ஞானி செயல் அவரவர்க்கு ஆவன கூறி எவரெவர்க்கும் உப்பாலாய் நிற்ப - நீதிநெறி விளக்கம் 98
நேரிசை வெண்பா
எவரெவர் எத்திறத்தார் அத்திறத்த ராய்நின்(று)
அவரவர்க்(கு) ஆவன கூறி - எவரெவர்க்கும்
உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்
எப்பாலும் நிற்ப(து) என. 98
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
நம்மையாளும் இறைவன் சேர்ந்தும் சேராமலும் எங்கெங்கும் நிறைந்து நிற்பதுபோல் எம்மை ஆளுந்தன்மையுடைய பெரியோர் யாவர்க்கும் புறத்தாராய் யார் யார் எத்தன்மையராய் இருப்பரோ அவரவர் தன்மைக் கேற்பத் தாமும் நின்று அவர்கள் செய்ய வேண்டிய நற்காரியங்களை அவர்க்கெடுத்துச் சொல்லி தாம் யாதிலும் பற்றின்றி நிற்பார்கள்.
விளக்கம்:
திறம் வகை; அவை மந்தம், தீவிரம், தீவிரதரம் போல்வன.
கருத்து:
பற்றற்ற துறவிகள் உலக நடையோடு ஒழுகி உலகத்தாருக்கு நல்வழிகளை அறிவுறுத்தி வந்தாலும் தாம் உலகப்பற்றின்றி நீங்கியே நிற்பர்.