கீழ்களை நள்ளார் அறிவுடையார் – நாலடியார் 262

இன்னிசை வெண்பா

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார். 262

- நன்னெறியில் செல்வம், நாலடியார்

பொருளுரை:

அள்ளிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் போல நிறைய அரும்புகளை உடையன ஆயினும் அவை சூடும் மலர்களாக இல்லாததால், கள்ளிச் செடியின் மேல் யாரும் கை நீட்டமாட்டார்.

அதுபோலச் செல்வம் மிக உடையவர்களானாலும் அது நன்மை பயவாமையின் கீழ்மக்களை அறிவுடையார் அணுகமாட்டார்.

கருத்து:

கீழ்மக்களின் செல்வம் அறிஞர்களால் மதிக்கப்படாத, நலம் பயவாச் செல்வமாக ஆகின்றது.

விளக்கம்:

கவர்ச்சியாகவும் மிகுதியாகவும் அரும்பெடுத்திருத்தலின், ‘அள்ளிக்கொள்வன்ன' என்றார்; கீழ்கள், அரிதிற் கிடைத்த செல்வத்தைத் தகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பீடு இலாதார். எடுத்துக்காட்டுவமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jul-22, 9:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே