ஏனைத்தலையாயார் தொன்மையுடையார் தொடர்பு - நாலடியார் 216

இன்னிசை வெண்பா

கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கி னனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு. 216

- நட்பாராய்தல், நாலடியார்

பொருளுரை:

நட்பு கொள்கையில் கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்;

மற்ற இடைத்தரமானவர் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்;

உயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு மதிப்புமிக்க பனை மரத்தின் இயல்புபோன்று நேயம் ஊன்றிய போது ஊன்றியதேயாம்.

கருத்து:

மேன்மேல் உதவிகளில்லாத போதும் நட்புக் குறையாதவரிடமே நேயங் கொள்ளுதல் வேண்டும்.

விளக்கம்: நெடுகக் கவனித்தலால் பாக்கு மரமும், இடையிடையே கவனித்தலால் தென்னை மரமும் முதலில் விதையிட்ட அளவோடு பனைமரமும் வளர்ந்து பயன் தருவனவாதலால், அவ்வாறு கவனித்தல் உடைமையால் நேயம் நிலைபெறுவார்க்கு முறையே அவை உவமமாயின.

‘நட்பில்' என்பதை ஏனையோர்க்குங் கொள்க. ஏனைத் தலையாயார் எனத் தொடர்க.

அருமை, ஈண்டு மிகுதிப் பொருளதே,

பனைக்கு விதை ஊன்றியதன்றி இறுதிகாறும் பிறிதேதுஞ் செய்யாமையின், ‘இட்ட ஞான்றிட்டதே' எனப்பட்டது.

நட்புக்குப் பழைமை கருதுதல் சிறந்த இலக்கணமாதலின், தலையாயாரைத் தொன்மையுடையாரென்று மேலும் ஆசிரியர் விதந்து கூறினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-22, 5:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 104

மேலே