங்கை காணும்போது நாம் வெட்கித் தலை குனிய வேண்டும்.நாம் சாலையில் கடைபிடிக்கும் சாலை விதிகளை எண்ணிப்பார்க்கிறேன். அவரவர்க்கு அவரவர் அவசரம்...அவரவர்க்கு அவரவர் விதிகள்...மற்றவரின் சங்கடங்களை பற்றி சிறிதும் கவலையில்லை. யார் எக்கேடு கெட்டால் என்ன? தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும். எல்லாம் தனக்கு மட்டும் சாதகமாக நடக்க வேண்டும்.என்ன ஒரு ' selfish 'தனம்.அதனால் ஏற்படும் எத்தனை விபத்துக்கள்....எத்தனை உயிர் பலிகள்... என்ன கொடுமை சார் இது...! இத்தனைக்கும் நாம் ஆறறிவு படைத்த பிறப்பு....இல்லையில்லை மிருகம். ஆம் மிருகம்தான். ஐந்தறிவு படைத்த எறும்பிற்கு இருக்கும் ஒழுக்கம் நமக்கு ஏன் இல்லாமல் போயிற்று? அதனால் நாம் மிருகம்தானே? சிந்திப்போம்.செயல்படுவோம். எளியோரிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு. காண்போம்....கற்போம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (1-Apr-22, 10:40 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : erumpu
பார்வை : 310

மேலே