பீடிலார் செல்வம் கருதுங் கடப்பாட்ட தன்று - நாலடியார் 261

இன்னிசை வெண்பா

அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று 261

- நன்னெறியில் செல்வம், நாலடியார்

பொருளுரை:

குறையாததாகிப் பல பழங்கள் பழுத்தாலும் பொரிந்த அடிமரத்தையுடைய விளாமரத்தை வௌவால்கள் அணுகமாட்டா;

அதுபோல. மிக அருகிலுள்ளவராயினும் பெருந்தன்மை இல்லாதவரது செல்வம், தக்கோரால், பயன்படுஞ் செல்வமாகக் கருதப்படும் முறைமையுடையதன்று.

கருத்து: பெருந்தன்மை யில்லாதவரது செல்வம் நலம் பயவாது.

விளக்கம்:

அவ்வப்போதும் குறையாததாகி என்றற்கு ‘அருகலதாகி' என்றார். அருகாமை குறையாமைப் பொருட்டாதல், "பருகு வன்னஅருகா நோக்கமொடு" என்பதனாற் காண்க.

மேலே, ஓடும் முள்ளுமிருத்தலின், வௌவாற்குப் பயன்படாவாயின, பெரிதணிமை உவமைக்கும்,. அருகாமையும் பன்மையும் பொருளுக்கும் உரைத்துக் கொள்க.

ஒப்புரவினாலேயே பீடுண்டாதலின்,1 ‘பீடிலார் செல்வம்' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jul-22, 9:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே