பூங்காற்றே எனைத் தீண்டு தீந்தமிழ் கேட்கட்டும்

தென்பொதிகை மலைபிறந்து தென்மதுரை நகர் வளர்ந்து
தென்னகத்தை வாழவைக்கும் தமிழே !
புன்னகையின் பூப்பூத்து புதுமைபல கொண்டுவந்து
பார்போற்ற வாழ்கின்ற தமிழே !
என்றென்றும் இளமையுடன் இயற்கைதரும் தேனருந்தி
அமிழ்தமென இனிக்கின்ற தமிழே !
வன்மத்தால் உன்னழகைச் சீரழிக்க முயல்வோரை
வெந்தணலால் பொசுக்கிடுவாய் தமிழே !

கடல்பலவும் நீகடந்து கனிச்சாறு சுவைகலந்து
காலமெல்லாம் வாழுகின்ற தமிழே !
இடர்தந்து உனைஅழிக்க இயன்றதெல்லாம் செய்தாலும்
இமயமென நிமிர்ந்துநிற்கும் தமிழே !
கடல்உன்னைக் கொண்டபோதும் கலங்காமல் கரைகடந்து
கண்டமெல்லாம் வாழுகின்ற தமிழே !
தடைக் கற்கள் வைக்கின்றார் தடம்மாறிச் செல்வதற்கே
தாண்டிநீயும் சென்றிடுவாய் தமிழே !

சீரிளமைத் தனையழித்து செந்தமிழின் தரங்கெடுக்க
மாறிமாறி முயலுகின்றார் தமிழே !
சீறிவரும் வேங்கையென கூர்கெட்டார் செயலொழிக்க
துள்ளிநீயும் எழுந்திடுவாய் தமிழே!
மாறிவரும் மாற்றமதை மனதினிலே கொண்டுநீயும்
மாண்போடு நின்றிடுவாய் தமிழே !
வேற்றுமொழி சொற்களுக்குக் கலைச்சொற்கள் கண்டெடுத்து
காலத்தால் உயர்ந்திடுவாய் தமிழே !

தொன்றுதொட்டு காத்துவந்த பண்பாட்டு நெறிகொண்டு
வான்போற்ற வளர்ந்திடுவாய் தமிழே !
குன்றாத குன்றெனவே குறைகளைந்து நீவாழ்ந்து
குவலயத்தை ஆண்டிடுவாய் தமிழே !
தென்றலென என்றென்றும் தவழ்ந்தெம்மைத் தீண்டுகின்ற
தன்மையிலே இருந்திடுவாய் தமிழே !
ஒன்றுபட்டு தமிழரெல்லாம் ஓரணியில் நிற்பதற்கே
எம்மையென்றும் தீண்டுநீ தீந் தமிழே !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (12-Aug-22, 9:30 pm)
பார்வை : 36

மேலே