புலியின் அடியில் மரணத்தின் பிடியில்

நீங்கள் நம்பமுடியாத ஒரு நிகழ்ச்சியை இப்போது சொல்லப்போகிறேன். பயம் உள்ளவர்கள் இதை படிக்கவேண்டாம். இதை படித்து ஒருவேளை பயம் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என்பதை பயமில்லாமல் முன்பே சொல்லிவிடுகிறேன். ஏனெனில் பயம் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை படித்துவிட்டு எங்கே பயந்து போய்விடுவார்களோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.பயம் இல்லாதவர்கள் நிச்சயம் படிக்கவேண்டும். அவசியம் படிக்கவேண்டும். கண்டிப்பாக படிக்கவேண்டும். ஒருவேளை படிக்க மறந்தால் நான் அதற்கு நிச்சயமாக பொறுப்பு அல்ல. மனதில் கொஞ்சம் பயத்துடனேயே இந்த எச்சரிக்கையை உங்களுக்கு விடுக்கிறேன். சரி, இப்போது பயந்து பயந்து சும்மா இருப்பதில் உபயோகம் இல்லை. தயங்காமல் பயமின்றி நடந்த நிகழ்ச்சியை இப்போது விவரிக்கப்போகிறேன்.

பயந்துகொண்டு படிப்பவர்கள் விளக்கை போட்டுக்கொள்ளவும் ( இரவு பகல் எதுவாக இருந்தாலும்). பயமின்றி படிப்பவர்கள் விளக்கை அணைத்துவிடவும்(இரவாக இருந்தால்). இதை படிக்கும் நேரத்தில் பவர் கட் இருந்தால் விளக்கு எரியாது. ஆனால் பாக் அப் ஜெனரேட்டர் இருந்தால் விளக்கு இருக்க வாய்ப்பு உண்டு. சரி, மேலும் உங்களை குழப்பிவிடாமல் இருக்கமுடியாமல் இப்போது மேட்டருக்கு வருகிறேன். ( இப்போது நிச்சயம் உங்களுக்கு கொஞ்சம் நிம்மதி வந்திருக்கும், "அப்பாடி, இந்த பயந்தும் பயப்படாமல் இருக்கும் ஒரு கேஸ், ஒரு வழியாக பயப்படும் நிகழ்ச்சியை சொல்லப்போகிறது என்று, அப்படிதானே?")

ஒரு நாள் நடு இரவு. எங்கும் இருட்டுமயம். அன்னைக்கு என்று பார்த்து அந்த ஏரியாவில் இரவு பதினொன்று முதல் நடுநிசி இரண்டு மணி வரை பவர் கட் செய்திருந்தார்கள் (சத்தியமாக நான் எவருக்கும் பணம் கொடுத்து பவர் கட் செய்யசொல்லவில்லை). சொல்லிவைத்த மாதிரி அன்று அமாவாசை. அமாவாசை இரவு எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். அமாவாசை இரவு கடல் கொந்தளிப்பு இருக்கும், எப்போதும் போல. அந்த நாட்களில் தன்னந்தனியாக நீங்கள் கடற்கரைக்கு செல்லவேண்டும். சுற்றிமுற்றி மொத்தம் பவர் கட் இருக்கவேண்டும். அப்போதுதான் கடல் கொந்தளிப்பதை, பார்த்து, இருதயம் பக் பக் பக் என்று அடிப்பதற்கு பதில் திக்கு திக்கு திக்கு என்று அடிப்பதை என்பதை நீங்கள் தெள்ள தெளிவாக உணரமுடியும். ஆனால் எந்த காரணத்தைக்கொண்டும் உங்களுடன் எவரையும் கூட்டிச்செல்லக்கூடாது, உங்கள் காதலியையும் சேர்த்துதான் (நாங்கள் ஈருடல் ஓருயிர் என்ற சினிமா டயலாக்கெல்லாம் இங்கே வேண்டாம்).

இந்த பயங்கர இருட்டில் நான் எங்கிருந்தேன் என்று உங்களால் யூகிக்க முடியுமா? நிச்சயமாக யூகிக்க மாட்டீர்கள். ஏனெனில் உங்களுக்கு தெரியும் , நான் எங்கே இருக்கிறேன் என்பதை நானே சொல்லிவிடுவேன் என்று. உங்களுடைய இந்த கொடுமையான அறிவை நான் மெச்சுகிறேன். நான் இருந்தது காடு. சாதாரண காடு இல்லை. பொட்டவெளிக்காடு இல்லை. விலங்குகள் வாழும் காடு. சாதாரண நாய் பூனை எலி மாடு மான் பல்லி யானை போன்ற விலங்குகள் அல்ல. இவை நம்மை அவ்வப்போது துரத்தும் ஆனால் லேசில் கடிக்காது. அப்படி என்றால் இப்போது நன்கு புரிந்துகொண்டிருக்கவேண்டும், நான் குறிப்பிடும் காடு எப்படிப்பட்டது என்று.

காண்டா மிருகம், காட்டு ஓநாய், பெரிய ஆந்தைகள் அவற்றுடன் சிறிய கோட்டான்கள், கருப்பு கரடி, அசிங்கமான முகம் கொண்ட சில சிங்கங்கள், சுமாரான முகம் கொண்ட பல சிங்கங்கள், நம் கருத்தை சிறிதுகூட புரிந்துகொள்ளாமல், நம்மை எப்போதும் தாக்க அலைந்துகொண்டிருக்கும் சிறுத்தை வகைகள், பெரியவால், சிறிய வால் கொண்ட பலவகை புலிகள், அதில் உருண்டை கண்கள் , பிரண்டை கண்கள், சதுர கண்கள், சிறுத்த கண்கள், கொடுமைவாய்ந்த கண்கள், பயத்தை கொட்டும் கண்கள், இப்படி பலவகை கண்கள் அங்குள்ள கொடும்புலிகளுக்கு.

மற்ற மிருகங்கள், பசி இருந்தால்தான் துரத்தும், பாயும், பிடித்து கடித்து குதறி கொன்று நம்மை தின்னும். ஆனால் இந்த விவஸ்தை கெட்ட புலிகள், வயிறு நன்றாக கும்மென்று தின்று ஊதியிருந்தாலும், மனிதர்களை பார்த்தால் , அவர்களை முறைத்துப்பார்க்கும். அப்படி முறைத்துமட்டும் பார்த்தால் பரவாயில்லையே (நாமும் தான் எவ்வளவு பேரை முறைத்து பார்க்கிறோம், காதல் கொண்டு, கோபம் கொண்டு , தாபம் கொண்டு). முறைத்த அடுத்த நிமிடம் நம்மை நோக்கி பாய்ந்து வரும், புலி பாய்ந்து வந்து நம்மை ஓடஓட விரட்டும் என்று நான் சொல்வேன் என்றால் நீங்கள் தப்பு கணக்கு போட்டுவிட்டீர்கள். புலி எதிரே இருக்கும் போது, அதுவும் நம்மை நன்றாக பார்த்து முறைக்கும்போது, நம் கைகள் வேண்டுமானால் நடுக்கத்தாளம் போடலாம். நமது கால்கள், பயத்தில் அப்படியே விறைத்துவிடும்போது நாம் எப்படி ஓடமுடியும்? அந்த நேரத்தில் செல்போன் தான் வேலை செய்யுமா, அப்படி செய்தாலும் நாம் அதில் நம் வீட்டிற்கு வழிகாட்ட ஜிபிஎஸ் தான் போடமுடியுமா?

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உள்ள ஒரு நடு இரவில் நான் அந்த காட்டில் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தேன். ‘ஏன், அந்த நேரத்தில் அதுவும் தனியாக நீ நடந்தாய்’ என்று நீங்கள் என்னை நிச்சயமாக கேட்பீர்கள். அதற்கு நான் தரும் ஒரே பதில், எல்லாம் விதிதான். (நாம் ஒவ்வொருவரும் தெரிந்து தானே திருமணம் செய்துகொள்கிறோம்). அந்த அமாவாசை இரவு, நடுஇரவில் , தன்னந்தனியாக ( after all, ஒரு girl friend கூட கூட இல்லாமல்) செல்லவேண்டும் என்று எனக்கு விதி என்ற புத்தகத்தின் இருட்டான ஒரு பக்கத்தில் கிறுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறபோது, அந்த கொடுமையான , மிகவும் பயமான, கேடுகெட்ட விதியை யார்தான் மாற்றமுடியும். அந்த நேரத்தில் எனக்கு மேலும் தொடர்ந்து எப்படி செல்வது என்பது தெரியவில்லை.கொண்டுவந்திருந்த மினரல் தண்ணீர் தீர்ந்துவிட்டது. அமாவாசை இருட்டு, செல்போன் சார்ஜும் மொத்தம் போய்விட்டது.(நாள் முழுவதும் வாட்ஸாப்ப் , யூடியூப் இதனுடன் கொஞ்சம் வீடியோ கேம்ஸ் இப்படி இருந்தால், எப்படி ஐயா சார்ஜ் தொடர்ந்து இருக்கும். ரயில்வே , பேருந்து நிலையங்களில் இருப்பது போல அந்த காட்டில் ஒரு சார்ஜ்ர் பாய்ண்டும் இல்லை).

திடீரென்று பவர் கட் ஆகவில்லை (இந்த மாதிரி காட்டுல காலையிலே கூட பவர் கட் மாதிரிதான் இருக்கும், அப்படி ஒரு இருட்டு), இடி இடிக்கவில்லை, மின்னல் மின்னவில்லை. ஆனால் ஏதோ ஒரு முனகும் சத்தம் கேட்டது. ம்ம்ம்ம்ம் ஹோரஹோர்ர்ர் ம்ம்ம்ம்ஹஹும் ஓஓஓஓஒஹ்ர்ர்ர் இப்படிப்பட்ட நான் வாழ்க்கையில் கேட்டிராத சத்தங்கள். எனக்கு குபீர் என்று வியர்த்தது. பாண்டில் உள்ள கைக்குட்டையை எடுத்து கொஞ்சம் முகத்தை துடைத்துக்கொண்டேன். அதே சமயத்தில் ஏதோ ஒன்று என்னை கடந்துபோவது போல இருந்தது. என் கால்கள் விரைத்துப்போய் நின்றன. அதனுடன் என் மூச்சும் கூட நின்றுவிட்டது போல இருந்தது. என்னை அறியாமல் மெல்ல திரும்பினேன். அப்போது என் கண்கள் பழகிவிட்டதால் இருட்டிலும் கொஞ்சமாக கண் தெரிந்தது. சுமார் இருபது அடி தூரத்தில் ஒரு விலங்கு தென்பட்டது. படபடக்கும் நெஞ்சுடன், சலசலக்கும் மரக்கிளைகளில் ஓசையிலும், மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த உருவத்தை நோக்கினேன். முதலில் புலிபோல் தோன்றி, உடனே ஓநாய் போல மாறி சட்டென ஒரு நாய்போல எனக்கு அது தெரிந்தது. கர்ர்ர் காரர் உர்ர்ர் உர்ர்ர்ர் ம்ம்ம்ம் ஹ்ஹஹம் ஹ்ஹ்ஹ்ஹஹம் போன்ற ஓசைகள் அங்கிருந்துதான் வருகிறது என்பதை உணர்ந்தேன். மனம் டகா டகா டகா டிக் டிக் டிக் டிக் என படபடவென்று 100கிமீ வேகத்தில் அடித்துக்கொண்டது. மூச்சு இருக்கிறதா எனக்கு என்று சந்தேகம் கொண்டு அந்த பயத்திலும் என் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டு பார்த்தேன். இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்று ஊர்ஜிதம் செய்துகொண்டேன்.
இப்போது நான் பார்த்த அந்த உருவம் அந்த இருட்டில் என்னை நோக்கி மெல்ல மெல்ல வருவதை உணர முடிந்தது. கைகளுக்குள்ளும் கால்களிலும் ஏதேதோ புதிய புதிய மின்சாரங்கள் பாய்வது போல் இருந்தது. நடை தள்ளாடியது. நான் அதே இடத்தில் நிற்கிறேனா அல்லது பின்னோக்கி நடக்கிறேனா என்பது கூட தெரியவில்லை. இப்போது அந்த உருவம் என் மிக அருகில் வந்துவிட்டது. அடுத்த நொடியில் பார்க்கும்போது கண்களில் கொடூரம் நிறைந்த புலி என் எதிரில் நின்றது. நான் உறைந்து போய் அதன் கண்களை பார்த்தேன். அதுவும் என்னை உற்று முறைத்து பார்த்தது. எனக்கும் அதற்கும் மூன்று அடிகூட இருக்காது. ஒரு வினாடி கண்களை மூடி "கடவுளே என் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்று" என்று அந்த மிரட்சியிலும் கடவுளிடம் விண்ணப்பித்தேன். கண்ணை திறந்து பார்க்கையில் என்னால் நம்ப முடியவில்லை. அங்கு இருந்தது ஒரு சாதாரண நாய்தான். அது என்னை பார்த்து வாலாட்டியமாதிரி இருந்தது. நான் மனதில் நினைத்துக்கொண்டேன் "அப்பாடி, கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார். நான் தான் நாயை ஒரு புலி என்று பிரமை செய்துகொண்டு பிரமித்துக்கொண்டுவிட்டேன். உள்ளூர அவ்வளவு பயம் இருந்தாலும், மெதுவாக அதனை தொட்டு தடவி கொடுக்க கையை அதன் மேல் கைவைக்க போகும் சமயத்தில், அதன் முகத்தை கவனித்தேன். ஆஆஆ .ஊஊஊ..ஆஆஆ...அய்யோஓ..அய்யோஓஒ. கோரமான புலி என் உடம்பை முகர்வதை கவனித்தேன். நான் நானாக இல்லை. என்னை மோப்பம் பார்த்து முகர்ந்து என்னை சுற்றி வர ஆரம்பித்தது அந்த புலி. அது என் வயிற்றில் புளியை கரைத்தது என்பதை நீங்கள் நிச்சயம் நம்பமாட்டீர்கள். ஏனெனில் உண்மை என்னவெனில் அந்த புலி என் வயிற்றில் மட்டும் இல்லை என் உடம்பு முழுவதும் புலியை நிறைத்தது. "நான் இறக்கும் நேரம் வந்துவிட்டது. அய்யோ, இப்படியாக சாவதற்கா நான் பிறந்தேன், நான் செய்த புண்ணிய காரியங்கள் என் கெட்ட காரியங்களை விட அதிகம் என்று நினைத்தேனே, அப்படி இல்லையா, என்று அந்த நொடிப்பொழுதிலும் மனது அடித்துக்கொண்டது. இந்த கடவுளும் என்னை ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாரே, என்னை இப்போது இந்த புலி குதறுவதை நான் எப்படி தாங்கப்போகிறேன், நான் இப்படியே காற்றில் கரைந்துவிடமாட்டேனா என்று நினைத்து பயமும் பீதியும் கொண்டு வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் துடிக்கையில் அந்த புலி என்னை அதன் தலையால் கீழே தள்ளியது.
கடவுளே கடவுளே கடவுளே என்று நான் சத்தமிட எவ்வளவோ முயற்சிசெய்தும் நாவிலிருந்து காற்றுகூட வெளிவரவில்லை. அப்போது நான் வேண்டியது ஒன்றேயொன்றுதான் "தெய்வமே, இது என்னை கடித்து குதறும்போது எனக்கு வலி தெரியாமல் வேதனை இல்லாமல் மட்டும் இருக்க உன்னை சரணடைந்து பிரார்த்தனை செய்கிறேன்" என்று மரணத்தின் விளிம்பில் இருந்த நான் மனதில் கதறியபோதுதான் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆமாம், நிச்சயமாக அது வெகு அற்புதமான நிகழ்வுதான். அந்த ஒரு நிகழ்வதால்தான் நான் இந்த கட்டுரையை கட்டுக்கோப்பாக எழுத்தமுடிகிறது.

“என்னங்க என்னங்க புலி எதுவும் இல்லை, பூனை கூட இங்கு இல்லை. ஏதேனும் கனவு கண்டு பயந்து போய்விட்டர்கள் என்று என் மனைவி பலமுறை சொல்லி என்னை உலுக்கி உலுக்கி எழுப்பவும், நான் கண்ணை திறந்து "ஆஆஆ வலிக்காமல் கடி, ஆஆஆ வலிக்காமல் குதறு . ஆஆ ஆஆஆ ஆஆ" என்று ஊளையிடுவதை நானே என் காதுகளில் கேட்டு, அடித்துபிடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

அதற்குப்பிறகுதான் உங்களுக்கு தெரியும். என் மனைவி குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தாள். பிறகு சூடாக கொஞ்சம் ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தாள். நான் "எந்த பாலில் போட்டாய் , புலி பாலிலா, ஆவின் பாலிலா" என்று கேட்டபோது அவள் தூக்க கலகத்திலும் சிரித்தவாறு கூறினாள் "அபூர்வ சகோதரர்கள்" படத்தை பற்றி செய்தி ஒன்றை நீங்கள் படித்துவிட்டு இரவில் படுக்கும் முன்பு எனக்கும் அதைப்பற்றி சொல்லிவிட்டு தான் படுத்து கொண்டீர்கள். காமெடி நாகேஷுக்கு ஏன் இந்த ட்ராஜெடி என்று சொல்லிக்கொண்டே கண்ணை மூடினீர்கள். எல்லாம் அதன் விளைவுதான்".
அப்போது எனக்கு வயிற்றில் ஆவின் பாலை வார்த்தது போல் இருந்தது .

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Aug-22, 8:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 66

மேலே