திருவதிகை வீரட்டானம் - பாடல் 10
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
பாடல் எண்: 10 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நரம்பெழு கைகள் பிடித்து
..நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
..ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான்
..வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலும்
..உடையார் ஒருவர் தமர்நாம் 10
அஞ்சுவதி யாதொன்று மில்லை
..அஞ்ச வருவது மில்லை.
பொழிப்புரை:
நரம்புகளால் செயற்படும் கைகளைக் கோத்து, பார்வதி நடுங்கும்படியாக, தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்தி, பின் அவன் பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய், வளருகின்ற சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித் தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.
ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.
குறிப்புரை :
நரம்பு எழு கைகள் - `நரம்பு எழுந்துலறிய நிரம்பா மென்றோள்` (புறம் - 278) என்பது போலக் கொண்டு நரம்புகள் எழுந்து தோன்றும் கைகள்.
`பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவன்`, `இடங்கை வீணை ஏந்தி`,
`பண்ணமர் வீணையினான்`, `மிக நல்ல வீணை தடவி`,
`நுண்ணூற் சிந்தை விரட்டும் விரலன்` (பதிற்றுப் பத்து, கடவுள் வாழ்த்து)
`கைய தோர் சிரந்தையன்` (தி.1 ப.61 பா.3) என்பவற்றை உட்கொண்டு, இசை நரம்பு எனலும் பொருந்தும்.
நங்கை - உமா தேவியார். என்கை (எங்கை) தன்கை (தங்கை) நுன்கை (நுங்கை) என்பன போல நன்கை என்பது நங்கையென்றாயிற்று. மண்கை (மங்கை) போல நண்கை (நங்கை)யும் ஆம்.
உரம் - வலிமை. வாய்களும் அலறின. வரங்கள் - பெயர், வாழ்நாள், கோலவாள் முதலியன.