மனைவி உயர்வு அடைய கணவனின் பங்கு

மனைவி உயர்வு அடைய கணவனின் பங்கு

திருமணம் என்பது ஒருஆண் பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் ஒரு புனிதமான
உறவு.இருவரும் இனி ஒருவருக்கு ஒருவர் துணை என்று எழுதாத ஒரு சம்பந்தம்.பெண்ணும்
ஆணும் தாங்கள் அன்று வரை வாழ்ந்த வாழ்க்கையை மறந்து இருவரும் விட்டு கொடுக்கும்
தன்மையை முன் வைத்து பல விஷயங்களில் ஒருவருக்கு ஒருவர் பணிந்து போவது வாழ்வில்
மகிழ்ச்சியை கொடுக்கும். மணம் முடித்து நெருங்கிய உறவும் வளர்ந்த பின் கணவனும்
மனைவியும் தங்களுக்கும் உலகத்திற்கும் தங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக உள்ளது
என்பதை அறிவிக்க வீட்டில் சகஜமாக பழகியும் அன்பு வார்த்தைகளைப் பேசியும் பார்ப்பவர்களை
கவரும் விதம் நடக்க வேண்டும் என்பது எழுதாத ஒரு ஒப்பந்தம் இதை உணர்ந்து வாழ்க்கையை
வாழ வேண்டும். இவ்வாறு வாழ்க்கை மகிழ்ச்சியாக கழியும் வேளையில் நெருக்கம் அதிகமாகி
குழந்தைகளும் பிறக்கும்.அவைகள் இன்பத்தை கொண்டு வந்து குடும்ப வாழ்க்கையை
ஒளிமயமாக்கும்.
நமது பிள்ளைகளுக்கு ஒழுக்கம் கற்பித்தல் போலவே பொறுமையையும் பொறுப்பையும் சேர்த்து
கற்பித்து அதைப் பழக்கதிற்கு கொண்டு வருவது நமது கடமையாகும். அம்மா, அப்பா, தம்பி,
தங்கை, அக்கா, கணவன், மனைவி போன்றோரின் கோவத்தினை மட்டுமே நினைவில் கொண்டு
அவர்கள் நமக்கு செய்த பல தியாகங்கள், அவர்கள் பட்ட கஷ்டங்கள் , அவர்கள் பட்ட அவமானம்
எல்லாம் எப்பொழுதும் நாம் மறந்துவிடுகிறோம். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை
ஆனால் எதார்த்தமான உண்மை இதுதான்.
மனைவியிடம் மிகுந்த அன்புடைய கணவனிடம் நெருக்கமாக அமர்ந்திருக்கும் வேளையில் அவள்
கேட்டாள் ஏன் என்னிடம் இவ்வளவு கடுமையாக பேசுகிறீர்கள் என் மனது மிகவும்
சங்கடமடைகிறது. உங்களிடம் பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது எங்கே நீங்கள் கோபமாக பேசி
என்னை புண்படுத்துவீர்களோ என எண்ணி பயமாக இருக்கிறது எனக் கூறிட கணவன் அதை
காதில் வாங்காது இருந்தான். என்னை சுதந்திரமாக இருக்க விட்டு நான் கூறுவதை கேட்டு
என்னைப் புரிந்து கொண்டு சத்தம் போடாமல் இருந்தால் நம் வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமாக
இருக்குமே என்ற பொழுது இந்த வார்த்தைகளைக் கேட்ட கணவன் மிக கஷ்டத்துடன் எப்படி
இவளுக்கு நாம் செய்வதை புரியவைப்பது என யோசிக்கலானான். ஒரு நாள் மனைவி தன்
கணவனிடம் வந்து கேட்டாள்.. ஏங்க நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும்
வாங்க.., என வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்.

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் கணவன்
கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க எவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் அதனால்
விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னது எனக் கேட்டார்.

மனைவி உடனே பதில் சொன்னாள் இந்த நூல் தான் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி
வைத்திருக்கிறது எனக் கூறிட அப்படியா என அதைக் கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே
அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி அப்படியும் இப்படியும் பறந்தது. ஆனால் சற்று
நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது. கணவன் கூறினான் இந்த பட்டத்தை தன்
இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லையானால் நேரான வழியில் இந்த பட்டம் பறந்து

உயரங்களை அடைய முடியாது நீ அதைக்கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது அதற்கு
தான் இந்த நூல் உதவியாய் இருக்கிறது.

இதேபோலத்தான் உன் கணவனாகிய நானும் ஒரு நூல்தான் நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய
பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் உதவியுடனும் பாதுகாவலுடனும் உயர
பறக்கலாம். உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் நூல் அறந்த அந்த பட்டம் கிழிந்து காகிதம்
ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.

இப்போது நான் ஏன் உன்னிடம் அவ்வாறு பேசிக் கண்டித்து நடந்து கொள்கிறேன் என்பதை
புரிந்து கொண்டிருப்பாய். நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும் பொழுதே
மனைவி தன்கணவனை கட்டி அணைத்துக் கொண்டாள். அன்பான கணவர் உள்ள மனைவிகளே
உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளமாக இருக்கலாம்.. ஆனால் அவற்றின்
முடிவு பல நேரங்களில் பயங்கரமாக இருக்கலாம்.

எனவே கணவன் கண்டிப்பாக சொல்லும் சில வார்த்தைகளுக்கு நிதானமாக பொறுமையோடு
சிந்தித்து பார்த்து அதன் பொருளை உணர்ந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்வு
உயர பறக்கும் பட்டம் போல் உங்களையும் பார்ப்பவர்களையும் மகிழ செய்யும் என்பது உறுதி.
கணவனின் அன்பும், கண்டிப்பும் பல வேளைகளில் நல்லதற்கு வழி வகுக்கும் என்பதை மனதில்
கொண்டு வாழ்ந்தால் குடும்ப வாழ்வு மிக இனிமையாக அமையும்...

எழுதியவர் : கே என் ராம் (5-Aug-25, 8:33 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 20

மேலே