38 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 38
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்

அரிசியில் கல் இருப்பதுபோன்று உலகில் உண்மையும் பொய்யும் கலந்து காணப்படுகிறது. அரிசி, கல் இரண்டையும் அறிவுபூர்வமாக பிரித்து நன்மை போன்ற அரிசியை நம்மிடம் வைத்துக்கொண்டு, கல் போன்ற தீமைகளை உள்ளத்திலிருந்து வெளியே எறிந்து விடுவதைப்போல் நல்லவைகளை மட்டும் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உலகில் உண்மை பொய் இரண்டையும் பரம்பொருள் கலந்தே படைத்துள்ளார். உண்மை பொய் இரண்டையும் பிரித்து அறிவதற்கு அறிவு நமக்கு உள்ளது.

உலகில் ஆத்மா என்பது உண்மை அல்லது சத்தியம். ஆத்மாவுக்கு வெளியே இருப்பது நித்யா. இதனைப் புரிந்து கொள்வதுதான் தத்துவ விவேகம் எனப்படும். நித்யா என்பது உண்மை ஆனால் உண்மையில்லை. இதனை எப்படி நாம் உணர்ந்து கொள்வது என்றால் கானல்நீரைப் பார்ப்பது, வானில் சூரியன் மறைவது, கயிறு பாம்பாகத் தோன்றி மறைவது ஆகும். உலகில் கானல்நீர் என்பது உண்மை. பாலைவனத்தில் இதை உணரலாம். பாலைவனத்தில் நடந்து செல்லும்போது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தண்ணீர் இருப்பது போன்று தோன்றும், தண்ணீர் இருப்பதுபோல் தோன்றிய காட்சி உண்மையானது. அருகில் சென்று பார்த்தால் கானல்நீர் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதனைத்தான் நித்யா என்று ஆன்மிகம் கூறுகிறது

அதேபோல் சூரியன் காலையில் உதிக்கும்போது உலகின் ஒருபகுதி மட்டும் வெளிச்சம் இருக்கிறது. அதே சூரியன் மாலையில் மறைந்து விடுகிறது. உலகத்தின் ஒரு பகுதி அப்போது இருளில் மூழ்கி விடுகிறது. சூரியன் மறைந்தாலும் உலகில் மற்றொரு பகுதியில் வெளிச்சத்துடன் இருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக கேட்டு உணரமுடியும். எனவே சூரியன் தோன்றுவது உண்மை. அது மறைந்தாலும் உலகில் ஏதோ மூலையில் இருப்பது உண்மை எனவே இந்நிகழ்வை நித்தியா என்று ஆன்மிகம் கூறுகிறது.

கயிறு நம்மை அறியாமல் தூரத்தில் இருக்கும்போது பாம்பாக தோன்றுகிறது. நாம் அருகில் சென்று பார்த்தவுடன் அது கயிறு என்று உணர்ந்து தெளிவு கொள்கிறோம். உலகில் பாம்பு என்பது உண்மை. கயிறு என்பது உண்மை. நம் மனதில் பாம்பு என்று ஒன்று தோன்றும்போது மற்றொன்று கயிறு என்பது நம் மனதிலிருந்து மறைந்து விடுகிறது. மனதில் கயிறு என்று தோன்றும்போது பாம்பு என்பது மனதில் மறைந்து விடுகிறது. இதனைத்தான் ஆன்மிகம் நித்யா என்று கூறுகிறது.

உலகில் நாம் துன்பப்படும்போது நமது உள்ளமும் உடலும் வருந்துகிறது. ஆனால் ஆன்மீக வழியில் துன்பங்களைப்பற்றி அறிந்து கொண்டால், மனிதனுக்கு துன்பமும் இன்பமும் உலகில் நிரந்தரம் அல்ல. உலகில் நாம் இன்பங்களை அடைவது எப்படி நிரந்தரம் இல்லையோ அதேபோன்று துன்பமும் நாம் துன்பப்படுவதுவும் நிரந்தரம் அல்ல என்பதை மனிதன் ஆன்மிகம் மூலம் அறிந்து கொள்ளலாம். அவ்வாறு மனிதன் அறிந்து உணரும்போது துன்பங்களிலிருந்து அவன் விடுதலை பெறுகிறான். நாம் மனதளவில் துன்பப்படுவதில்லை.

அதனால் அவன் மனம் எவ்விதத்திலும் பாதிப்பும் அடைவதில்லை. ஞானிகள் உடலளவில் துன்பப்படுவதுபோல் நமது கண்களுக்கு தோன்றும். ஆனால் அவர்கள் மனதளவில் எந்தநிலையிலும் துன்பப்படுவதில்லை. நாமும் அவர்கள்போல் ஆன்மீக வழியில் தியானப்பயிற்சி ஜபம், தவம் போன்றவற்றில் ஈடுபட்டு உயர்ந்தநிலை பெறும்போது உடலளவில் துன்பப்பட்டாலும் மனதில் துன்பப்படுவதில்லை என்பதை நமது மனம் அமைதி அடைவதை ஆன்மீக வழியில் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நாம் ஆன்மீகத்தில் உயர்நிலை அடைவதற்கு தகுந்த ஆன்மீக குருவை நாடவேண்டும். நாம் ஆன்மீகவழியில் முன்னேறுவதற்கு ஆன்மீக குரு கூறும் வழிமுறைகளை அலட்சியம் செய்யாமல், தவறாமல் அவற்றைக் கடைபிடிக்க வேண்டும். ஆன்மீக நூல்களை படிப்பதில் நாட்டம் ஏற்பட வேண்டும். ஆன்மீக நூல்களைப் படிப்பதில் உடல் சோர்வடையலாம். நமது உள்ளம் அதில் சோர்வோ சலிப்போ அடையக்கூடாது. ஆன்மீக நூல்களை ஆழ்ந்து படிப்பதால் உலக சிந்தனைகளை ஓரளவு மறந்து, உயர்ந்த ஆன்மீக சிந்தனைகளில் நமது மனம் சுற்றிக்கொண்டே இருப்பதை உணரலாம்.

இராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாசக்கதைகள் பற்றி அனைவருக்கும் நுட்பமாகத் தெரியாவிட்டாலும் ஓரளவு தெரிந்திருப்போம். பெரும்பாலும் அதன் அடிப்படையான கதைகள் தெரிந்திருக்கும். இந்த இதிகாசக் கதைகளை தெரிந்திருந்தாலும் அதனை மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது. இந்த இதிகாசக் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. அதில் காணப்படும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் இதற்குக் காரணம் ஆகும். பெண்ணாசை ஒரு மனிதனை அழித்து விடும் என்பதை இராமாயணம் காட்டும் நீதியாகும். இராவணன் இசையில் வல்லவன் பக்தி செய்வதில் சிறந்தவனாக இருந்தாலும் அவனது பெண்ணாசை என்னும் குணமே அவனது அழிவுக்குக் காரணமாக அமைந்து விட்டது.

மகாபாரதம் மண்ணாசை உள்ளவன் முடிவில் அழிந்து விடுவான் என்பதற்கு அதில் வரும் துரியோதனன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறான். அவன் கொண்ட மண்ணாசையினால், தம்பிகளுக்கு உரிய சொத்துக்களை அபகரித்ததினால் அவன் அழிய நேரிட்டது. அவன் தம்பிகளான பஞ்சபாண்டவர்வர்களுக்கு ஊசிமுனை அளவுகூட இடம் தரமாட்டேன் என்று மண்ணின் மீது அவன் கொண்ட ஆசையினால் அவன் அழிந்து விடுகிறான் என்று மகாபாரதம் உணர்த்தும் தத்துவம் ஆகும். இருபெரும் தத்துவங்களைக் கூறுவதால் இராமாயாணம் மகாபாரதம் இதிகாசங்கள் என்று அழைக்கப்பட்டு இன்றும் விரும்பி மக்களால் படிக்கப்பட்டு வருகிறது.

நமக்கு சொத்துக்கள் குறித்து சண்டைசச்சரவுகள் ஏற்பட்டு மனதுக்குள் துன்பங்கள் சூழும்போது மகாபாரதம் கூறும் தத்துவங்களைப் பற்றி பொறுமையாகப் படித்தாலே அவன் திருந்தி விடுவான். அதேபோல் பிறர் மனை நோக்குபவன் இராமாயணம் படித்தால் கேட்டால் அவன் பெண்ணாசை என்பதை மனதில்கூட நினைக்க மாட்டான். ஆன்மீக நூல்கள் படித்து அதில் கூறியுள்ள அறிவுரைகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், அவன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணலாம். அவனுக்கு ஆன்மீகத் தெளிவு கிடைக்கும் ஆன்மீகத் தெளிவு கிடைத்தாலே அவனுக்கு மன அமைதி தானாக வந்து விடும்.

கர்வம் என்பது ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடாது. கர்வம் நம்மை விட்டுப் எளிதில் போவதில்லை. மனிதனுக்கு மனபக்குவம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். கர்வம் என்றால் என்ன? என்னை அவன் மதிக்கவில்லை வணங்கவில்லை என்பதும் ஒருவிதத்தில் கர்வம்தான். தான் மற்றவர்களை விட மிகவும் அழகாக இருக்கிறேன் என்று அழகில் கர்வம் கொள்வது. அப்படிப்பட்டவர்கள் ரோஜா மலரை பற்றி நினைத்துப் பாருங்கள்.

ரோஜாமலர் செடியில் இருக்கும் வரைதான் அழகாக இருக்கும். செடியிலிருந்து ரோஜா மலர் உதிர்ந்து விட்டால் அதன் அழகு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. அதுபோல்தான் நம்மிடம் இருக்கும் அழகும் இளமை கடந்து முதுமை அடையும்போது உன்னோட அழகும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். இதனை உணர்ந்துகொள்ளும்போது நாம் அழகைப் பற்றிய வீண்கர்வம் கொள்ள மாட்டோம்.

நான் அதிகம் படித்துள்ளேன் என்று கல்வியில் கர்வத்துடன் இருப்பது கூடாது. கல்வியில் கர்வப்பட்டவர்கள், தன்னைவிட உயர்ந்த கல்வியில் சிறப்புற்றவர்களை கண்டவுடன் அவர்களது கர்வம் அவர்களையும் அறியாமல் தலை குனிந்து விடும். எனவே ‘கற்றது கடுகளவு கல்லாதது உலகளவு’ என்பதை கல்வியில் கர்வப்படும்போதெல்லாம் நினைத்துப் பாருங்கள். நாம் உயர்கல்வி படித்ததில் கர்வம் கொள்வதற்கு மாட்டோம். நற்குணத்தில் கர்வம், கல்வியில் கர்வம், சந்நியாசியின் கர்வம் இவையெல்லாம் எளிதில் போகாது. இவற்றிலெல்லாம் கர்வப்படாமல் இருக்க வேண்டுமெனில் ஆன்மீக வழியில்தான் அவற்றினை நீக்குவதற்கு முடியும்.

எந்த விதத்திலும் மனிதன் கர்வத்துடன் இருக்கக் கூடாது. கர்வத்துடன் இருப்பவனிடம் அமைதி என்பது இருக்காது. இரவும் பகலும் அவன் நம்மை மதிக்கவில்லை வணங்கவில்லை என்று நினைத்து மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருப்பது அவன் தனது மன அமைதியை அவனையும் அறியாமல் இழந்து கொண்டே இருப்பான். கர்வத்துடன் இருப்பது மன அமைதியை அவனையும் அறியாமல் இழந்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் உணர்ந்து கொள்ளவேண்டும். இதிலிருந்து மனிதனுடைய மன அமைதி கெடுவதற்கு அவனது கர்வமும் ஒரு காரணம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில் தீவிர வைராக்கியம் உள்ளவன் அமைதியைத் தவிர உலகில் உள்ள இன்பங்கள் எதையும் விரும்ப மாட்டான். அவன் அமைதிக்கான வழிமுறைகளை ஆன்மீக வழியில் தேடிக்கொண்டே இருப்பான். ஆசை என்பது ஒரு நுண் விதை போன்றது. சிறு விதையில் இருந்து ஆலமரம் வருகிறது. அதேபோன்று உள்ளத்தில் ஆசை என்ற சிறுவிதைகளை ஊன்றினால், கவலைகள் என்ற ஆலமரம் மனதில் உருவாகி விடும். ஆசைகள் அதிகம் இருந்தால் அவன் அறியாமலே கவலைகள் வந்து சூழ்ந்து அமைதியை இழக்க நேரிடும்.

உலக இன்பங்கள் நிரந்தரம் இல்லை என்று சிலர் அறிந்து கொண்டாலும் அதனை விடுவதில்லை. அவர்கள் நிலையானது என்று நினைக்கும் இன்பங்கள் எல்லாம் உலகியல் நிலையில், எலியைப் பிடித்த பாம்பின் நிலைதான். அதை விழுங்கவும் முடிவதில்லை விடவும் முடிவதில்லை. உலக ஆசைகள் நம்மிடம் அகலும் வரை மன அமைதியை நம்மால் அடையமுடியாது என்பதை உணர்ந்து நமது ஆசைகளுக்கு அணை கட்ட வேண்டும். நமது மனம் ஆன்மீக வழியில் சென்றால் அது நமக்கு புதிய எண்ணங்களை அது உருவாக்கிக் கொடுக்கும். மேலும் அது நமது மனம் அமைதி பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும். நமக்கு புரியாது குழப்பமாக இருந்தவற்றை தெளிவாக விஷயங்களைப் நமக்கு புரிந்து கொள்வதற்கு வைத்து விடும். பல புதிய உத்திகளை உணர்வுகளின் மூலம் உருவாக்கி மனதில் அமைதியைக் கொடுத்து விடும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (11-Jul-22, 1:38 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே