மெய்யுணர்ந்தார் செய்யும் செயல்கள் - நீதிநெறி விளக்கம் 99
நேரிசை வெண்பா
(’ய்’ ’ர்’ இடையின ஆசு; ’யு’ ‘வ’ இடையின எதுகை)
மெய்யுணர்ந்தார் பொய்ம்மேல் புலம்போக்கார்; மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணாய்ப் புலங்காப்பார்; - மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையாய் பழிநாணல் நீள்கதவாய்ச்
சே'ர்'ப்பர் நிறைத்தாழ் செறித்து 99
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
உண்மைப்பொருள்களை உணர்ந்தவர்கள் பொய்ப்பொருள்களின் மேல் தம் புலன்களைச் செலவிடாமல், மெய்யறிவு தமக்குக் கைகூட வேண்டுமென்பதே கருத்தாக ஐம்புலன்களையும் காப்பார்;
அம்மெய்யறிவாளர் ஐம்புலன்களையும் காத்தலே நிலையாகவும், பழிசொற்களுக்கு நாணுதலே நீண்ட கதவுகளாகவுங் கொண்டு நிறையாகிய தாழ்ப்பாளை இறுக்கிப் பொருத்துவர்.
விளக்கம்:
நிறை - மனத்தை அதன் வழியில்விடாது நிறுத்தல்.
மெய்யுணர்ச்சியாவது பின்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் ஐயந்திரிபின்றி அறிதல்:
"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்,
வகைதெரிவான் கட்டேயுலகு"
என்னுந் திருக்குறள் இங்கு ஊன்றிக் கருதற்குரியது.
கருத்து:
உண்மைப்பொருள்களை உணர்ந்த பெரியோர் ஐம்புலன்களையும் அடக்கி மெய்யறிவு உண்டாகும் வழியில் நிற்பர்.