வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து அருளும் அவனை நகும் – நாலடியார் 273

நேரிசை வெண்பா
(‘ய்’ இடையின ஆசு)

து’ய்’த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும். 273

- ஈயாமை, நாலடியார்

பொருளுரை:

தான் துய்த்துச் செலவழிக்காமலும், துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும், செல்வத்தை என்ன செய்வதென்று அறியாமல் தொகுத்து வைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதவனை அவன் அவ்வாறு தொகுத்து வைத்த பொருளும் அவன் அறியாமை கண்டு உலகத்தில் அவனை நகையாடும், அவன் அப் பிறவியில் தொகுக்காத அருளும் அவனை நகையாடும்.

கருத்து:

ஈயாத குணமுடையோர்க்குப் பொருட் பயனுமில்லை; அருட்பயனுமில்லை.

விளக்கம்:

கழியான் என்பதற்குக் காலங் கழியான் எனலும் ஆம். உறவோர் முதலியோர்க்கு ஈதல் முன் வந்தமையின், ஈண்டுத் துறவோர்க் கீதல் நுவலப்பட்டது.

ஒரு பயனுமின்றி அவன் பொருண் முயற்சி வீணானமையின், ‘மடவோன்' என்றார். இம்மைப் பயனாகிய பொருட்பயனையும் மறுமைப்பயனாகிய அருட் பயனையும் ஒருங்கிழந்தமையின் இரண்டும் அவனை நகும் என்றார்.

அவனது ஏழைமை புலப்படுத்தும் பொருட்டு நகுமெனப் பட்டது. அவனை என வேண்டாது விதந்தார், அப்பழிக்கு அவனே உரியனாதலி னென்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-22, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே