உனதானேன் என்னுயிரே
உனதானேன் என்னுயிரே !
—
சிற்றூரில் பிறந்தவனைச்
சிறந்தவனாய் மாற்றிடவே
கற்றுத்தர வேண்டுவனக்
கற்பித்தார் தந்தையுமே !
நெளிவுகளைச் சுளிவுகளை
நேர்த்தியாக உணர்த்தியே
தெளிவாக்கி உலகினிலே
உயர்த்தியவள் அன்னையே !
தட்டுகெட்டுப் போகாமல்
தடுத்தாண்ட நட்புகளே
ஒட்டிவாழும் உன்னதமாய்
உடன்பிறந்த சொந்தங்களே !
இத்தனைக்கும் மத்தியிலே
இமைப்பொழுதில் தோன்றினாயே
மொத்தமாக இதயத்திலே
மோதியென்னைத் தாக்கினாயே !
அன்புயென்னும் ஆயுதத்தால்
அடியேனை வீழ்த்தினாயே
அன்றுமுதல் மீள்வதற்கு
ஆர்வமின்றி வாழ்கிறேனே !
தேனோடு பால்கலந்து
தெவிட்டாது இனிப்பதுபோல்
ஊனோடும் உளமோடும்
உனதானேன் என்னுயிரே !
-யாதுமறியான்.