இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு - நாலடியார் 237

இன்னிசை வெண்பா

முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு 237

- கூடாநட்பு, நாலடியார்

பொருளுரை:

இளங்குரங்கு பயற்றங்காயின் நெற்றைக் கண்டாற் போன்ற தன் விரல்களால் தன் எதிர்வந்த தந்தையின் கையைக் குத்தி விரியச்செய்து அது வைத்திருந்த கனியைப் பறித்துக் கொள்கின்ற மலைகளை உடைய நாடனே! அகங்கலந்த நேயங் கொள்ளாதாரது நட்பு, துன்பமுடையதாகும்!

கருத்து: உள்ளம் ஒன்றுபடாத கூடா நட்பினரோடு நேயங் கொள்ளலாகாது.

விளக்கம்: முற்றல் – செங்காய், சிறுமந்தி - குரங்கின் குட்டி; மந்தி, பெட்டையை உணர்த்தாமற் பொதுவில் நின்றது; தந்தை: பொதுப்பெயர்.

ஞெமிர்தல் புறத்தில் மட்டுங் கலந்து அகங் கலவாத வேறுபாட்டு இயல்பைப் புலப்படுத்தும் பொருட்டு ‘ஒற்றுமை கொள்ளாதார்' என்றார். பரத்தலாதலின் ஈண்டு விரித்தலெனப்பட்டது.1

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-22, 9:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே