கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றாதான் பெற்ற பெருஞ்செல்வம் – நாலடியார் 274
இன்னிசை வெண்பா
கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்(து)
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும். 274
- ஈயாமை, நாலடியார்
பொருளுரை:
தக்கார்க்கு ஈதலையும் தான் துய்த்தலையுந் தெளியாத இடுக்குப் பிடித்த உள்ளமுடையோன் அடைந்த பெருஞ்செல்வமானது, தன் குடியிற் பிறந்து வளர்ந்த அழகுடைய கன்னிப் பெண்களைப் பருவ காலத்திற் பிறர் அடைந்து நுகர்தல் போல, உரிய காலத்தில் அயலவரால் துய்க்கப்படும்.
கருத்து:
ஈயாதார் செல்வம் கடைசியில் ஏதிலரால் நுகரப்படும்.
விளக்கம்:
"வாயினால் பேசல் தேற்றேன்" 1என்புழிப்போல. இடுக்குடையுள்ளம், சுருங்குதலுடைய உள்ளம்; என்றது, இவறன்மையுடைய உள்ளம்; உருவுடையென்றார். இவனுக்குத் துய்க்கும் இயைபின்மையின் அவ்வியைபுடைய பிறர் துய்ப்பரென்றபடி.