பிறந்தும் பிறந்திலா தார் மூவர் - திரிகடுகம் 89

இன்னிசை வெண்பா

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார் 89

- திரிகடுகம்

பொருளுரை:

அருளை மனத்திடத்து நிறைத்து வைக்காதவனும், செல்வத்தை தானும் நுகராது பிறர்க்குங் கொடாமல் பூமியில் மறைத்து வைக்கின்றவனும், தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பங்தருஞ் சொற்களைச் சொல்லவல்லவனும் ஆகிய இம் மூவரும் மக்கட் பிறப்பிற் பிறந்திருந்தும் பிறவாதவராவர்.

கருத்துரை:

அருளில்லாதவனும், பொருளை வீணாய்ப் புதைத்து வைக்கின்றவனும், பிறர்க்கு மனம் மிகவும் வருந்தும்படி பேசுகின்றவனும் மக்கட் பிறப்பைச் சார்ந்தவராகக் கருதப்படார் என்பது.

அடை - அடைக்கப்படுவது, இறந்து – கடந்து, இற – கட; இறந்து இன்னா சொல்லகிற்பான் என்பதற்குத் தன் பகைவன் இறக்க அதன் பின்னும் தீய சொல் சொல்லவல்லவன் என்றுரைத்தலுமாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Apr-22, 8:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே