476 பொட்டணிந் துணர்த்தினாள் போற்றுமெய் அறிவு – கணிகையரியல்பு 3
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
மனைதாலி முதல்வேசைக் கீந்துவேறே ஒன்றுமின்றி
..மயங்கும் வேளை
புனையவேறோ ரணியில்லா திருந்தயில்லாள் கழுத்தினிலோர்
..பொட்டைக் கண்டு
மனமகிழ்வுற் றேதென்றேன் பரத்தையர்போ லெனக்குமருள்
..வாய்க்க வேண்டி
இனமாப்பொட் டணிந்துகொண்டு தாசியாகி யினனென்ன
…இயம்பி னாளே. 3
- கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனைவியின் தாலி முதல் எல்லா அணிகலன்களும் பொதுமகளுக்கு ஈந்து விட்டேன். இனிக் கொடுப்பதற்கு ஏது இல்லையே என்று கலங்கினேன்.
அப்பொழுது மனைவியின் கழுத்தில் பொன்னாலாய பொட்டொன்று கண்டேன். மகிழ்ந்தேன்; ஏதென்றேன். அவள் `பொதுமகளுக்குக் கிடைத்ததுபோல், உமதருள் எனக்கும் கிடைக்கவேண்டும்; அதன்பொருட்டுப் பொட்டணிந்து பொதுமகள் ஆனேன் என்றாள்.
மனை-மனைவி. தாலி-மங்கலநாண்.