கழுநீருட் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் - நாலடியார் 217

நேரிசை வெண்பா
('ய்’ இடையின ஆசு)

கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய
கு’ய்’த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய் 217

- நட்பாராய்தல், நாலடியார்

பொருளுரை:

கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும் ஒருவன் அன்புடையதாகப் பெற்றால் அஃது அமிழ்தமாய் நன்மை தரும்;

சிறந்த தாளிப்புப் பொருந்தியது வைத்த கறிகளோடு கூடிய வெண்ணிறமான நெல்லரிசி யுணவேயாயினும் அன்பு பொருந்தாதவர் கையிலுள்ளதாய் உண்ணுதல் எட்டிக் காய்போல் வெறுப்புத் தருவதாகும்.

கருத்து:

உள்ளன்போடு உதவுவோரிடமே நட்புச் செய்தல் வேண்டும்.

விளக்கம்:

‘கழுநீர்' என்பது அரிசி கழுவிய நீர். இலைக்கறியில் தாழ்ந்ததொன்றைக் குறித்தற்குக் ‘காரடகு' என்றார். குறிப்பால், முன்னைக்கீரை முதலியன ஈண்டுக் கருதப்படும். துவை, துவையலுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-22, 3:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே