பிறிதின் உயிர்செகுத்து ஊன்றுய்த்து ஒழுகுதல் - பழமொழி நானூறு 164

நேரிசை வெண்பா

செறலிற் கொலைபுரிந்து சேணுவப்பா ராகி
அறிவின் அருள்புரிந்து செல்லார் - பிறிதின்
உயிர்செகுத் தூன்றுய்த் தொழுகுதல் ஓம்பார்
தயிர்சிதைத்து மற்றொன்(று) அடல். 164

பழமொழி நானூறு

பொருளுரை:

பிற உயிர்களுக்கு அறிவினால் அருள்செய்து மறுமை இன்பத்தை அடையாராகி, அறிவின் மயக்கத்தால் உயிர்களைக் கொலைசெய்து மறுமை இன்பத்தை அடையப் போவதாக மனம் உவப்பு உடையராகி, (ஊன் கொண்டு வேட்டால் மறுமை யடைதல் உறுதியென்று) அதன் பொருட்டுப் பிறிதொன்றனது இனிய உயிரை நீக்கி புலாலை மனம் பொருந்தி உண்டு ஒழுகுதல் உடலைப் பாதுகாவாதார் சுவை கருதித் தயிரினை அழித்து மற்றோர் உணவாக மாற்றிச் சமைத்தலோடு ஒக்கும்.

கருத்து:

வேள்வியென்றும் கொலை புரிதல் தீதாம்.

விளக்கம்:

'அறிவின் அருள் புரிந்து' என்றமையானும், செறல் அறிவின் மாறுபாடாகலானும். செறலின் என்பதற்கு அறிவின் மயக்கத்தால் என்று பொருள் கூறப்பட்டது.

அச்செயலால் அவர் மறுமை இன்பம் அடைதல் இல்லை யென்பார், 'சேண்' என்றார்.

அச்செயலால் வேள்வி செய்வார் அவர் தம்மனைவியையும் மக்களையும் கொன்று வேள்வி செய்வதைக் கண்டிலமென்பார், 'பிறிது' என்று அஃறிணையைக் கூறினார்.

உடல் ஓம்பாராகிச் சுவை யொன்றனையே ஓம்புவார், தயிரை மற்றொன்றாகச் சமைத்தல் போல, ஊன் துய்த்தலையே கருதுவார் மறுமை என்றும், வேள்வி என்றும் மாற்றி மறைந்தொழுகுவர்.

உடல் ஓம்பார் என்றது தயிரை மற்றொன்றாகச் செய்யின், அதனது வலிவு குறைதல் பற்றி.

'தயிர் சிதைத்து மற்றொன்று அடல்' என்பது பழமொழி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-22, 10:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே