கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்

கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்


பத்தொன்பதாம் நூற்றாண்டு அல்லது இருபதாம் நூற்றாண்டு (பிரிட்டிஷ் காலத்தில் நம் சமூகம்) சமூக கதைகள் எப்படி வந்திருக்கும் என்று கல்லூரி மாணவர் ஒருவர் வினவியபோது இப்படி இருந்திருக்கலாம் என்னும் அடிப்படையில் எழுதிய கதைகள் ஐந்து நாடக வடிவில்

1. சுதந்திர போர்
2. வறுமை
3. நாடகங்கள்
4. குடும்பம்
5. அட்மிஷன்

1. சுதந்திர போர்
கதை சுருக்கம்- ஆசிரியர் வருவதற்கு முன் வகுப்பில் சதாசிவம் சுப்புரத்தினத்துடன் பேசிக்கொண்டிருக்கிறான். இன்று இரவு நான் சொன்னது நினைவில் இருக்கிறதா?
இருப்பதாக தலையாட்டிய சுப்புரத்தினம் இரவு நீ வீட்டில் தயாராய் இரு, நான் வந்து உன்னை கூப்பிட்டு கொள்கிறேன்.
வேண்டாம், வேண்டாம், என் அப்பா தூங்குவது நேரம் கழித்துதான், அது மட்டுமல்ல அவர் உத்தியோகஸ்தர், என் வீட்டுக்கு காவல்காரரும் உண்டு, உன்னை அங்கு வைத்து அடையாளம் கண்டு கொண்டால் சிரமம்.
அப்படியானால் என்ன செய்யலாம்?
நான் எப்படியாவது பின்புற காம்பவுண்டு ஏறி வெளியே வருகிறேன், நீ அந்த தெரு முக்கில் காத்திரு. இருவரும் நடந்து அங்கு செல்லலாம்.
வகுப்புக்குள் ஆசிரியர் வர அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்.
அனைவரையும் உட்கார சொன்னவர் ஒரு நிமிஷம், எல்லாரும் கேளுங்க, நிறைய இடத்துல கொடி ஏத்தறேன்னு உங்களை மாதிரி இளைஞர்கள் போலீசுல மாட்டிக்கறாங்க. அந்த மாதிரி நம்ம வகுப்பு மாணவங்க யாரும் செஞ்சு மாட்டிக்காதீங்க, அப்புறம் உங்க வாழ்க்கை பாழாயிடும், அது மட்டுமில்லை, அவங்கவங்க அப்பா அம்மாவுக்கும் சிரமமாயிடும்.
காட்சி-2
இரவு ஒரு மணிக்கு மேல் இருக்கும், சதாசிவமும், சுப்புரத்தினமும் பதுங்கி பதுங்கி பாதையில் நடந்து கொண்டிருக்கின்றனர். அங்கங்கு விசில் ஊதும் சத்தம் கேட்டதும் ஓரமாய் பதுங்கி கொள்கிறார்கள்.
அமைதியாய் உறக்கத்திலிருக்கிறது அந்த அரசு அலுவலகம். அண்ணாந்து பார்க்கிறார்கள் அலுவலகத்தின் முன் புறமாக நின்று கொண்டிருந்த கம்பத்தின் உச்சியில் பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டிருக்கிறது.
சுற்று முற்றும் பார்த்தார்கள், அமைதியாக இருந்தது அந்த பிரதேசம். சுப்புரத்தினம் தன் இடுப்பிலிருந்து ஒரு துணிப்பையை எடுத்தவன், அதற்குள் கையை விட்டு எடுத்து பிரிக்கிறான். அந்த இருளில் கொடிபோல தெரிகிறது.
சதாசிவம் அதை வாங்கி நன்கு விரித்து பிடித்து பார் இதுதான் இந்திய நாட்டில் எதிர்காலத்தில் பறக்கபோகும் கொடி. அதை இன்று இரவே இதோ இந்த அலுவலகத்தின் இருக்கும் கொடி மரத்தில் ஏற்றி விட்டு செல்லலாம்.
சரி வா, இருவரும் மெல்ல பதுங்கியபடி காம்பவுண்டு அருகில் வந்து ஒருவர் பின் ஒருவராய் குதித்து உள்ளே இறங்குகிறார்கள்.
சுப்புரத்தினம் சதாசிவத்திடம் , நீ இங்கேயே நின்று யாராவது வருகிறார்களா என்று கவனி, நான் அந்த கொடி மரத்தில் ஏறி அந்த கொடியை எடுத்து விட்டு இந்த கொடியை கட்டி விட்டு இறங்கி வருகிறேன்.
வேண்டாம், உனக்கு அவ்வளவாக மரம் ஏறி அனுபவம் இல்லை, நான் போகிறேன், நீ இங்கு நின்று எனக்கு சிக்னல் கொடு, சட்டென கொடி மரத்தை நோக்கி ஓடுகிறான்.
மரம் அருகில் வந்து கொடியை வாயில் கவ்வியபடி அந்த மரத்தில் விறு விறுவென ஏறுகிறான்.
அதற்குள் அந்த பக்கமாக வந்த காவல்காரன் ஒருவன் அவர்களை நோக்கி ஓடி வர
சுப்புரத்தினம் சட்டென அவனை வழி மறித்து கீழே தள்ளி விட
இதற்குள் அங்கங்கு சத்தம் கேட்டு இரண்டு மூன்று பேர் ஓடி வர சுப்பு ரத்தினம் கொடி மரத்தை பார்க்கிறான். சதாசிவம் கொடியை கழட்டும் முயற்சியில் தீவிரமாய் இருக்க கீழே நடப்பவைகள் அவனது கவனத்தை திருப்பவில்லை.
சுப்புரத்தினம் விறு விறுவென அந்த கொடி மரத்தில் ஏற ஆரம்பித்தான்.

இரு இளைஞர்களும் சுடப்பட்டு கீழே படுக்க வைக்கப்பட்டிருக்க அவர்கள் அருகே இந்திய கொடி இரத்த சிவப்பாய் கிடக்கிறது..

காட்சி-3
1947 ஆகஸ்டு பதினாலாம் நாள்
விசுவநாதன் ஐயா..விசுவநாதன் ஐயா…
வாங்க நாகராசன், என்ன இன்னைக்கு குரல் சந்தோஸமா இருக்கற மாதிரி இருக்கு.
இருக்காதா பின்னே, நாளைக்கு நமக்கு சுதந்திரம் கிடைக்கப்போகுது. நம்ம நாட்டு கொடியை தலைவர்கள் மரத்துல பறக்க விடப்போறாங்க. உணர்ச்சி வசப்பட்டு இதுக்காகத்தான அன்னைக்கு என் பையனும் உங்க பையனும் சின்ன வயசுல..தேம்பி அழுகிறார்.
விசுவனாதனுக்கு அழுகை பொங்கி வர நாகராசனை கட்டி பிடித்து கொள்கிறார், நம்ம பசங்க இரண்டு பேரும் இறந்து சரியா அம்பது வருசம் ஆச்சு, அவங்க உயிரோட இல்லாட்டியும் அவங்க ஆசைப்பட்டதை அவங்களை பெத்தவங்களான நாம இரண்டு பேரும் பார்த்து சந்தோசப்பட்டுக்கறமே..அது போதும்..
காட்சி-4
அனைவரும் சுதந்திரம் வந்து விட்டதை ஆடிப்பாடி தெருவில் கொண்டாடிக் கொண்டிருக்க, வயதின் தளர்ச்சியில் விசுவநாதனும், நாகராசனும் மெளனமாய் அந்த கூட்டத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
குரலாய்..இப்படி எத்தனை குடும்பங்கள் நாட்டின் சுதந்திரத்திற்கு தங்களது குடும்ப உறுப்பினர்களை பலி கொடுத்து எதுவுமே தெரியாதவாறு அமைதியாய் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால்தான் நாடு எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.


வறுமை-கதை சுருக்கம்
காட்சி-1
ஆசிரியர் ராகவாச்சாரியார் பிரம்பை கையில் பிடித்து நமசிவாயத்தின் கையில் அடித்து கொண்டிருக்கிறார்.
நான்கைந்து அடிகள் வைத்தும் கண் கலங்கியதே தவிர எந்த விதமான சப்தமும் எழுப்பாமல் அமைதியாக நின்றிருந்தான் நமசிவாயம்.
பாரு..அப்படியே நிக்கறான்.! ஏண்டா நாளைக்காவது நான் சொன்ன வேலைய செஞ்சுட்டு வர்றேன்னு சொல்றானா பாரேன், அலுப்புடன் குச்சியை டேபிளின் மேல் போட்டார்.

காட்சி-2
ஏன் நமசிவாயம் வாத்தியார் அந்த அடி அடிச்சுகிட்டிருந்தாரு, நீ நாளைக்கு செஞ்சுட்டு வர்றேன் சார் அப்படீன்னு சொன்னா என்ன? அவனுடன் நடந்து வந்த ராகவன் கேட்டான்.
சொல்ல முடியாது, நாளைக்கு அந்த நோட்டை கொண்டு வந்து காட்டுன்னா நான் என்ன பண்ணுவேன்.
ஏன் அப்படி சொல்றே?
என் கிட்ட புத்தகமே இல்லை, அப்புறம் எங்கே நோட்டு வாங்கறது.
ஐயையோ, என்னைக்காவது அவரு கேட்டா என்ன பண்ணுவே?
அப்பவும் இது மாதிரி அடி வாங்கிட்டு போயிடுவேன், அவ்வளவுதான், அலட்சியமாய் சொன்னாலும், பிரம்பு பட்டதால் காயமான கையை பின்புறம் தேய்த்து விட்டு கொண்டான்.

காட்சி-3
அம்மா கவலையாய் உட்கார்ந்திருக்க, அருகில் கைக்குழந்தை ஒன்றும், மூன்று வயது பெண் குழந்தை ஒன்றும் அவள் முகத்தை பார்த்து உட்கார்ந்திருக்கின்றன.
என்னம்மா இப்படி கவலையா உட்கார்ந்திருக்க?
கவலையா உட்காராம என்ன பண்ண சொல்றே? உங்கப்பா நம்மளை விட்டு போனப்புறம் இருந்த கொஞ்ச நஞ்ச நகையும் வித்து, சாப்பிட்டுட்டோம் உனக்கு பின்னாடி இரண்டு தங்கச்சிங்களை வச்சிட்டு என்ன பண்ணறதுன்னு மலைப்பா உக்க்காந்துட்டேன்.
நான் வேணா நாளையில இருந்து வேலைக்கு போகட்டா?
பத்து வயசு பையனுக்கு யாரு வேலை கொடுப்பா? நண்டும் சிண்டுமா உங்க மூணு பேரை என் கையில கொடுத்துட்டு உங்கப்பா நம்மளை விட்டு போயிடுவாருன்னு யாரு கண்டா, ஓவென்று அழுகிறாள்.

காட்சி-4
செட்டியார் கடையில் உட்கார்ந்திருக்கிறார். கடையில் நான்கைந்து சிறுவர்கள் சாமான் வாங்க வருபவர்களுக்கு பொட்டலம் கட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
யாருடா அம்பி நீ உனக்கு என்ன வேணும்?
என் பேரு நமசிவாயம், எனக்கு ஏதாவது வேலை போட்டு கொடுத்தீங்கன்னா..
ரொம்ப சின்ன பயலா இருக்கறியே, கடையில வேற பசங்க இருக்கறாங்களே..
ஐயா அப்படி சொல்லாதீங்க, எங்கப்பா இறந்திட்டு எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது, நான் வேலைக்கு போயிதா என் குடும்பத்தை காப்பாத்தணும்.
அதுக்கு என்ன பண்ண முடியும் தம்பி..! நீ இரண்டு மாசம் முன்னாடி இறந்து போனாரே சிவபிரகாசம் அவர் பையனா?
ஆமாங்கய்யா நமசிவாயம் ஆர்வமாய் தலையாட்ட செட்டியார் இதா பாரு பையா உங்கப்பா நம்ம கடையில சாமான் வாங்கன கடன் ஆறு ரூபா, அரையணா பாக்கி இருக்கு. இப்ப நான் உனக்கு வேலை கொடுக்கறேன், எதுக்குன்னா உங்கப்பா வாங்குன கடனை கழிக்கறதுக்காக. சரியா..
ஐயா எங்கப்பா கடனை கட்டறேன், ஆனா நாங்க நாலு பேரு இந்த சம்பளத்தை நம்பி இருக்கறோம்.
மாச சம்பளத்துல இரண்டு ரூபா புடிச்சுக்குவேன், கடையில மூணு ரூபாய்க்கு சாமான் வாங்கிக்க, அதையும் மாசத்துல புடிச்சுக்குவேன். இரண்டு ரூபா வாங்கிக்க, சரியா, அதுக்கு மேல என்னால ஒரு தம்படி கூட கொடுக்க முடியாது.
அது போதுங்கயா.

காட்சி-5

ஐயா, ஐயா…
ஆசிரியர் ராகவாச்சாரி வெளியே வருகிறார், யாரு? நமசிவாயமா, உன்னைய ஆறு மாசமா பள்ளிக்கூடம் பக்கம் காணலியே?
ஐயா, நான் இப்ப நம்ம செட்டியார் கடையில வேலைக்கு சேர்ந்துட்டன்.
அப்படியா நான் உன்னைய அங்க பாக்கலையே.
ஐயா உங்க கண்ணுல படக்கூடாதுன்னு நீங்க வற்றப்ப ஒளிஞ்சுக்குவேன்
ஏம்ப்பா அப்படி நினைக்கறே, எல்லாருக்கும் பகவான் ஏதோ ஒண்ணை எழுதி வச்சுடறான்.அதுப்படி நடக்குது, நாம என்ன பண்ண முடியும்.
ஆமாங்கய்யா நீங்க சொல்றது சரிதான், இப்ப நாங்க நாலு பேரு சாப்பிடறோமுன்னா அது செட்டியார் எனக்கு படியளக்கறதுனாலதான்.
அது சரிதாம்ப்பா… இப்ப என்னை எதுக்கு பாக்க வந்திருக்கே?
ஐயா என்னை தப்பா நினைச்சுக்காதீங்க. செட்டியாருதான் என்னை அனுப்பிச்சாரு, பழைய பாக்கி ஆறு மாசாமா நாப்பத்தி ஏழு ரூபாய் நிலுவை நிக்குது, கையோட வாங்கிட்டு வர சொல்லி என்னை அனுப்பிச்சாரு.
ராகவாச்சாரி விக்கித்து நிற்கிறார். தம்பி இப்ப எங்கிட்டே..
உள்ளிருந்து இடுப்பில் ஒன்றும், கூட இரண்டு குழந்தைகளுமாய் வெளியே வந்த ராகவாச்சாரியாரின் தர்மபத்தினி…!
யாரு செட்டியார் கடை பையனாட்டம் இருக்கு, நல்லதா போச்சு, தம்பி அரை உழக்கு பருப்பும், அரைப்படி அரிசியும் கடையில இருந்து எடுத்துட்டு வர்றீயா? பாரு குழந்தைங்க எல்லாம் பசியோட இருக்கறாங்க..

நாடகம் - கதை சுருக்கம்
காட்சி-1
புழுதி நிறைந்த அந்த கிராமத்து சாலையில் இருபக்கமும் “தட்டி கட்டி அதன் மீது பெரிய அளவில் நாடகத்தின் விளம்பரம் செய்யப்பட்ட “போஸ்டர்” ஒட்டப்பட்டு, சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியின் பின்னால் ஏராளமான சிறுசும், குஞ்சுகளுமான கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.
வண்டியில் தட்டிக்கு நடுவில் உட்கார்ந்திருந்தவன் அங்கங்கு சிறிய அளவிலான நோட்டீசுகளை வழியில் போவோர் வருவோரிடம் கொடுத்து கொண்டிருந்தான். அதில் நாடகத்தில் நடிக்கும் நடிகையின் படமும் நாயகன் படமும் போடப்பட்டு “ஸத்தியவான் ஸாவித்திரி” இன்று மாலை ஆறு மணி ஷோ, ஒன்பது மணி ஷோ, நடு இரவு காட்சி,ஸ்பெஷல் காட்சியாக காட்டப்படும்.
நோட்டீசில் தரை டிக்கட்-ஒரு அணா பெஞ்சு டிக்கட்- நாலு அணா நாற்காலி – முக்காலணா, ஷோபா-ஒரு ரூபாய் என்று அச்சிடப்பட்டிருந்தது.
நோட்டீசை விநியோகம் செய்த நேரம் போக, மற்ற நேரங்களில் பெரிய அகண்ட வாய் கொண்ட குழாய் ஒன்றில் வாய் வைத்து “பெரியோர்களே தாய்மார்களே, குழந்தைகளே இன்று மாலை நம் ஊரின் எல்லையில் இருக்கும் வாய்க்கா தோட்ட மைதானத்தில் “ஜல் ஜல் ராணி அவர்களும், தானாபாய் செளகார் அரிணாச்சலம் அவர்களும் நடிக்கும் “ஸத்தியவான் சாவித்திரி” நாடகம் நடக்கபோகிறது, அனைவரையும் தவறாது வந்து கண்டு களிக்கும் படி வருக வருக என்று வரவேற்கும் ராஜமன்னார் நாடககுழு
வாரீர்…வாரீர்
பின்னால் வந்து கொண்டிருந்த சிறுசுகள் “ஹேய்” வாரீர் வாரீர் அவன் குரலை தொடர்ந்து கத்திக்கொண்டு பின் தொடர்ந்தனர்.

காட்சி-2

“வாய்க்கா தோட்ட மைதானத்தில்” புதிதாய் முளைத்திருந்த கூரை கொட்டகையில் “”மன்மத லீலையை வென்றார் உண்டோ” தியாகராஜ பாகவதரின் பாட்டு கணீரென்று ஒலித்து கொண்டிருக்க தரை டிக்கட் வரிசையும், பெஞ்ச் டிக்கட் வரிசையிலும் ஆட்கள் வரிசையாய் சென்று டிக்கட் வாங்கி உள்ளே நுழைந்தனர்.
“நாற்காலி டிக்கட்” வரிசையும், “சோபா செட்” டிக்கட் வரிசையிலும், பெரிய அளவில் கூட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
“ஜல் ஜல் ராணி” தனது மேக்கப்பை முடித்து எழுந்தவள் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே வந்த தானாபாய் செளகர் அரிணாச்சலத்தை முறைத்தாள். இப்படித்தான் பொம்பளைங்க ரூமுல சொல்லாம் கொள்ளாம உள்ளே வரதா?
அரிணாச்சலம் அவளின் முறைப்பை சட்டை செய்யவில்லை, என்ன நினைச்சுட்டான், இந்த முதலாளி, பிசாத்து “நாலு ரூபாய்” கொடுடான்னா கொடுக்கமாட்டேங்கறான்,
“ஜல் ஜல் ராணி” அவனின் கோபத்தை உணர்ந்தவள், இப்ப எதுக்கு உனக்கு அவசரமா நாலு ரூபாய் வேணுங்கறதுன்னு எனக்கு தெரியும்.
உனக்கு தெரியுது, மூணு காட்சி இன்னைக்கு இராத்திரி பூரா நான் “செத்தவனா” நடிக்கணும், என்னால கொஞ்சமாவது உள்ளே போனாத்தான் நடிக்க முடியும்.
அப்ப நாங்க எல்லாம் நடிக்கலையா? நடிச்சு முடிச்சுட்டு நானும் வாறேன்,
உனக்கென்ன அழுது புலம்பி நடிக்கறதுனால தூக்கம் வராது. ஆனா உயிர் போன மாதிரியே எத்தனை நேரம் படுத்திருக்கணும்.
எல்லாம் தயாரா?... முதல்ல ராணி நீ மேடைக்கு போ, சொல்லியபடி முதலாளி வரவும் அவர்கள் பேச்சு தடைபட்டு ராணி மேடைக்கு வந்தாள்.

காட்சி-3
கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது “ஜல் ஜல் ராணி” எங்கும் மக்கள் குரல் ஒலிக்க ராணி பெருமையுடன் கொஞ்சம் தலைக்கனமும் எட்டி பார்க்க, மேடையை சுற்றியபடி வந்தாள்.
அதற்குள் மேடையின் ஓரத்தில் அமர்ந்திருந்த பாட்டு குழு “ஜதி” சொல்ல தொடங்கியது. ராணி தன்னை மறந்து “ஜதிக்கு” ஏற்ப முதல் காட்சியாக நடனத்தை தொடங்கினாள். மேடை முழுக்க சுற்றி சுற்றி நடமானாடி அவளின் நடனத்தை இரசிகர்கள் வாய் பிளந்து இரசித்தபடி உட்கார்ந்திருக்க, அந்த காட்சிக்குள்ளேயே கதாநாயகனான அரிணாச்சலம் மேடைக்கு வந்தான். அவர்கள் இருவருக்கும் அறிமுகப் படலம், கொஞ்சம் முறைப்பு, ஊடல், அதன் பின் ஒரு பாட்டு திரை விழுகிறது.
அடுத்து நகைச்சுவை காட்சிகளுக்காக இருவர் மேடையில் பிரவேசிக்க,
உள்ளே காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அரிணாச்சலத்துக்கும்,
நாடக குழுவின் முதலாளிக்கும். என்னால ஒரு நயா பைசா தர முடியாது, நீ நடிச்சு முடி, எல்லாம் முடிச்சுட்டு உட்காந்து பேசலாம்.
அரிணாச்சலம் பிடிவாதமாய் இருந்தான், அதெல்லாம் முடியாது, எனக்கு கணக்கை முடிங்க, நான் கிளம்பறேன்.
இப்படி திடீருன்னு அழிச்சாட்டியம் பண்ணாதே, இன்னைக்கு காட்சிய முடிச்சுக்கலாம், அப்புறமா பேசி முடிச்சிக்கலாம்.
இப்படித்தான் சொல்லி சொல்லி ஏழு வருஷம் ஓட்டிட்டீங்க.
இப்ப கூட என்னால முடியாது, பாரு சேரு டிக்கட், சோபா டிக்கட் சரியாவே கூட்டம் வரலை. நிலைமை சரியில்லை. இருந்தாலும் உனக்கு கணக்கு செட்டில் பண்ணிடறேன், இன்னைக்கு மூணு காட்சிய நடிச்சு கொடுத்துட்ட, நாளைக்கு எங்க வேணா போயிக்கோ.
பேச்சுத்தானே, சொன்னபடி நடப்பீங்களா?
ஸத்தியமா, மாரியாத்தா மேல சொல்றேன். இப்ப மேடைக்கு போ.
நாடகத்தின் முதல் காட்சி ஒன்பது மணி அளவில் முடிய, அரிணாச்சலம் உள்ளே வந்தவன் கொட்டகையின் பின்புற தடுப்பை பிரித்து, சொல்லாமல் கொள்ளாமல் கம்பி நீட்டி விட்டான்.

காட்சி-4
மகாஜனங்களே வருத்தமான செய்தி, நமது கதாநாயகனாக நடித்த அரிணாச்சலம் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதால், இந்த காட்சியும் அடுத்து நள்ளிரவு காட்சியும் ரத்து செய்யப்படுகிறது. காசு வாங்கி வந்தவர்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுக்கு ஏற்பட்ட இன்னலுக்கு எங்கள் நாடக குழு சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
முதலாளியிடம் நடிகர்கள், நடிகைகள் சண்டை பிடிக்கின்றனர்.அதென்ன நியாயம்? அவன் போயிட்டான்னு எங்க வயித்துல அடிச்சுட்டீங்க. வேற யாரையாவது ஏற்பாடு பண்ணியிருக்கலாமுல்ல.
அவர்களை மூத்த நடிகர் ஒருவர் சமாதானப்படுத்துகிறார். அப்பா ஒருத்தன் இப்படி பண்ணிட்டு போனதுல முதலாளி இடிஞ்சு போயிருக்காரு, அவருக்கு ஆறுதல் சொல்றதை விட்டுட்டு இப்படி பேசறீங்களே.
“ராக்கியப்பண்னே”, முதலாளி அழைக்கவும் அந்த மூத்த நடிகர் எண்ணண்ணே? பணிவுடன் கேட்டவாறு அவரருகே சென்றார்.
இந்தாங்கண்ணே, தன் கழுத்திலிருந்த செயினையும், விரலில் இருந்த மோதிரத்தையும் கழட்டி அவர் கையில் கொடுத்து இதை வித்து இவங்க பாக்கிய செட்டில் பண்ணுங்கண்ணே. அதுக்கப்புறம் அடுத்த நாடகத்தை பத்தி யோசிக்கலாம், ஆமா ராணி எங்கே?
இங்க இருக்கறேன் முதலாளி பவ்யமாய் அருகில் வந்தாள். ஏம்மா அவன் எங்கே போறான்னு சொல்லிட்டு போனானா உங்கிட்ட?
ராஜபார்ட் டிராமா குருப்புக்கு போகணும்னு சொல்லிட்டிருந்தாரு, ஆனா அங்க போனாரான்னு தெரியலை.
நீயும் வேறெங்காவது போறதா இருந்தா இப்பவே சொல்லிடுமா, ஏண்ணா நாலு ரூபாயிக்காக அவன் என்னை விட்டு போகலை, அந்த குரூப்புக்கு காரங்க நம்ம குருப்பை சிக்கல்ல மாட்டவக்கணும்னு இப்படி பண்ணியிருக்காங்க.
என்னங்கய்யா இப்படி சொல்றீங்க?
ஆமாம்மா அந்த குரூப்பு முதலாளி என் பங்காளி, அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க இரண்டு பேரு நடிச்ச இந்த நாடகம் நல்லா போகுதுன்னு அவனுக்கு தெரியும், அதை எப்படி முடிக்கணும்னு பார்த்து இப்ப முடிச்சுட்டான். சரி பரவாயில்லை போகட்டும், இப்ப நீ என்ன பண்ணுறே?
ஐயா..என்னை தப்பா நினைச்சுக்காதீங்க, நானும் அவரு பின்னாடி போறதுதான் முறை, ஆனா அவர் செஞ்சது எனக்கு கொஞ்சம் கூட ஒப்பில்லை..
தெரியும்மா, அவன் உன் புருசன், அதனாலதான் கேட்டேன், சரிம்மா ராக்கப்பண்ணன் கிட்டே உன் பாக்கிய வாங்கிட்டு கிளம்பிக்க.

காட்சி-5
என்ன அரிணாச்சலம் உன் நாடகம் கேன்சல் ஆயிடுச்சாமில்லை.
ஆமாங்கய்யா, முத காட்சி முடிச்சு கொடுத்துட்டு கிளம்பி வந்துட்டேன், எனக்கு பதிலா நடிக்கற ஆளு ஊருக்கு போயிருந்ததாலே, வேற ஆளு போட நேரமில்லாம நாடகத்தை இரத்து பண்ணிட்டாரு.
நீங்க ஊன்னு சொல்லுங்க, அடுத்து இந்த நாடகத்தை அடுத்த ஊருல நாம நடத்தலாம்
எங்க ட்ரூப்புல உன் கூட ஜோடியா நடிக்கறதுக்கு ஆளு தோதுப்படாது, உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்திடுவேன்னு நினைச்சேன்.
அவ கிட்டே கேட்டேன், அவ சொல்லிட்டு போகலாமுன்னு சொல்லிகிட்டிருந்தா, சரிதான்னு நான் கிளம்பி வந்துட்டேன்.
அவ வரட்டும், அப்புறமா இந்த நாடகத்தை நம்ம “ரைட்டருகிட்டே” கொடுத்து கொஞ்சம் மாத்தி மேடையேத்திபிடலாம் சரியா..
அரிணாச்சலம் அங்கிருந்து நகர,
முதலாளியின் அருகில் இருந்த ஆள், என்னங்க எல்லாம் தயாராத்தானே வச்சிருக்கோம், நாளைக்கே இவனை வச்சு மேடை ஏத்தியிருக்கலாமே.
இவன் பொண்டாட்டிய நம்பற அளவுக்கு இவனை நம்ப முடியலை, இத்தனை வருசமா வச்சு காப்பாத்துன நம்ம பங்காளியவே நட்டாத்துல விட்டுட்டான், நாளைக்கே வேறொரு ட்ருப்புக்கு கூப்பிட்டா நம்மளை அம்போன்னு விட்டுட்டு ஓடிடமாட்டான்னு எப்படி சொல்ல முடியும் ?அப்புறம் எப்படி இவனை நம்புறது. அந்த ராணி கடைசி வரைக்கும் முதலாளிகிட்டே சொல்லிட்டுத்தான் போகணும்னு சொல்லியிருக்கா..
அப்ப அவ வந்தா?
வரட்டும், வந்த பின்னாடி யோசிக்கலாம்.


குடும்பம்- கதை சுருக்கம்
காட்சி-1

சீரஞ்சிவி கேசவனுக்கு உன் அப்பா எழுதும் மடல், இங்கு உன் தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி, மாமா, அத்தை அனைவரும் நலம், அது போல் உன் நலம் அறிய அவா..
நீ ஷேமமாய் அங்கு இருந்து படித்து கொண்டிருப்பாய் என நினைக்கிறோம். உன் தாத்தா நமது கோடி வீட்டு கோமளம் அத்தையை வீட்டுக்கு கூப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார். அவள் குழந்தை சீரஞ்சீவி ருக்மிணிக்கு பனிரெண்டு வயது வரும் மாசம் முடிகிறது, பதிமூன்றில் அவள் கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்று கோமளம் அத்தையிடம் சொல்லி இருக்கிறார்.
இந்த கடிதம் கண்டவுடன் நீ மேற்கொண்டு வரும் வாரம் உன் பாடசாலைக்கு விடுமுறை சொல்லி இங்கு வந்து சேர சொல்லி இருக்கிறார் உன் தாத்தா. மற்றபடி இங்கு அனைவரும் உன்னை விசாரித்தார்கள். அன்புடன் அப்பா, அம்மா.
கடிதத்தை வாசித்து முடித்து விட்டு கோபத்துடன் எறிகிறான். எனக்கு இப்ப எதுக்கு கல்யாணத்துக்கு அவசரம்? இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை தனக்குள் முணு முணுக்கிறான்.
அறைக்குள் நுழைந்த சம்பந்தம் அவன் நண்பன், கடிதம் ஒன்று கீழே கிடப்பதையும், அருகில் இவன் முணு முணுவென்று பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்து விட்டு, என்ன கேசவா கடிதத்தோடவெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டியா?
அட, நீ வேற, அந்த லெட்டரை எடுத்து படிச்சு பாரு, அப்புறம் புரியும்.
உனக்கு வந்த லெட்டர் போலிருக்கே, படிக்கலாமா?
படி, படி, அப்பத்தான என் நிலைமை புரியும், எங்க வீட்டுல எனக்கு எப்படி குழி தோண்டறாங்கன்னு.
இப்படியெல்லாம் பேசலாமா? உன் நல்லதை தவிர மத்தத்தை அவங்க வேற எதையும் யோசிக்காம செய்யமாட்டாங்க.
முதல்லா லெட்டரை படி, அப்புறம் சொல்லு.
இது என்ன அதுக்குள்ள உனக்கு கல்யாணத்துக்கு அவசரம்? இன்னும் படிப்பு முடியாம கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவே?
அதை புரிஞ்சுக்க மாடேங்கறாங்களே இந்த அப்பாவும், தாத்தாவும்.

காட்சி-2

இரயில்வே ஸ்டேஷன்
இங்க பாரு, நல்லபடியா ஊருக்கு போயி உன் அப்பா அம்மாகிட்டே பேசு, இன்னும் வருஷம் போகட்டும், அதுக்குள்ள கல்லூரி முடிச்சுடுவேன், இப்பத்தான் வயசு இருபது நடந்துகிட்டிருக்கு, அப்படீன்னு எடுத்து சொல்லு சம்பந்தம், நண்பனிடம் சமாதானமாய் நாலு வார்த்தை சொல்லிக்கொண்டிருந்தான்.
ம்..ம்..தலையாட்டினானே தவிர பதில் ஒன்றும் சொல்லவில்லை கேசவன்

இரயில்வே ஸ்டேஷன் வாசலிலேயே, இன்னும் விடியாத அந்த இருட்டிலும் அவனை எதிர்பார்த்து மாரியப்பன் நின்று கொண்டிருந்தார். வாங்க தம்பி, ஐயா இந்த ரயிலுல எப்படியும் வந்துடுவீங்கன்னு சொல்லி அனுப்பிச்சாரு, உங்களுக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்.
கூடவே கொண்டு வந்திருந்த பை, பெட்டி இவைகளை வாங்கி தன் தலையிலும், தோளிலும், வைத்து கொண்டவர், வாங்க வடக்க நம்ம மாட்டு வண்டிய நிறுத்தி வச்சிருக்கேன், கேசவனை அழைத்து சென்றார்.
வண்டியில் மாரியப்பன் சல சலவென்று டவுன் வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கையை பற்றி பேசிக்கோண்டு வந்தாலும் இவன் மட்டும் அவ்வப்பொழுது ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அமர்த்திக்கொண்டான்.
அவனுக்கு தாத்தா, அப்பாவின் மேல் கோபம் இருந்ததால் மேற்கொண்டு இவரிடம் பேசவில்லை, இல்லாவிட்டால் மாரியப்பனிடம் சகஜமாய் வாய் அடித்தபடி இருந்திருப்பான்.

காட்சி-3

வாசலில் அம்மா, அத்தை, சித்தி அனைவரும் காத்திருக்க, இவன் மாட்டு வண்டியை விட்டு இறங்கவும் அனைவரும் அவனை சுற்றி நின்றபடி, வா, வா, உனக்குத்தான் காத்துகிட்டிருக்கோம்.
இவனுக்கு சங்கடமாக இருந்தது, இந்த விடியல் குளிரில் தனக்காக காத்த்திருக்கும் இவர்களை பார்த்தவுடன் கோபம் கொஞ்சம் இறங்கி பாசம் தலை தூக்கியது.
அப்பா இவனை வரவேற்று போய் தாத்தா பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு உள்ளே போ, தன் பெற்றோர்களிடம் அழைத்து சென்று ஆசிர்வாதம் வாங்க வைத்தார். பாட்டியும் அவனுக்கு ஆசிர்வாதம் வழங்கினாள்.
குளித்து முடித்து தயாராய் வந்தவுடன் உணவு பதார்த்தாங்கள் தயாராய் இருக்க அதை சாப்பிட்டு முடித்தபின் இரயிலில் வந்த களைப்பில் சற்று நேரம் கண்ணுறங்க அங்கிருந்த அறைக்குள் சென்றான்.

காட்சி-4

தாத்தா அவனை அருகில் உட்காரவைத்து படிப்பு எப்படி இருக்கிறது? அங்கு வசதிகள் எல்லாம் எப்படி? இப்படி கேள்விகள் கேட்டபடி இருந்தார்.
இவன் ஒவ்வொன்றாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். அப்பா அவனருகில் நின்றபடி அவ்வப்பொழுது சுவர் கடிகாரத்தை பார்ப்பதும், பின் தந்தையின் முகத்தை பார்ப்பதுமாக இருந்தார்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சரியாக பத்துமணி அடிக்கவும், கோமளம் அத்தையும், மாமாவும் உள்ளே வந்தார்கள். போய் தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கி பயபக்தியாய் அருகில் அமர்ந்தார்கள்.
தாத்தா தன் கணீர் குரலில் பேச ஆரம்பித்தார். எதிராளியை அவரது குரலே அசர செய்து விடும். வயது எண்பது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒலிக்கும் அவரது குரல்.

கேசவன் கூட அவர் பேசிக்கொண்டிருப்பதை பயபக்தியாய் கேட்டுக்கொண்டிருந்தான்.

காட்சி-5

சென்னை இரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய கேசவன், சுமை தூக்கி ஒருவரை அழைத்து தனது பெட்டி படுக்கை இவைகளை எடுத்து கொண்டு நிலையத்தை விட்டு வெளியே வந்தான்.
வெளியே ரிக்க்ஷாகாரர்கள் அவனை சுற்றி கொண்டார்கள், ஒருவனை மட்டும் அழைத்து அதில் ஏறி உட்கார்ந்து கொண்டான். சுமை தூக்கிக்கு நாலணாவை கையில் கொடுத்தான். அவன் தலையை சொறிந்தான். மேலும் ஒரு அணாவை கொடுத்து நீ போப்பா என்று ரிக்க்ஷாகாரனை போக சொன்னான்.

காட்சி-6

அறை பூட்டியிருக்க, இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் நண்பனுக்கு கடிதம் போட்டிருந்தும் இரயில்வே ஸ்டேஷனுக்கு வரவில்லை, சரி அறையில் தூங்கி இருப்பான் என்று நினைத்து வந்தால் அறையிலும் காணவில்லை.
எல்லா சாமான்களையும் இறக்கி வைத்து விட்டு தன் கையில் இருந்த சாவியை எடுத்து அறையை திறந்து எல்லா பொருட்களையும் கொண்டு போய் வைத்தான். ஒன்பது மணிக்கு கல்லூரிக்கு கிளம்ப வேண்டும், அதற்குள் குளியல் முடித்து தயாராய் கொள்ளலாம் என்று நினைத்து உள்புறமாக சென்றான்.
மாலை அறைக்கு திரும்பும்போதும் நண்பன் சம்பந்தம் வந்திருக்கவில்லை, ஆனால் உள்ளே ஒரு கடிதமும், திருமண மடலும் இருந்தது.
கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தான்.
நண்பா மூன்று நாட்களுக்கு முன் நீ இந்த நாளன்று வருவதாகவும், உனக்கு திருமண பந்தமாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டிருந்ததையும் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தாய், நான் அதை படித்து சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தேன். மாலை வந்த தபாலில் என் தந்தை என்னை அவசரமாக ஊருக்கு வர சொல்லி எழுதி இருந்தார். என்னமோ ஏதோவென்று இரவே கிளம்பி விட்டேன்.
ஊருக்கு வந்தபின் தான் எனக்கு திருமணம் செய்விக்க வரசொல்லி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். உன்னை ஒரு வருசம் கழித்து திருமணம் செய்ய சொன்ன நான், அப்பாவின் வார்த்தையை தட்ட முடியாமல் ஒத்துக்கொண்டேன். இத்துடன் என் திருமண மடலையும் அனுப்பி உள்ளேன்.
உனக்கும் நல்லபடியாக நிச்சய திருவிழா நடந்து முடிந்து நலமுடன் வந்து சேர்ந்திருப்பாய் என நம்புகிறேன். எனக்கு திருமணம் ஆனாலும், இன்னும் ஒரு வருட படிப்புக்காக, மனைவியை ஊரில் விட்டுவிட்டுத்தான் அங்கு வருவேன்.
அன்புடன் நண்பன்.சம்பந்தம்



அட்மிஷன்-கதை சுருக்கம்

அந்த காலகட்டத்தில் சாதி பிரச்சினை அதிகமாக இருந்தது. என்றாலும் இப்போது நாம் அதை சுட்டி காட்டி, ஆறி அமுங்கிய மறைந்து போய்விட்ட புண்ணை கிளறாமல் மேலோட்டமாய் இந்த கதையை சொண்ண்டு செல்வோம்
காட்சி-1
அன்றைய மதராசபட்டணத்தில் புது முக கல்லூரி வகுப்புக்கு படிப்பதற்காக தொலை தூர கிராமத்தில் இருந்து முதன் முதலாய் உள்ளே நுழையும் விஸ்வாசம் பயத்துடன் அங்கிருக்கும் பிரம்மாண்டமான கட்டிடங்களை பார்த்து மிரள்கிறான்.
அவன் தலையில் இருக்கும் குடுமியும், நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கும் நாமமும், வேட்டி சட்டையும் அவனை அந்த சூழ்நிலையில் இருந்து வேறு படுத்தி காட்டி கொண்டிருந்தது.
குழாயும் சட்டையும் அணிந்து உள்ளிருந்து வந்த ஒருவரிடம் பயத்தில் குழறியவாறு ப்ரின்ஸ்பால்..முனங்கினான்.
அவனை ஏற இறங்க பார்த்த அந்த ஆள் சற்று தள்ளி கை காட்டி அங்க உக்காருங்க, சொல்லியபடி தனக்கு ஏதோ அவசரமாய் இருப்பதாக காட்டிக்கொள்ள வெளியே சென்றான்.
“ பிரின்ஸ்பால்” பெயர் பலகையுடன் மூடி இருந்த கதவை மிரட்சியுடன் பார்த்தபடி ஓரமாய் இருந்த பெஞ்சு ஒன்றில் பயபக்தியாய் அமர்ந்தான்.
அதே நேரத்தில் கொஞ்சம் தாட்டியாய் முடிக்கறைகளை அலட்சியமாய் சுருட்டி கட்டிய ஒரு பையனும், அவனுடன் நாற்பது அல்லது நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தகுந்த ஒருவரும் உடன் வர அதே குழாய் போட்ட அந்த ஆள் அவர்களை கடந்து செல்ல முற்பட பையன் கூட வந்தவர் “இந்தாப்பா பிரின்சிபாலி” எங்கப்பா இருப்பாரு?
அவரின் அதட்டலான கேள்வியினால் கொஞ்சம் மிரண்ட குழாய் போட்ட ஆசாமி ஐயா இன்னும் கொஞ்சம் உள்ளே போயி வலது பக்கம் திரும்பினீங்கன்னா அங்க இருக்கு, சொல்லி விட்டு மீண்டும் தன் நடையை தொடர்ந்தான்.
அந்த கால நேரத்தில் அங்கங்கு ஒட்டு போடப்பட்ட, கசங்கிய உடையுடன் ஒரு பையனும், அவனுடன் தண்ணீரே அவன் உடல் கண்டிருக்காதோ என்னும் தோற்றத்தில் கொஞ்சம் பரட்டை முடியுடன் வெறும் வேட்டியை தார்ப்பாய்ச்சியாக கட்டி சட்டை எதுவுமில்லாமல் இருக்கும் ஒருவரும் அந்த கல்லூரி வாசலில் நுழைந்தனர்.
குழாய் போட்ட ஆசாமி அவர்களையும் கடக்க முறபட்டவன் இவர்கள் இருவரின் தோற்றம் பார்த்து முகம் சுழித்து “ஈந்தா யாருய்யா நீ? என்னத்துக்கு இங்க எல்லாம் வர்றே?
இவனின் கேள்வி அவரையும், அந்த சிறுவனையும் மிரட்சிப்படுத்த ஐயா சாமி என் பையனுக்கு இங்கன வர சொல்லி கூப்பிட்டிருக்காங்க, பயத்துடன் குழறினான்.
இவர்கள் இருவரையும் கொஞ்சம் அருவெறுப்புடன் பார்த்தவன் போ போ அதாப்பாரு அதுக்குள்ள போய் திரும்பி ரூமுக்கு முன்னாடி பெஞ்சு போட்டிருப்பாங்க, அதுல போய் உட்காந்துடாதே, பெரிய மனுசங்க பக்கத்துல இருப்பாங்க, போய் தள்ளி கீழே உட்காந்திரு, அலட்சியமாய் சொல்லியபடி காம்பவுண்டை விட்டு வெளியே சென்றான்.

காட்சி-2
“ப்ரின்ஸ்பால்” பெயர் பல்கை கொண்ட கதவு திறக்கப்பட்டு வெளியே வந்த ஒருவர் வெளியே உட்கார்ந்திருப்பவர்களை பார்க்கிறார்.
விஸ்வாசம் வேர்த்திருந்த தன் முகத்தை துடைத்தபடி அவரை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.
சற்று தள்ளி தாட்டியான அந்த பையனும் அவனை அழைத்து வந்தவரும் ஒரே நேரத்தில் கதவை திறந்தவரை பார்த்தனர்.
மூன்றாவதாய் சற்று தள்ளி அந்த கசங்கிய உடை அணிந்த பையனும், அவனுடன் வந்தவரும் கீழ் உட்கார்ந்து பயத்துடன் கதவை திறந்தவரை பார்த்தனர்.

காட்சி-3
ப்ரின்ஸ்பால் வெளையராய் இருந்தார். எதிரில் நின்று கொண்டிருக்கும் விஸ்வாசத்தை பார்த்தவர் அவன் கொண்டு வந்திருந்த பேப்பர்களை எல்லாம் பார்த்து விட்டு மிஸ்டர் பட்டாபிராம், அழைத்தவுடன் உள்ளிருந்து வெளியே வந்த நெற்றியில் நாமம் இட்டவர், ப்ரின்ஸ்பாலை பார்ப்பது போல இருந்தாலும், விஸ்வாசத்தையும் அவனது தோற்றத்தையும் கணித்தவர் போல நின்றார்.
இந்த பையனுக்கு ஹாஸ்டல் எங்கிருக்கு, நம்ம காலேஜ் ரூல்ஸ் என்னன்னு சொல்லி ஆளை ஏற்பாடு பண்ணி அனுப்பி வையுங்க, ஆங்கிலத்தில் சொன்னார்.

அடுத்த ஸ்டூடன்சை கூப்பிடுங்க, கதவருகில் நின்றவரிடம் ஆங்கிலத்தில் சொல்ல, அவர் அந்த தாட்டியான பையனையும், அவனுடன் வந்தவரையும் உள்ளே அனுப்பினார்.
உள்ளே வரும்போதே கூட வந்த மனிதர் கூப்பிய கையும் வாய் நிறைய புன்னகையுமாய் அயா என் பேரு அருணாச்சலம், எனக்கு எங்க ஊர்ல ஏகப்பட்ட நிலம் புலம் இருக்கு, என் பையனை இங்கதான் படிக்க வைக்கனும்னு…இழுக்க
அதை கண்டு கொள்ளாத பின்ஸ்பால் அந்த பையனிடம் இருந்த பேப்பர்களை வாங்கி பார்த்து, பேரு காளையப்பன், ம்..ம்.. மீண்டும் மிஸ்டர் பட்டாபிராமனை அழைத்தார்.
பட்டாபிராமன் இவர்களை அசூயையாய் பார்த்தாலும் கூட வந்தவர் என்ன சாமி, நம்ம பையனை நல்லா கவனிச்சிடும், உம்மை நான் கவனிச்சுக்கறேன், சத்தமாய் பகபகவென சொல்லி சிரிக்க பட்டாபிராமனுக்கு குலை நடுக்கமாயிற்று.
ஓய்..கத்தாதீரும் இவருக்கு இதெல்லாம் புடிக்காது, அமைதியாய் என் கூட வாரும்.. அவர்களை அழைத்து சென்றார்.

அடுத்த ஸ்டூடன்சை கூப்பிடுங்க, அங்கிலத்தில் சொல்ல, முகம் முழுக்க அருவெறுப்பை காட்டியபடி கதவருகில் நின்றவர் வெளியே வந்து “இந்தாயா வா உன்னை கூப்பிடறாங்க”
எங்கே இவர்கள் தன்னை உரசி சென்று விடுவார்களோ என்னும் பயத்தில் சற்று ஓரமாய் போய் நின்று கொண்டார்.
பயந்து நடுங்கியபடி நின்று கொண்டிருந்த இருவரையும் பார்த்த பிரின்ஸ்பால் அவனை நோக்கி கையை நீட்டி அவன் கையில் வைத்திருந்த பேப்பர்களை கேட்டார்.
அவன் எல்லாவற்றையும் கொடுத்தபின் பார்த்து விட்டு பேரு சோமையாசா..!
ம்…ம்.. மிஸ்டர் பட்டாபிராமன்.., அழைக்க வந்து நின்ற பட்டாபிராமன் இவர்களை கண்டவுடன் முகம் சுழித்தார்.
பிரின்ஸ்பால் ஒரு நிமிடம் அவரின் முக சுழிப்பை பார்த்தாலும் கண்டு கொள்ளாதவர் போல் இந்த பையனையும் இவரையும் கூட்டிட்டு போய் நம்ம ஹாஸ்டல் காண்பிச்சு எப்படி இருக்கணும்னு சொல்லிட்டு வாரும்.
பட்டாபிராமனுக்கு உடலும் உள்ளமும் எரிய அவர்களை வேண்டா வெறுப்பாய் கூட்டி சென்று வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் இவர்களை ஒப்படைத்து வேகமாய் திரும்பி வந்தார்.

காட்சி-4

விஸ்வாசம் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பார்த்தான். தரை தளம் முழுவதும் சாணியால் பூசப்பட்டு சுத்தமாய் இருந்தது. பக்கத்தில் இவனைப்போல ஆட்கள் தனித்தனியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைதியாய் உட்கார்ந்து இவர்களை பார்த்து கொண்டிருந்தனர்.
அவர்களை விட்டு விட்டு போகும்போது தம்பி அக்கம் பக்கம் எல்லாம் போகாம இந்த இடத்துக்குள்ளயே புழங்கிக்குங்க சரியா..உங்களுக்கு தண்ணி குடிக்கறதுக்கு, சாப்பிடறதுக்கு எல்லாமே இங்கேயே இருக்கு. வைதீகமா இருக்கும் யாரும் கவலைப்படவேண்டாம்

காளையப்பனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஹாலில் பத்திருபது பேர் அமரவைக்கப்படிருந்தனர்.
அவரவர்கள் அங்கு உட்கார்ந்தபடி காளையப்பனையும், அவ்னுடன் வந்தவரையும் பார்த்தபடி இருந்தனர். இவனது பெட்டியும் ஒரு பக்கம் வைக்கப்பட்டு, அதனருகில் பாயும் தலையணையயும் வைத்து விட்டு வந்தவர்களிடம் சொல்வது போல, சத்தமாய்..
தம்பி சூதானமாய் இருந்துக்கோ, பெட்டியை கொண்டு வந்து வைத்தவனுக்கு கையில் “தம்படி” காசை கொடுத்து வச்சுக்குங்க, அப்படியே நம்ம பையனை கவனிச்சுக்கணும் சரியா?
அவன் என்ன வாங்கி தர சொன்னாலும் வாங்கி கொடுங்கோ

சோமையாசு அங்கிருந்த இருட்டான அறையில் உட்காரவைக்கப்ப்பட்டிருந்தான். அவனது அறைக்குள் நான்கு பேர் இவனைப்போல பயத்துடன் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.
தேவையில்லாம அந்த பக்கம் இருக்கற பசங்க பக்கமோ, இந்த பக்கம் இருக்கற பசங்க பக்கமோ போக கூடாது, தெரியுதா?
உங்களுக்கு இந்தா இங்க வச்சிருக்கற பானையிலதான் தண்ணி எடுத்து குடிக்கணும், இங்க இருக்கற இடத்துலதான் சாப்பிடணும், குளிக்கணும், புரியுதா?
காலேசுக்கு இந்த வழியாத்தான் போகணும், அவங்க போகற பாதையில போய் அவங்களை தொந்தரவு பண்ன கூடாது. தெரியுதா?

அந்த இருட்டறைக்குள் சோமையாசு தான் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் அமர்ந்திருந்தான்.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (13-May-22, 10:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 101

புதிய படைப்புகள்

மேலே