செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு – நாலடியார் 218
இன்னிசை வெண்பா
நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈய்க்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு. 218
- நட்பாராய்தல், நாலடியார்
பொருளுரை:
நாய்க்காலின் சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பது போல் மிகநெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவி செய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?
கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்த இயல்பினரது தொடர்பு தொலைவில் உள்ளதாயினும் அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.
கருத்து:
உதவும் இயல்பினரே நட்புச் செய்தற்குரியர்.
விளக்கம்:
நாய்க்காற் சிறுவிரல் இழிவுக்காக வந்த உவமம்.
ஈக்கால், ஈ என்னும் மிகச் சிறிய உயிரினத்தின் கால்; இது சிறுமைக்கு எடுத்துக் காட்டுவதோர் அளவு.
1வாய்க்காலின் இயல்பு. கழனியினிடமிருந்து எஞ்ஞான்றுந் தான் ஓர் உதவி பெறுதலின்றாயினும் உற்ற நேரங்களில் தொலைவிலிருந்து தானே முற்போந்து ஓடி வளம் உதவி அவ்வயல் முழுமையும் விளையச் செய்தல். நண்பரது இருப்பின் சேய்மை அவர் தொடர்பின் மேல் ஏற்றப்பட்டது.