சாமியும் ஆசாமியும்
ஒரு ஊரில் சாமி என்கிற நல்ல மனிதன் வாழ்ந்து வந்தான். திருமணம் ஆகும்வரை சாமி கல்யாணமே செய்துகொள்ளவில்லை, அதாவது, அவன் மூன்று தங்கைகளுக்கு கல்யாணம் முடியும்வரை அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் அப்பா அம்மா, அவர்களிடம் இருந்த பத்து லட்சம் ரூபாயை சாமியிடம் கொடுத்து "சாமி நீதான் நம்ம குடும்பத்தை காப்பாத்தணும், உன்னோட மூணு தங்கச்சிகளுக்கும் கண்ணாலம் கட்டிவைக்கணும். எங்களுக்கு இந்த உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது. நாங்க ரெண்டு பெரும் காசிக்கு சென்று ஓசியில் பொழச்சுக்குவோம். தங்கச்சிங்களுக்கு கண்ணாலம் முடிச்ச கையோட நீயும் கல்யாணம் செஞ்சிக்கினு சந்தோசமா இரு சாமி." என்று சொல்லிவிட்டு ஏசீ ரயிலில் காசி புறப்பட்டு போய்விட்டனர்.
சாமி பல ஆசாமிகளிடம் சென்று அவன் தங்கைகளின் ஜாதகங்களை காட்டினான். ஒரு ஜோசியம் தெரியாத ஒரு நபர், அந்த ஜாதகங்களை பார்த்துவிட்டு, " இந்த ஜாதகங்கள் எல்லாம் வெறும் பொய், பித்தலாட்டம். எனக்கு மூணு மகனுங்க இருக்காங்க. நான் நாளைக்கு உங்க ஊட்டுக்கு என் மூணு பசங்களையும் கூட்டியாரேன் . அவங்க சந்தோஷப்பட்டாங்கன்னா, சட்டுபுட்டுன்னு மூணு ஜோடிகளுக்கு, ஒரே மேடைல கண்ணாலத்தை ஜாம் ஜாம்னு முடிச்சிடுவோம்." என்றார்.சாமி இந்த விஷயத்தை தங்கைகளிடம் சொன்னவுடன் அவர்கள் மூவரும் " சாமி அண்ணா , அந்த பசங்க ஓரளவுக்கு பாக்க நல்லமாதிரியா இருந்தா, அவங்க குடும்பம் கொஞ்சம் டீசெண்டா இருந்தா, நிச்சயம் நாங்க மூணு பெரும் அவங்களை கல்யாணம் செஞ்சிக்கிறோம்."என்றார்கள்.
அடுத்த நாள் அந்த மூன்று பேர்களும் சாமி வீட்டுக்கு வந்தார்கள். வரும்போது கூடவே நிறைய ரவா கேசரியும் பஜ்ஜியும் கொண்டு வந்தார்கள். மூன்று பெண்களையும் மூன்று ஆண்களும் பார்த்தார்கள். உடனேயே சாமியிடம் " எங்களுக்கு உன் தங்கைகளை ரொம்ப பிடிச்சி போச்சு" என்றனர். சாமிக்கு மிகவும் மகிழ்ச்சி. அப்போது பைய்யங்களோட அப்பா " எனக்கும் உன் தங்கச்சிகள் மூவரையும் பிடிச்சிருக்கு" என்றவுடன் , சாமி " சாமி , தப்பாக நினைக்கக்கூடாது. உங்களுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிவிட்டது. உங்க பசங்களுக்கு தான் என் தங்கைகளை திருமணம் செய்து கொடுப்பேன்" என்றதும், அவன் வருங்கால சம்மந்தி "ஏம்பா சாமி நீ இப்படியெல்லாம் பேசலாமா? ஒரு வருங்கால மாமனாராக நான் இவர்களை பிடிச்சிருக்கு என்றேன் , அவ்வளவுதான். என் பொண்டாட்டி , மவராசி, அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே புட்டுக்குன்னு போயிட்டா" என்று சோகமாக சொன்னார்.
சாமியின் தங்கைகள் அந்த ஆண்களிடம் " நீங்க நல்ல சமைப்பீங்களா?" என்று கேட்டவுடன், மூவரும் " நாங்க நல்ல விருந்தே சமைப்போம் ,எங்க வேலையே அதுதானே" என்றார்கள். சாமி கேட்டான் " ஏதாவது நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்க்கிறீர்களா?" என்று கேட்டவுடன் " இல்லை இல்லை, வீட்டில்தான். வரவங்க போறவங்களுக்கு நாங்க தான் சமைத்துப்போடுவோம்" என்றனர். உடனே சாமி "அப்போ உங்களுக்கு உத்தியோகம் எதுவும் இல்லையா? என்று கேட்டபோது அவர்களின் அப்பா " எங்கவீட்டுல ஒரு மெஸ் நடத்துறோம். தினமும் நூறு தூத்துஅம்பது பேரு காலையிலும் இரவிலும் சாப்பிடுவாங்க. மெஸ் எம்பேர்லதான் இருக்கு" என்றதும், சாமி " மெஸ் பேரு என்ன சாமி? " என்று கேட்டான். அவர் சொன்னார் " இருந்தா துண்ணு ". சாமி கேட்டான் " எதை சாப்பிட சொல்லறீங்க? உங்க மெஸ் பேரைத்தானே கேட்டேன்"
அவர் சொன்னார் " என் மெஸ் பேர்தாம்பா " இருந்தா துண்ணு " மெஸ் என்றவுடன் , சாமியும் அவன் தங்கைகளும் மிகவும் ஆறுதலடைந்தனர்.
சாமி கேட்டான் "என் தங்கைகளுக்கு என்ன வேலை தருவீர்கள்?"
வருங்கால சம்பந்தி சொன்னார் "மூவரும் மாத்தி மாத்தி கல்லா பெட்டியில உக்காந்துக்கணும், அவ்வளவுதான்"
சாமி அவன் தங்கைகளிடம் கேட்டான் "இப்போது பூரண சம்மதம் தானே?"
ஒரு தங்கை சொன்னாள் " காலையிலும் மாலையிலும் நாங்கள் சாப்பிட்டபின்தான் மெஸ்ஸில் வரும் வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு போடவேண்டும்"
அப்போது வருங்கால சம்பந்தி சொன்னார் " ஆகட்டும். ஆனால் இன்னொரு சின்ன வேலைய அவங்க செய்யணும்"
சாமி " என்ன சாமி அது?"
வருங்கால சம்பந்தி " அது ஒண்ணும் இல்ல சாமி. என் பசங்களுக்கு, அவங்களா குளிக்க தெரியாது. அதனால, உங்க தங்கச்சிங்கதான் அவங்களை தெனம் குளிப்பாட்டணும்"
சாமி " என்ன சாமி இப்படி ஒரு குண்டை போடறீங்க? என் தங்கச்சி கையெல்லாம் பஞ்சு மாதிரி. அவங்கள போய் இந்த மதமதன்னு இருக்கிற பெரிய உடம்புங்களை தேய்த்தால், அவங்க பிஞ்சு கைகள் புண்ணாகிடுமே?.
அவர் " சரி சாமி , இப்போ அந்த பசங்களையும், பொண்ணுங்களையும் தனியா பேசி இதற்கு ஒரு முடிவு காணாலாம்" என்பதை சாமி ஒப்புக்கொண்டு அந்த ஆறு பேர்களையும் ஒரு தனி அறையில் சென்று இதுகுறித்து கலந்துரையாட சொன்னான்.
அரை மணிநேரம் கழித்து ஆறுபேரும் வெளியே வந்தார்கள். ஆண்களில் பெரியவன் சொன்னான் " நான் வரப்போகும் என் மனைவியை குளிப்பாட்டிவிடுவேன்." பெண்களில் பெரிய பெண் சொன்னாள் " நான் வரப்போகும் என் கணவனை குளிப்பாட்டிவிடுவேன்". மீதியுள்ள நாலு பேர்களும் இதை ஆமோதித்தனர்.
சாமி சுருக்கென்று மின்சாரம் தாக்கப்பட்டதுபோல் " சாமி, நீங்க சொன்னீங்க உங்க பசங்களுக்கு அவங்களாகவே குளிக்க தெரியாதுன்னு. அப்படீன்னா, உங்க பசங்க எப்படி என் தங்கச்சிகளை குளிப்பாட்டுவாங்க?"
அவர் சிரித்தபடி சொன்னார் " ஓண்ணு தெரியுமா சாமி? கரடிக்கு மரத்தின்மீது ஏறத்தான் தெரியும். அதிலிருந்து இறங்க தெரியாது. அதுபோல தான் இதுவும்."
இதைக்கேட்டு அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்தனர். மற்றவர்கள் சிரித்து முடித்தவுடன், கடைசியில் சாமியும் சிரிப்பது போல நடித்தான்.
தங்கைகள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பாதி செலவை "இருந்தா துண்ணு " மெஸ்சின் உரிமையாளர் ஏற்றுக்கொண்டார். மீதி பாதியை சாமி ஏற்று கொண்டான்.
அன்றிலிருந்து சாமி பல பெண்களை கண்டு வந்தான். எல்லா பெண்களும் நன்றாகவே இருந்தார்கள். ஆனால் " திருமணத்திற்கு பின், நான் தான் உங்கள் பெண்ணை குளிப்பாட்டுவேன்" என்று சாமி சொன்னதை எந்த பெண் வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த வருத்தத்தை சம்மந்தியுடன் சாமி சொன்னபோது " அட என்னா சாமி நீங்க இப்படி செய்துடீங்க? உங்களோட பெண்ணை நான் குளிப்பாட்டுறேன் என்று கல்யாணத்திற்கு முன்பே ஏன் சொல்லுறீங்க. கல்யாணம் முடிஞ்சதும் நீங்களாகவே உங்கள் உரிமையை பயன்படுத்தவேண்டியது தானே?.
ஒரு வழியாக சாமிக்கு கல்யாணம் முடிந்தது. ஒருமுறை தங்கைகளின் மாமனார் அவனை சந்தித்தார். " என்ன சம்பந்தி சாமி, எப்படி நடக்குது குளியல் எல்லாம்" . சாமி அப்போதும் வருத்தத்துடன் சொன்னான் " ஒரு தலை ராகம் மாதிரி".