புணையின் நிலைகலக்கும் வழிகள் மூன்று - திரிகடுகம் 88

இன்னிசை வெண்பா

பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற்(று) உயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு 88

- திரிகடுகம்

பொருளுரை:

நோயானது தன்னை வருத்தும்போது ஒருவன் தான் அதற்கு வருத்தப்படும் வகையும்,

தாட்சண்யமில்லாத பெரிய எமன் உயிரைக் கொண்டுபோக வருத்தும் வகையும்,

சுற்றத்தோர் முதலியோர் வந்து சேர்வதற்குக் காரணமாகிய செல்வமானது நிலையில்லாமல் செல்லும் வகையும் ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குப் பிறவிப் பெருங்கடற்கு மரக்கலமாயுள்ள மனத்தின் நிலையைக் கலக்குகின்ற வழிகளாம்.

கருத்துரை:

நோயால் வருந்துவதும், உயிர்போக நோவதும் செல்வம் அழிவதும் மனவுறுதியைக் கலக்குவன.

மாண்பு – நிலைமை; ஆறு என்பதை இயங்கலோடும் கூட்டுக

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Apr-22, 8:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே