திருட்டு குரு குருட்டு சிஷ்யன்

குரு: யாரடா அங்கே, ஏன் இன்னும் எனக்கு வெந்நீர் தயாராகவில்லை?
சிஷ்யன் 1: குருவே, மின்சாரம் இல்லாததால் கொஞ்சம் தாமதம். இன்னும் ஐந்து நிமிடங்களில் தயாராகிவிடும்.
குரு: சம்சாரம் இல்லாமலேயே நான் எவ்வளவு வேலைகளை செய்கிறேன். மின்சாரம் இல்லை என்று இப்படி சாக்கு சொல்லக்கூடாது.
சிஷ்யன் : குருவே , உங்க சம்சாரம் உங்களை விட்டு ஓடிப்போன பிறகு தானே நீங்க சாமியாரா மாறினீங்க.
குரு: இல்லையடா மடையா. உன் சம்சாரம் என்னை விட்டு போனபின்தான் நான் சாமியாராக மாறினேன்.
சிஷ்யன் : என்ன குருவே இப்படி ஒரு குண்டை போடுகிறீர்கள். என் சம்சாரம் என்னிடம் " நீங்கள் என் தங்கையிடம் மிகவும் நெருக்கமாக பழகுவதால் , நான் ஒரு அரசியல்வாதியை காதலிக்க தொடங்கியிருக்கிறேன்" என்று சொன்னபோது அவள் சொன்னதை நான் முழுமையாக நம்பினேன். இப்போது என்னடா என்றால் நீங்கள் இப்படி ஒரு கதையை சொல்கிறீர்கள்.
குரு: அடேய் மண்டு , நான் மூன்று ஆண்டுகள் முன்புகூட ஒரு அரசியல்வாதியாகத்தான் இருந்தேன். ஆனால், கேவலம் ஒரு எம்எல்ஏ சீட்டுகூட கொடுக்காததால், தலைவரிடம் நாலு வார்த்தை நறுக் நறுக் என்று கேட்டுவிட்டு என் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்பு மனம் உடைந்து அதனால் மனம் திருந்தி, பின்னர் இதுபோல சாமியாராகிவிட்டேன்.
சிஷ்யன்: ஆமாம் உங்க சம்சாரம் யார் கூட ஓடினாங்க?
குரு: ஏண்டா அந்த வயித்தெரிச்சல கேக்கற, நான் சேவை செய்துவந்த "சொத்துக்குறி" கட்சியின் அந்த தலைவருடந்தான் ஓடிப்போய்விட்டாள்.
சிஷ்யன்: ஐயோ ஐயோ குருவே, என் மனைவியுடைய தங்கையுடன் ஜாலியாக வாழவேண்டும் என்று முடிவெடுத்தபோது தான் எனக்கு வாழ்க்கையின் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி எந்த தலைவருடன் சென்று வாழ்ந்துவந்தாளோ, அதே தலைவருடன் சேர்ந்து என் மச்சினியும் வாழ போய்விட்டாள். நான்தான் வாழாவெட்டியாகி , உள்ள காசை எல்லாம் உங்க ஆசிரமத்திற்கு எழுதிவிட்டு இப்போ உங்களை நம்பி காலத்தை ஓட்டுகிறேன்.
குரு: அடப்பாவி தலைவனே. உன்னை எல்லாம் சுட்டுத்தள்ளனும்டா. கேட்க ஆளில்லாததால் எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்துகொண்டிருக்கிறாய்.
சிஷ்யன்: குருவே, அப்படி எல்லாம் அந்த அரசியல்வாதியை திட்டாதீர்கள். இப்போது நீங்க மரியாதைக்குரிய சாமியார்.
குரு: ஆமாம் சிஷ்யா. நீ சொல்வதும் சரிதான், சாமியாராகிய பின் அப்புறம் நமக்கு ஏன் இந்த வீண் பேச்சு விவகாரம் எல்லாம்.
சிஷ்யன்: குருவே, வெந்நீர் தயாராகிவிட்டது. நீங்கள் குளிக்கலாம்.
குரு: அட நீ ஒண்ணுப்பா, ஏற்கெனவே வயிறு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதுல வெந்நீர் வேற ஒரு கேடா! நான் பச்சை தண்ணியிலேயே குளிச்சிக்கிறேன். அந்த வெந்நீரை வைத்து ஆஸ்ரமத்தில் உள்ள இரண்டு எருமை மாடுகளை குளிப்பாட்டிவிடு.
சிஷ்யன்: குருவே , நம் ஆசிரமத்தில் இரண்டு பசு மாடுகள் தான் இருக்கிறது. அவைகளை இந்த வெந்நீரால் குளிப்பாட்டிவிடவா?
குரு: அட பரமானந்த சிஷ்யா, நான் எருமை மாடு என்று குறிப்பிட்டது உன்னையும் சேர்த்து என் இரு சிஷ்யர்களைத்தான்.
சிஷ்யன்: மன்னிக்கவேண்டும் குருவே. என்னிடம் உள்ள எல்லா பணத்தையும் வாங்கிக்கொண்டு இப்போது என்னை எருமை மாடு என்று கூறுவது உங்கள் பதவிக்கு ஏற்ற கனிவான சொற்கள் அல்ல.
குரு: அடேய் மாங்காய் மடையா, நீ சரியாகத்தான் சொன்னாய். உன்னிடம் இருந்த சொத்துக்களை என் ஆசிரமத்தின் பேருக்கு எழுதிவிட்டு, இப்போது திருதிருவென்று முழித்துக்கொண்டிருக்கிறாயே, நீ பசு மாடாக இருந்தால் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான வேலையே செய்திருப்பாயா?
சிஷ்யன்: அப்படியாடா குருவே, உனக்கு நல்ல ஆப்பு வைக்கிறேன் பார்.
குரு: டேய் என்னடா, ஒரு குரு என்ற மரியாதை இல்லாமல் என்னை இப்படி அவமானப்படுத்துகிறாய்?
சிஷ்யன்: உன்னோட சம்சாரம் இப்போது உன்னைப்போல ஒரு சாமியாரிணி ஆகிவிட்டாள். என்னை அவள் ஆஸ்ரமத்தில் சேர்த்து கொள்வதாக சொல்லியிருக்கிறாள். நான் இப்போதே கிளம்பி அவளுடைய ஆஸ்ரமம் சென்று, அவளுக்கு வேண்டிய அனைத்து பணி(விடைகளையும்), கேள்விகள் கேட்காமல், செய்து அவளை இரவு பகல் முழுவதும் கலங்காம குலுங்காம சுகமாக வைத்திருப்பேன்.
குரு: அடப்பாவி, மின்சாரம் இல்லை என்று வெந்நீர் போட நேரம் கடத்தி, இப்போது என் மாஜி சம்சாரத்தையே மஸ்கா போடப்பார்க்கிறாயே. இது உனக்கு அடுக்குமா?
சிஷ்யன்: உன்னை நம்பி என்னுடைய சொத்தையெல்லாம் உனக்கு கொடுத்துவிட்டு , இப்போது உன்னால் செருப்படி படுகிறேன். உனக்கு நீதி என்ன நியாயம் என்ன, நீயெல்லாம் சாமியார் இல்லை. போலி சாமி. இனி உன்னுடைய ஆஸ்ரமத்தின் பக்கம் தலைகூட வைக்கமாட்டேன்.
குரு : போடா, போடா, நீயும் உன் அறிவுரையும். நீ போனா இன்னொருத்தன், உன்னையும் என்னையும் போல மனைவியால் துரத்திவிடப்பட்டவன் இல்லாமல் போய்விடுவானா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (22-Jun-22, 11:25 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 114

மேலே