மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு - சிறுபஞ்ச மூலம் 21

நேரிசை வெண்பா

பூவாது காய்க்கும் மரமுள; நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார்; - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்(கு)
உரையாமை செல்லும் உணர்வு 21

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பூக்காமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு, இவை போல, நன்மையை அறிபவர், ஆண்டுகளால் மூவாதவர்களாயினும் அறிவினால் மூத்தவரோடொப்பர், நூல்களைக் கற்று வல்லவர் (அத்தன்மையரே யாவார்);

கெடாதிருக்க பாத்திகட்டி விதைக்காமலே முளைப்பனவாகிய விதையும் உண்டு; இதேபோல, அறிவுடையவனுக்கு பிறர் எடுத்துரைக்காமலே அறிவானது தோன்றி நடக்கும்!

கருத்துரை:

பூவாது காய்க்கும் மரம்போல் ஆண்டுகளால் மூவாதாரும் அறிவினால் மூத்தாராவர்.

நூல்வல்லாரும் அங்ஙனமே பாத்திகட்டி விதைக்காமலே முளைக்கிற விதைபோல பிறர் அறிவிக்காமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்!

பூவாது காய்க்கும் மரங்கள் அத்தி, ஆல், பலா, அரசு முதலின.

ஆண்டால் முதியோரைப் பெருந்தன்மையுடையராயும் இளைஞரைச் சிறுதன்மையுடையராயும் கூறுவது உலக இயற்கையாயினும்,

சில இளைஞர் நன்மையுணர்ச்சி, நூலுணர்ச்சி முதலியவற்றால் அப் பெரியார் தன்மைமையை அடைதலுங் கூடும்.

ஆண்டு மூத்துப் பெருந்தன்மையடையும் முறைமையின்றியே சிலர் இளமையில் அறிவாற் பெருந்தன்மை யடைகின்ற காரணத்தால், பூவாது காய்க்கும் மரங்கள் இவர்க்கு உவமையாயின.

விதையாமை நாறுவ வித்து - பறவை எச்சம் முதலாயினவற்றாலுள்ள வித்து.

மேதை – பேரறிவு; இச் செய்யுள் எடுத்துக்காட்டு உவமை அணி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-22, 3:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே