அறிவிலா மாக்களைப் பேணி ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல் - பழமொழி நானூறு 142

நேரிசை வெண்பா

நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மாக்களைப் - பேணி
ஒழுக்கி அவரோ(டு) உடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு. 142

- பழமொழி நானூறு

பொருளுரை:

நாணத்தக்கன வற்றிற்கு நாணாராய், பரிந்து அன்பு கொள்ளாராய், நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை விரும்பி நடத்தி அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல் புழுவினை உள்ளே இட்டுப் புண்ணை மூடி வைத்ததோடு ஒக்கும்.

கருத்து:

தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.

விளக்கம்:

நாணம், அன்பு, நன்மைசெய்தல் இம்மூன்றும் இல்லாதவகள் விலங்குகளுள்ளும் அறிவில்லாதவைகளாகக் கருதப்பட்டார்கள்.

புழு உள்ளேயே யிருந்து தீமை செய்தல் போல இவர்களும் மறைவாக நின்று தீங்கியற்றுவார்கள்.

'புழுப் பெய்து புண் பொதியுமாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jul-22, 8:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே